நேர்மையான கலெக்டரான ராம் சரண், ‘முதல்வன்’ பட பாணியில் ரேஷன் அரிசி கடத்தும் ரைஸ் மில்லுக்கு சீல் வைப்பது, அனுமதியின்றி கட்டப்பட்ட மாலை இடிப்பது என அதிரடி வேலைகளை செய்கிறார். அமைச்சரான எஸ்.ஜே.சூர்யாவின் பினாமி நடத்தும் மணல் கடத்தலை தடுக்கிறார். விளைவு, இரண்டுபேருக்கும் நடுவில் மோதல் வருகிறது.
அந்த மாவட்டத்துக்கு வரும் முதல்வரும், எஸ்.ஜே.சூர்யாவின் தந்தையுமான ஸ்ரீகாந்த் ‘இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் கலெக்டர் ராம் சரண்தான்’ என்று சொல்லிவிட்டு மரணம் அடைகிறார். அப்படி அவர் சொன்னதன் பின்னணி என்ன? எஸ்.ஜே.சூர்யாவை மீறி முதல்வர் நாற்காலியில் ராம்சரண் அமர்ந்தாரா என்பதை தனது பாணியில் ஊழலுக்கு எதிர்ப்பு, பிரமாண்டம், சென்டிமென்ட், சமூக அக்கறை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த கதையை எழுதியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
கேம்சேஞ்ஜர் தெலுங்கு படம் என்றாலும், தமிழில் டப் செய்யும்போது ஊர், கேரக்டர் பெயர், பின்னணி உட்பட எதையும் மாற்றவில்லை. அதுவே கதையுடன் மனம் செட்டாவதை தடுக்கிறது. தவிர, படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத பில்டப் காட்சிகள். ஒரு கலெக்டருக்கு இவ்வளவு பவர் இருக்கிறது என்று ராம்சரண் சொல்லும் வசனங்கள் ஓகே. ஆனால், அவர் மந்திரியான எஸ்.ஜே.சூர்யாவை மரியாதை இல்லாமல் பேசுவது, அவமானப்படுத்துவதெல்லாம் சினிமாத்தனம்.
ஆரம்பம் முதல் கடைசி வரை ஓவர் ஆக்டிங், ஓவர் சவுண்டு என்று ஓவராக போய்க்கொண்டே இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஹீரோ ராம்சரண் அழகாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ஆனால், காதல் காட்சி செம போர். பிளாஷ்பேக் காட்சியில் அப்பா ராம்சரண் நடிப்பு ஓகே. அதுதான் படத்தின் ஒரே பிளஸ்.
வழக்கமான ஹீரோயினாக வந்து, சில வசனங்கள் பேசிவிட்டு, டான்ஸ் ஆடிவிட்டு போகிறார் ஹீரோயின் கியாரா அத்வானி.
பிளாஷ்பேக்கில் வரும் அஞ்சலி நடிப்பு, அந்த பாட்டு அருமை. மற்றபடி, சுனில், பிரமானந்தம், வெண்ணிலா கிஷோர் என பிரபல காமெடியன்கள் இருந்தும் சிரிப்பு வரவில்லை. ஓரிரு வசனங்களால் சற்றே ஈர்க்கிறார் எஸ்.ஜே.சூர்யா அண்ணனனாக வரும் ஜெயராம். தமிழ் சினிமா மாதிரி ரொம்ப நல்லவர் வேடம் சமுத்திரக்கனிக்கு. எந்த கேரக்டரும் மனதில் நிற்க மறுப்பது படத்தின் பெரிய மைனஸ். ஹீரோ காதல் காட்சிகள், கல்லுாரி காட்சிகள் தேவையில்லாத ஆணி
இரண்டாம் பாதி கதையை ஷங்கர்தான் இயக்கினாரா என்று கேட்கும் அளவுக்கு லாஜிக் மீறல்கள் உள்ளன. ஒரு மாநில தேர்தல் அதிகாரியின் பவர் என்ன? அவர் எப்படி இருப்பார் என்பதை மறந்து இஷ்டத்துக்கு ஹீரோவை காண்பித்து இருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகள், ஓட்டு எண்ணும் இடத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் அபத்தம்.
ஷங்கர் படங்களில் பாடல் காட்சிகள் அழகாக இருக்கும், கேம்சேஞ்ஜரில் பிரமாண்டம் இருக்கிறது. ஆனால் மனதில் ஒட்டவில்லை. இசையமைப்பாளர் தமனும் தனது வேலையை சரியாக செய்யவில்லை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பவரை காண்பிக்கும் கதையை, தவறான திரைக்கதையால் சொதப்பி இருக்கிறார்கள். கோடிகளை கொட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் தில்ராஜூ. ஆனால், வலுவில்லாத கதை, சுமாரான திரைக்கதை, பலர் இல்லாத நடிப்பால் கேம்சேஞ்ஜர் போரடிக்கிறது.