தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று (ஜன.22) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்து 200-க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
அதன்படி இன்று காலை, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,525-ம், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.60,200-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.104-க்கு விற்கப்படுகிறது. நேற்று தங்கம் ஒரு பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையான நிலையில் இன்று பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வுக்குக் காரணம் என்ன?
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் கூட இன்று தங்கம் விலை ஒரு புதிய மைல்கல்லாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் பல உள்ளன. உள்நாட்டைப் பொருத்த வரை இந்திய ரூபாயின் மதிப்பு கடந்து 3 நாட்கள் சிறிய ஏற்றம் கண்டுள்ளதும், பண்டிகை காலம், திருமணம் சீசன் ஆகியனவற்றால் தேவை அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.