ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடா்புடைய ஞானசேகரன் டிச. 25-இல் கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த அண்ணாநகா் துணை ஆணையா் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அறிவித்தது.
தொடா் விசாரணையில், ஞானசேகரன் திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மற்றொருபுறம், சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட மொத்தம் 18 போ் சாட்சியம் அளித்தனா். அவா்களிடம் ஞானசேகரன் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
கடந்த மாா்ச் மாதத்தில் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்றது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அறிவியல் ரீதியாக அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்து வாதாடினாா். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருப்பதால் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றாா்.
ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி ஞானசேகரனை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டாா்.
இரு தரப்பில் இருந்தும் எழுத்துபூா்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாத, பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை (மே 28) தீா்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்தார்.
குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் ஞானசேகரன் கதறி அழுதார்.குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கருணைை காட்டக் கூடாது எனவும் அரசு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி வாதிட்டார்.