மலையாளத்தில் அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராகவும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்த எம்.டி. வாசுதேவன் நாயர் (வயது 91) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1933-ம் ஆண்டு பிறந்தவர் வாசுதேவன் நாயர். அவரது குடும்பத்தில் வாசிப்பு என்பது ஊக்குவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தீவிர வாசிப்பாளராக இருந்தார். மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார். பல்வேறு இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாகின. “என் வயதையொத்த சிறுவர்களை போன்று, எனக்கு விளையாட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. நான் தனிமையில் விளையாடும் ஒரே விளையாட்டு ‘எழுதுவதுதான்’,” என ‘அவுட்லுக்’ இதழுக்கு அளித்த பேட்டியில் வாசுதேவன் நாயர் தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் வேதியியல் படித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார். பின்னர் அவர், மலையாள வாசகர்களிடையே புகழ்பெற்ற ‘மாத்ருபூமி’ வார இதழில் பணிக்கு சேர்ந்தார். விரைவிலேயே, பல நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, செய்தித்தாள்களில் கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள் மற்றும் பயணக் கட்டுரைகள் என, எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். பத்திரிகை ஆசிரியராக பல இளம் எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டதற்காக வாசுதேவன் நாயர் இன்று அதிகம் பாராட்டப்படுகிறார். அந்த இளம் எழுத்தாளர்கள் பலர் தற்போது பிரபலமானவர்களாக உள்ளனர்.
வாசுதேவன் நாயரின் ‘நாலுகெட்டு’ எனும் நாவல், கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவருவது குறித்துப் பேசுகிறது. இந்த நாவலுக்கு 1959-ம் ஆண்டுக்கான கேரளாவின் உயர் இலக்கிய விருது கிடைத்தது. பத்தாண்டுகள் கழித்து, இந்த புத்தகத்தைத் தழுவி, அரசாங்கத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக படமாக எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
இந்து புராணமான மகாபாரதத்தை பீமன் கதாபாத்திரத்தின் வாயிலாக கூறிய ‘ரந்தமூழம்’ எனும் நாவல், இந்திய இலக்கியத்தில் மிக உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது.
இலக்கியத்தைத் தாண்டி மலையாள சினிமாவில் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் புகழ்பெற்று, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார். கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட ‘ஒரு வடக்கன் வீரகதா’ திரைப்படத்தில், பிரபலமான நாட்டுப்புறக் கதையில் வில்லத்தனம் மற்றும் கௌரவம் ஆகியவை குறித்த பொதுவான கருத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பார். மிக வலுவான வசனங்கள் மற்றும் நடிப்புகளுடன் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த படமாக இது கருதப்படுகிறது.
சமீபத்தில் அவருடைய சிறுகதைகளை தழுவி, ‘மனோரதங்கள்’ என்ற பெயரில் திரை-தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன் லால், ஃபஹத் ஃபாசில் போன்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த தொடரில் நடித்த மோகன்லால், நாயரை ‘கேரளாவின் பெருமை’ என்று அழைத்துள்ளார்.
“நீங்கள் எந்த ஒரு படத்திலும் அதன் வசனத்தை மாற்ற இயலும். ஆனால், எம்.டி.நாயரின் படத்தில் வரும் வசனங்களை மாற்ற இயலாது. ஏனெனில், கதையை புரிந்துகொள்வதற்கு அவரின் வசனங்கள் மிக முக்கியம்,” என்கிறார் மோகன்லால்.
நேர்காணல்களில் வாசுதேவன் நாயர் பேசும் போது, அடிக்கடி அவர் படிக்கும் புத்தகங்கள் பற்றி பேசுவார். கடந்த ஆண்டு அவர் தன்னுடைய 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் படி எழுதிய கட்டுரையில், மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரேயம்ஸ் குமார், “வாசுதேவன் நாயர் எப்போதும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிப்பார்”, என்று குறிப்பிட்டிருந்தார். “நான் உட்பட வருங்கால சந்ததியினர் நாயரிடம் இருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பேன். அது நிச்சயமாக அவருடைய கவனம் சிதறாமல் இருக்கும் போக்கு தான். அவரை நான் பார்க்கும் போது, புத்தகங்களுடனே காணப்படுவார். அதில் மொத்தமாக மூழ்கி, கிட்டத்தட்ட ஒரு தவம் மேற்கொள்வது போல் புத்தகங்கள் படிப்பார். மார்குய்ஸ் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றுமின்றி, சமீப காலங்களில் வெளியான புத்தகங்களும் அவருடைய மேசையில் எப்போதும் இருக்கும்,” என்று எழுதினார் ஸ்ரேயம்ஸ் குமார்.
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரையில், “எம்.டி.வாசுதேவன் நாயர் மலையாள இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவர். தகழியும் பஷீரும் சென்றபின் உருவான தலைமுறை. அவர்களுடன் இணைந்து வளர்ந்தவர். மலையாள இலக்கியத்தில் ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர்’ என எம்.டி.வி. கருதப்படுகிறார். எம்.டியின் நாவல்கள், சிறுகதைகள் மட்டுமல்ல கட்டுரைகளும்கூட முக்கியமானவை. சுவாரசியமாக வாசிக்க முடியாத ஒரு வரிகூட அவர் எழுதியதில்லை.
மலையாளத் திரைப்படத்தில் இடைநிலைப் படம் என்பது ஒருவகையில் எம்.டி.வாசுதேவன் நாயரின் தனிப்பட்ட உருவாக்கம் என்றே சொல்லிவிடலாம். எண்ணிக்கையிலும் தரத்திலும் மட்டுமல்ல வணிகவெற்றியிலும் அவை சாதனைகள். அவருடைய ‘நிர்மால்யம்’ மலையாளக் கலைப்படங்களின் உச்சங்களில் ஒன்று. ஆனால், ஒருபோதும் சினிமா சார்ந்து எந்தப் புகழ்மொழிகளையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை.
எம்.டி எந்த ஒரு படைப்பாளியும் முன்னுதாரண வடிவமாகக் கொள்ளத்தக்கவர். நீண்டகாலம் மாத்ருபூமி வார இதழின் ஆசிரியராக இருந்த எம்.டி. அடுத்தடுத்த மூன்று தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு வளர்த்தெடுத்தவர். ஓ.வி.விஜயன், சக்கரியா முதல் இன்றைய இளையபடைப்பாளிகள் வரை பலர் அவரால் கண்டடையப்பட்டவர்களே.
முதுமையிலும் கூட எம்.டி புதிய இலக்கியங்களை வாசித்துக் கொண்டிருந்தார். புதியதாக எழுதவரும் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார். ஒருபோதும் காலத்தால் பின்னகர்ந்தவராகத் திகழவில்லை.
எம்.டி மாபெரும் அமைப்பாளர். கேரள இலக்கியத்தின் தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சன் பேரில் துஞ்சன் பறம்பு என்னும் பண்பாட்டு – இலக்கிய அமைப்பை தன் பணத்தாலும், பின்னர் நன்கொடைகளாலும் மாபெரும் நிறுவனமாக உருவாக்கி நிலைநிறுத்தினார். அங்கே இலக்கிய விழாக்களை நடத்தினார்.
எம்.டி போல இலக்கியத்திலும் வாழ்விலும் வெற்றிபெற்ற இன்னொருவர் மலையாளத்தில் இல்லை. ஞானபீடம் உட்பட எல்லா விருதுகளும் வந்துள்ளன. சினிமாவால் மட்டுமல்ல நூல்களின் விற்பனையின் வருமானத்தாலும் அவர் செல்வந்தராகத் திகழ்ந்தார். எழுபதாண்டுகளாக மலையாளிகளின் நான்கு தலைமுறையினர் மிக அதிகமாக வாசித்த படைப்பாளி அவரே.
ஆகவே எப்போதும் எளிய பொறாமைகளுக்கு ஆளாகி வசைபாடப்பட்டும் வந்தார். எம்.டி.தன் நீண்ட ஆயுளில் ஒருமுறைகூட அவற்றை பொருட்படுத்தி ஏதும் சொன்னதில்லை. அவற்றை அவர் அறிந்திருந்தாரா என்றுகூட நாம் அறியமுடியாது.
மலையாள எழுத்தாளர் என்னும் ஆளுமையின் வெளிப்பாடு எம்.டி. எந்த அரசியல்வாதி முன்னரும், எந்த அதிகாரபீடம் முன்பிலும் அவர் ஒரு கணமும் வணங்கியதில்லை. அவர்கள் தன்னை வணங்கவேண்டும் என எண்ணுபவராகவே நீடித்தார்.
எம்டியின் ‘ஆணவம்’ புகழ்பெற்றது. சென்ற ஆண்டு அவருடைய 90 ஆவது ஆண்டுவிழாவை கேரள அரசு ஒரு மாநிலவிழாவாகவே கொண்டாடியது. பள்ளிகள் தோறும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால், அவ்விழாவிலேயே முதல்வரின் ஆடம்பரத்தை வெளிப்படையாகக் கண்டிக்க அவர் தயங்கவில்லை. ஆனால், அதே எம்.டி மூத்த படைப்பாளிகள், கதகளி கலைஞர்களின் கால்தொட்டு வணங்கும் பணிவுகொண்டவராகவும் நீடித்தார்.
1992ல் எனக்கு ஜகன்மித்யை கதைக்காக கதா விருது கிடைத்தபோது மலையாளத்தில் கொச்சு கொச்சு பூகம்பங்கள் என்னும் கதைக்காக எம்.டி. விருதுபெற்றார். டெல்லியில் நான் அவரைச் சந்தித்தேன். அன்றுமுதல் தொடர்ச்சியாக பழக்கமிருந்தது. இறுதியாக அவருடைய பிறந்தநாள் விழா துஞ்சன்பறம்பில் நிகழ்ந்தபோது நான் ஒரு பேச்சாளன். அப்போது நாங்கள் முதலில் சந்தித்த நாளைப் பற்றி துல்லியமாக நினைவுகூர்ந்தார்.
நான் எண்ணிப்பார்க்கிறேன். அவருடைய ஆளுமையில் ஒரு குறைபாடு, ஒரு சிறு பிழை என எதையாவது கண்டிருக்கிறேனா என. சிறுமைகள், காழ்ப்புகள், பகைமைகள்? இல்லை. எழுத்தாளனுக்குரிய நிமிர்வு மட்டுமே கொண்டு ஒவ்வொரு கணமும் வாழ்ந்தவர், வெற்றிகளையும் சாதனைகளையும் மிக இயல்பாக நிகழ்த்தி முன்சென்றவர்.
எம்.டியை எப்போதுமே யானை என்றே எண்ணி வந்திருக்கிறேன். பேருருவம், பேராற்றல். ஆனால், சிற்றுயிர்களுக்கும் தீங்கிழைக்காதது. காடதிர நடந்துசெல்கையில் எந்த உயிரும் அதை அஞ்சவேண்டியதில்லை. கேரளக்காடுகளின் அரசன் யானையே” என்று தெரிவித்துள்ளார்.