இயக்குனர் விஷ்ணுவர்தன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் படம் நேசிப்பாயா. இதில் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், குஷபூ, பிரபு, சரத்குமார், கல்கி கொச்சிலின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நேசிப்பாயா படம் பற்றி விஷணுவர்தன் பேசினார்.
நேசிப்பாயா திரைப்படம் உருவானது எப்படி ?
ஆகாஷ், சினேகா இருவரும் என் இந்தி படத்தின் டப்பிங்கில்தான் என்னை வந்து சந்தித்தார்கள். சினிமாவில் அடுத்தக்கட்டம் பற்றி பேசினார்கள். எனக்கு அப்போதைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு அந்த படமே என்ன ஆகும் என்கிற ஐடியா இல்லாமல் இருந்தது. அதனால் பல முறை சந்தித்துப் பேசினோம். அந்த சந்திப்புகளில் ஆகாஷை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. அந்த ஒரு விஷயம் தான் இந்த படம் தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. எனக்கு என் படங்களில் எல்லாமே எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த இயக்குனர்களோடுதான் நான் வேலை பாத்திருக்கிறேன். அதனால்தான் இந்தக் கதையில் ஆகாஷை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அஜித், ஆர்யா எல்லாருமே எனக்கு தனிப்பட்ட முறையில் அவர்களை பிடித்ததால் மட்டுமே வேலை செய்தேன்.
நேசிப்பாயா என்ன மாதிரியான கதை ?
இது அழகான காதல் கதை. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் இதற்காக போர்ச்சுகல் நாட்டில் போய் படப்பிடிப்புகளை நடத்தியிருக்கிறோம். ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இடங்களில் எடுப்பதால் அங்குள்ள ஒளிப்பதிவாளர்களை பயன்படுத்திக் கொண்டேன். முதலில் ஓம்பிரகாஷ் வேலை பார்த்தார். எனக்கு அதிக நாட்கள் தொடர்ந்து தேவைப்பட்டது. அதனால் பிரிட்டிஷ் கேமராமேன் கேமரைன் பிரைசன் செய்திருக்கிறார். இது அங்கு காட்சிகளை ரியலிட்டிக்கா எடுக்க உதவியாக இருந்தது. பிரட்ரிக் சண்டைக் காட்சிகளை எடுத்திருக்கிறார். எல்லோருமே ஸ்பெயின் கலைஞர்கள்.
காதல் கதைகள் நிறைய வந்திருக்கிறது இதில் இந்த படம் எப்படி வித்தியாசப்படும் ?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வந்த காதல் கதைகளுக்கும் இன்று இருக்கும் காதல் கதைகளுக்கும் நிறைய வித்தியாசத்தை என்னால் பார்க்க முடிகிறது. இங்கு செட் ஆகலைன்னா ஈசியாக ப்ரேக் அப் பண்ணிவிட்டு போய் விடுகிறார்கள். இது ஈசியாக நடக்கிறது. ஆனால் அதில் இருக்கும் உண்மை எப்போது தெரிகிறது என்றால் பிரிந்து போன பிறது. எங்கு நாம் தவறு செய்தோம் என்று உணர்வு வரும் பாருங்கள் அப்போதுதான் புரியும். என்னதான் காதல் கதையாக இருந்தாலும் சின்ன ட்ராமா இருந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்றுதான் கதைக்களத்தை போர்ச்சுகளில் வைத்திருக்கிறோம்.
பில்லா மாதிரியான ஆக்ஷன் படங்களுக்குப்பிறகு எப்படி காதல் கதை செய்வது எப்படி ?
அது முழுமையாக வேறு ஒரு களம். அதற்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். இது ஒரு இளஞனை சுற்றி நடக்கும் கதை. இதில் அவர் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். எல்லாமே ரியலாக இருக்கும்.
பிரபு – குஷ்பூ எப்படி இதில் வந்தார்கள் ?
கதாபாத்திரங்களை முடிவு செய்தவுடன் யார் யார் நடிக்கலாம் என்பதையும் தேர்வு செய்தேன். கல்கி கொச்சிலின் தேர்வு செய்தபோது பிறகு நயன் தாராவிடம் நம்பர் வாங்கி அவர்களுக்கு சிபாரிசு செய்ய வைத்து அவரிடம் கதை சொல்லி நடிக்கக் கேட்டேன். அதன் பிறகுதான் அவர் நடிக்க ஒத்துக்கொண்டார். இதையெல்லாம் குஷ்புவிடம் சொல்லி அவரையும் நடிக்க கேட்டேன். அவர் பிரபு என்ன பாத்திரம் என்பதையெல்லாம் கேட்டு விட்டுத்தான் அவர் கேரக்டரை பற்றி கேட்டார். அதன் பிறகுதான் அவரும் நடிக்க சம்மதித்தார்.
யுவன் சங்கர் ராஜா இதிலும் தீம் மியூசிக் வைத்திருக்கிறாரா ?
ஆமாம் நானும் அவரும் பள்ளித்தோழர்கள். அவரிடம் நீ யாருக்கு மியூசிக் போடுறியோ இல்லையோ எனக்கு மட்டும் செம்மயா போட்டுக்கொடு என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன். இதிலும் 5 பாடல்களையும் தீம் மியுசிக்கையும் போட்டுக்கொடுத்திருக்கிறார் யுவன் என்றார் விஷ்ணுவர்தன்.