சென்னை மத்திய சிறையில் 1999ம் ஆண்டு நடந்த பயங்கர கலவரத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது படம். குத்துச் சண்டை வீரரும் பிரபல தாதாவுமான சிகா சிறையில் தனது ஆதரவாளர்களுடன் செல்வாக்குடன் வலம் வருகிறார். இன்னொரு குழுவினர் சிறைக்குள் போதை மருத்து விற்கும் வேலையை செய்கிறது. இதனால் அவ்வப்போது இரு தரப்புக்கும் மோதல் நடக்கிறது. ஆனால் தனது ஆதரவாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு வருகிறார் பார்த்திபன். அது சிகா ஆட்கள் செய்த கொலை என்று நினைக்கிறார். சிகாவை நேரில் சந்திக்க நினைக்கிறார். சிறைக்கு திகார் சிறையிலிருந்து புதிய எஸ்.பி. வருகிறார். சிகாவுக்கும் அவருக்கும் மோதல் ஆரம்பிக்கிறது. இதனால் சிகாவை எப்படியாவது கட்டுப்படுத்தி வைக்க நினைக்கிறார். ஒரு நாள் சிகா வயிற்று வலியால் துடித்து இறந்து போகிறார். இதனால் சிறைக்குள் கலவரம் பரவுகிறது. இதில் பலர் இறந்து போகிறார்கள். சிகாவை கொன்றது யார் கலவரத்தை எப்படி அடக்குகிறார்கள் என்பதை பதட்டத்துடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சித்தார்த்.
சிகாவாக செல்வராகவன் மிரட்டலாக நடித்திருக்கிறார். அந்தப்பார்வை, கோபம், இரக்கம் என்று பல முகத்தைக் காட்டியிருக்கிறார். பார்த்திபனாக ஆர்.ஜே.பாலாஜி அப்பாவித்தனத்தை முகத்தில் காட்டி நடித்திருந்தாலும் அந்த பாத்திரத்தில் நம்மால் ஒன்ற முடியவில்லை. சிறையை விட்டு எப்படியாவது வெளியே போக வேண்டும் என்கிற தவிப்பும், பயமும் கலந்து கட்டி நடித்திருக்கிறார்.
எஸ்.பியாக ஷராபுதின் என்பவர் வருகிறார். கொஞ்சமும் பொருந்தாத நடிப்பு. கதையின் முக்கிய பாத்திரத்தை ஏனோதானோ என்று இயக்குனர் கையாண்டிருப்பது படத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது. விசாரணை அதிகாரியாக வரும் நட்டி நடராஜ் நல்ல தேர்வு. இயல்பாக பேசி நடித்திருப்பது சிறப்பு. காவல் அதிகாரியாக வரும் கருணாஸ் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். நட்டியிடம் அவர் என்ன நடந்தது என்பதை விளக்கும் விதம் கதைக்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. கதையும் திரைக்கதையும் சின்னச்சின்ன திருப்பங்களும் எதிர்பாராத நகர்வும் படத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. ஆனால் முதல் பாதி முழுக்க கதை யார் செல்வது என்பதில் பல குழப்பம். இரண்டாம்பாதியில் கலவரக் காட்சியும், பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஷோபா சக்தி, பாலாஜி சக்திவேல் என்று கதைக்கு வலுவூட்டும் பாதிரங்கள். பிரின்ஸ் ஆன்டர்சன் ஒளிப்பதிவும், கிறிஸ்டோ சேவியர் இசையும் படத்தை தூக்கி நிறுத்துகிறது.