முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நேற்று 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இந்த 4 பேரில் செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் ஆகிய இருவரும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய இருவர் புதுமுகங்கள்.
தமிழக அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள 2 அமைச்சர்களைப் பற்றி ஒரு பார்வை…
கோவி.செழியன்:
தமிழகத்தின் புதிய உயர்கல்வித் துறை அமைச்ச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியனின் நிஜப்பெயர் நெடுஞ்செழியன். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் என்ற குக்கிராமம்தான் கோவி. செழியனின் சொந்த ஊர். இவரது தந்தை தந்தை கோவிந்தனும் திமுகவைச் சேர்ந்தவர். எட்டாவது படிக்கும்போதே தினமும் முரசொலி வாசிக்கும் பழக்கம் கோவி.செழியனுக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் மூத்த திமுக தலைவரான நெடுஞ்செழியன் அதிமுகவில் இணைந்து, திமுகவுக்கு எதிராக செயல்பட, தனது பெயரை கோவி.செழியன் என்று மாற்றிக்கொண்டார்.
சென்னை சட்டக்கல்லூரியில் படித்த போது மாணவர் அணியில் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார் செழியன். அந்த சமயத்தில் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ, காபியில் சர்க்கரை போட்டு குடிக்காதவர்கள் தான் திமுகவில் இருக்கின்றனர். இளைஞர்கள் திமுகவில் இல்லை, அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்றார். வயதானவர்கள் மட்டும் திமுகவில் இருப்பது போன்ற பொருள்படும் படி பேசினார். வைகோவில் இந்த பேச்சுக்கு எதிராக அப்போது செழியன் தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டசபை தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழக அரசின் தலைமை கொறடாவாக செயல்பட்டு வந்த அவர், இப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்:
பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தார். இவர் சென்னை குருநானக் கல்லூரியில் பி.ஏ., பி.எல். பயின்றுள்ளார். பின்னர் 1985-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்தார். பின்னர், 1992-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை சேலம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். இதைத்தொடர்ந்து, 1999-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மற்றும் 2001-ம் ஆண்டு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பொறுப்பு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு போக்குவரத்து தொ.மு.சவில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பல்வேறு வகித்து வந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு முதல் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பு பெற்று தற்போது வரை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
2006 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பனம்ரத்துப்பட்டி ராஜேந்திரன், கடந்த 2021-ம் ஆண்டு மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சேலம் மத்திய மாவட்ட செயலாளராக இருந்து வரும் ராஜேந்திரன் அவர்கள் பல்வேறு கட்சி பொறுப்புகளிலும் பொதுப்பணியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்தார். இந்த நிலையில் தற்போது முதன்முறையாக திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.