No menu items!

5 %  முதல் 18 % வரை  ஜிஎஸ்டி  வரி மறுசீரமைப்பு

5 %  முதல் 18 % வரை  ஜிஎஸ்டி  வரி மறுசீரமைப்பு

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் விரிவான விவாதங்கள் தொடங்கின. அதன்படி, பெரும்பாலான பொருட்கள் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதையடுத்து, வரி குறைப்பு நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் வரி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் செப்.3 மற்றும் செப். 4 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

இதனால், சிறு, குறு நடுத்தர (எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கான வரி சுமையும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5 சதவீதம் மற் றும் 18 சதவீதம் என 2 ஆக குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

புகையிலை மற்றும் மிகவும் ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு மட்டும் அதிகபட்சமாக 40 சதவீதம் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மத்திய அரசு பரிந்துரை செய்து மாநில நிதியமைச்சர்களால் பரிசீலனை செய்யப்பட்ட வரி மறுசீரமைப்பு திட்டத்தின்படி, 12 சதவீத வரி விதிப்பு பிரிவில் உள்ள வெண்ணெய், பழச்சாறு, உலர் பழங்கள் போன்ற 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி வரம்புக்குள் மாற்றப்படும்.

இதேபோல், கார், பைக், ஏசி, டிவி, பிரிட்ஜ், சலவை இயந்திரங்கள் போன்ற மின்னணுப் பொருட்கள், சிமென்ட் போன்ற பிற பொருட்களுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி அடுக்கில் உள்ள 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீத குறைந்த வரி விகிதத்துக்கு கொண்டு வரப்படு கின்றன.

எதிர்க்கட்சி மாநிலங்கள் ஆலோசனை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக நேற்று காலை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், வரி விகித மறுசீரமைப்புக்கு ஒப்புதல் தெரிவிக்க வருவாய் பாதுகாப்புக்கான தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதென முடிவானது.

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரியுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச கட்சியும் இதனை வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர மாநிலத்தின் நிதியமைச்சருமான பையாவுலா கேசவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜிஎஸ்டி விகிதங்கள் மறுசீரமைக்கப்படுவதை ஒரு கூட்டணிக் கட்சியாக தெலுங்கு தேசம், மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறது. இது, சாமானிய மக்களுக்கு சாதகமான நடவடிக்கை” என்றார்.

ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராதா கிருஷ்ண கிஷோர் கூறுகையில், “மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை செயல்படுத்தினால் எங்களது மாநிலம் ரூ.2,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்கும். இந்த இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டால் வரி மறுசீரமைப்பை அங்கீகரிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அத்துடன் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வது மத்திய அரசின் பொறுப்பாகும்” என்றார்.

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆற்றிய சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான திட்டத்தை வெளியிட்டார். அதன்பிறகு, மத்திய அரசு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் குழுவுடன் மறுசீரமைப்புக்கான திட்டங்களின் வரைவை பகிர்ந்து கொண்டது.

இந்த வரைவு திட்டத்தின்படி, ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகனம், கைவினைப்பொருட்கள், விவசாயம், சுகாதாரம் மற்றும் காப்பீடு ஆகிய 8 துறைகள் வரி அடுக்கு மாற்றத்தால் மிகவும் பலனைடயும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய ஜிஎஸ்டி வரி கட்டமைப்பின் கீழ், மொத்த ஜிஎஸ்டி வசூலில் 18 சதவீத வரி அடுக்கு அதிகபட்சமாக 65 சதவீத பங்கை கொண்டுள்ளது. அதேபோன்று 5 சதவீத வரி அடுக்கு 7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

ஆடம்பர மற்றும் புகையிலை போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத வரி மொத்த ஜிஎஸ்டி வசூலில் 11 சதவீத பங்காக உள்ளது. அதேநேரத்தில், 12 சதவீத வரி அடுக்கு இந்த வருவாயில் 5 சதவீத பங்கை மட்டுமே கொண்டுள்ளது.

கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வரி விகித எளிமைப்படுத்தல், வாழ்க்கை தரத்தை உயர்த்தல் ஆகிய 3 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஜிஎஸ்டி மறுசீரமைப்பை ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...