No menu items!

16 வயதில் வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம் – பிரிட்டன் பிரதமர்

16 வயதில் வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம் – பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிரிட்டன் பொதுத் தேர்தலின்போது, தொழிலாளர் கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

பிரிட்டனின் வாக்களிக்கும் வயதான 21 ஐ, கடந்த 1969 ஆம் ஆண்டு 18 ஆக குறைக்கப்பட்ட பின்னர், தற்போது 56 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்களிக்கும் வயது குறைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசு தரப்பில் தேர்தல்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வியாழக்கிழமை கொள்கை ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், வாக்காளர் வயது குறைப்பு, நன்கொடை அளிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை தடுப்பது, வங்கி அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கும் உரிமை உள்பட பல முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் ஏற்கெனவே 16 வயதுடையவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். இது பிரிட்டன் முழுவதும் தற்போது நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், எவ்வித செயல்பாடுகளும் இல்லாத ஷெல் நிறுவனங்கள் மூலம் நன்கொடை அளித்து பிரிட்டன் தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தடுக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பிரிட்டனில் வாக்காளார் அட்டைக்கு 14 வயது முதல் விண்ணப்பம் பெறும் நிலையில், தகுதியுடைய 70 முதல் 80 லட்சம் பேர் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அரசு, வாக்களிக்கும் நடைமுறையைக் கடுமையாக்கியது. இதன் விளைவாக கடந்த பொதுத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால்தான் 4 சதவிகிதம் பேர் வாக்களிக்கவில்லை என பிரிட்டன் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால், வாக்களிக்க வங்கி அட்டை, ஓட்டுநர் அட்டை, முன்னாள் ராணுவ வீரர் அடையாள அட்டை உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் பிரிட்டன் அரசு தாக்கல் செய்யவுள்ள தேர்தல் திருத்த மசோதாவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ”16 வயதுடையவர்கள் வேலை செய்யவும் வரி செலுத்தவும் தகுதியுடையவர்களாக இருக்கும்போது, வாக்களிக்க உரிமை அளிப்பது மிகவும் அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திருத்தங்கள் பிரிட்டனில் ஆட்சியில் உள்ள தொழிலாளர் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், அதிகளவிலான இளைஞர்கள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 70 வயதுக்கு அதிகமானோர் 20 சதவிகிதம் பேர் மட்டுமே தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால், 18 முதல் 24 வயது இளைஞர்கள் 41 சதவிகிதம் பேர் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தனர்.

16 வயது நிறைவடைந்தவர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டாலும், தேர்தலில் போட்டியிடவும், லாட்டரி வாங்கவும், மது அருந்தவும், திருமணம் செய்யவும், போருக்குச் செல்லவும் அனுமதி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...