No menu items!

சச்சின் முதல் ஹர்திக் பாண்டே வரை – கிரிக்கெட் காதல்கள்

சச்சின் முதல் ஹர்திக் பாண்டே வரை – கிரிக்கெட் காதல்கள்

சச்சின் – அஞ்சலி – ஏர்போர்ட்டில் மலர்ந்த காதல்

1990-ம் ஆண்டில் தனது முதல் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரை முடித்துக்கொண்டு மும்பை விமான நிலையத்தில் வந்திறகினார் சச்சின் டெண்டுல்கர். அப்போது லண்டனிலிருந்து வரும் தனது அம்மாவை வரவேற்பதற்காக மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார் அஞ்சலி. அஞ்சலிக்கு கிரிக்கெட்டைப் பற்றியோ, சச்சினைப் பற்றியோ எதுவும் அப்போது தெரியாது. உடன் இருந்த அஞ்சலியின் தோழிதான் சச்சினைப் பற்றி அஞ்சலியிடம் கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் அதிசயக் குழந்தை என்று சச்சினைப் பற்றி தோழி சொல்ல, ஏர்போர்ட்டில் நடந்து வந்துக் கொண்டிருந்த சச்சினைப் பார்த்திருக்கிறார் அஞ்சலி.

17 வயதேயான சச்சினின் குழந்தைத்தனமான ‘Cute’ முகம் அஞ்சலியை கவர்ந்துவிட்டது. அம்மாவைக்கூட மறந்து, ‘சச்சின்… சச்சின்…’ என்று கத்திக் கொண்டே அவரது காரை நோக்கி ஓடியிருக்கிறார் அஞ்சலி. கார் ஏறிக் கொண்டிருந்த சச்சின் ஒரே ஒரு முறை அஞ்சலியைப் பார்த்திருக்கிறார். பார்வைகள் சந்தித்ததும் காதல்.
ஏர்போர்ட் சம்பவத்துக்குப் பிறகு சச்சினின் வீட்டு தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து தொடர்ந்து போன் அடித்திருக்கிறார். அப்போது செல்போன் கிடையாது. லேண்ட் லைன் தான். பல முறை தொடர்பு கொண்டதில் ஒரு முறைதான் சச்சினை போனை எடுத்திருக்கிறார்.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அஞ்சலி, விமான நிலைய சம்பவத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். உடனே சச்சின், ‘ஆமாம்… நினைவிருக்கிறது. நானும் உங்களைப் பார்த்தேன்’ என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் அஞ்சலிக்கு சந்தேகம்.

‘நிஜமாகவே நீங்கள் என்னைப் பார்த்தீர்களா? என்ன பார்த்தீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார் அஞ்சலி. ‘நீங்கள் ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருந்தீர்கள்’ என்று சச்சின் கூற அஞ்சலியின் மகிழ்ச்சி அதிகமாகி உள்ளது.

அப்படி தொடங்கிய பழக்கம் காதலாகிவிட்டது. கிரிக்கெட் போட்டிகளில் ஆட சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல, அவருக்கு காதல் கடிதங்களை அனுப்பி காதலை வளர்த்திருக்கிறார் அஞ்சலி.

ஒருநாள் சச்சின் அஞ்சலியை வீட்டுக்கு அழைத்துள்ளார். ஒரு பெண் வீட்டுக்கு வந்தால் வீட்டில் என்ன சொல்வது என்று சச்சினுக்கு தயக்கம். அதனால் வீட்டில் இருப்பவர்களிடம் அஞ்சலியை பத்திரிகையாளர் என்று கூறி அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அஞ்சலியைக் காதலிப்பதை வீட்டில் சொல்ல சச்சினுக்கு பயம். என்ன செய்வதென்று அஞ்சலியிடம் கேட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஒருநாள் சச்சின் டெண்டுல்கர் நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் ஆடப் போயிருக்கும் நாளில், சச்சினின் வீட்டில் தங்கள் காதலைச் சொல்லியிருக்கிறார் அஞ்சலி. இரு தரப்பு பெற்றோரும் பச்சைக் கொடி காட்ட அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது.


ஷட்டில்காக்கில் விட்ட தூது

பெற்றோருக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, அதை யாருக்கும் தெரிவிக்காமல் நல்ல பிளையாய் வீட்டில் வசிக்கும் ஜோடியை ‘அலைபாயுதே’ படத்தில் பார்த்திருப்போம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் நிஜ வாழ்க்கையிலேயே அது நடந்திருக்கிறது.

கொல்கத்தாவின் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் கங்குலி. அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டோனாவுக்கும் இடையே சிறு வயதிலேயே காதல் பிறந்துள்ளது. இந்த பரஸ்பர காதலுக்கு என்ன காரணம் என்று இருவருக்கும் புரிந்ததில்லை. ஆனால் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.

சிறுவயதில் கங்குலிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து. டோனாவின் வீடு வழியாகத்தான் கால்பந்து மைதானத்துக்குச் செல்லவேண்டும். அப்படி செல்லும்போதெல்லாம் டோனா வீட்டில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டே செல்வார் கங்குலி.

அதேபோல் நண்பர்களுடன் பாட்மிண்டன் விளையாடுவதென்றால் டோனாவின் வீட்டுக்கு அருகில்தான் விளையாடுவார். அதை வீட்டு வாசலில் நின்று டோனா பார்த்துக்கொண்டிருப்பார். ஷட்டில்காக் டோனாவின் வீட்டில் விழுந்தால், அதை டோனாவே எடுத்துவந்து கங்குலிக்கு கொடுப்பார். இருவரும் காதல் பார்வையை பரிமாறிக் கொள்வார்கள். இப்படி ஷட்டில்காக் மூலமும் அவர்கள் காதல் வளர்ந்திருக்கிறது.

இந்திய அணிக்காக ஆட கங்குலி, இங்கிலாந்துக்கு சென்ற நேரத்தில் இவர்களின் காதல் மேலும் வளர்ந்தது. இந்த தொடர் முடிந்து இந்தியா வந்ததும், முதல் வேலையாக யாருக்கும் சொல்லாமல் டோனாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் தாதா. இந்த திருமணத்தை இருவரும் 6 மாதங்களுக்கு தங்கள் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளனர். இறுதியில் இவர்களின் பதிவுத் திருமணம் பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாக, அது வீட்டுக்கு தெரியவந்தது.

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர், பிறகு சமாதானமாகி 1997-ம் ஆண்டில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.


ஷூட்டிங்கில் மலர்ந்த காதல்

2013-ம் ஆண்டில் ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக சென்றபோது அனுஷ்காவை முதல் முறையாக சந்தித்தார் விராட் கோலி. அது ஒரு ஷாம்பூ விளம்பரம். படப்பிடிப்புக்கு முதலில் சென்ற விராட் கோலி, அங்கு இருந்தவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் காரில் படப்பிடிப்பு தளத்தில் வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா சர்மா.

பாலிவுட் நடிகைகளில் அனுஷ்கா கொஞ்சம் உயரமானவர். அன்றைய தினம் படப்பிடிப்புக்கு வந்தபோது உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணியை அனுஷ்கா அணிந்திருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தார். அதே நேரத்தில் விராட் கோலி அத்தனை உயரமானவர் கிடையாது. அனுஷ்காவைவிட ஒருசில அங்குலங்கள்தான் உயரமாக இருப்பார். காரில் இருந்து அனுஷ்கா இறங்கியதும், முதலில் அவரது உயரத்தைத்தான் கோலி கவனித்துள்ளார்.

ஏற்கெனவே உயரமான பெண்ணாக இருந்த அனுஷ்கா, மிகப்பெரிய ஹீல்ஸ்களையும் அணிந்து இருந்ததால், இன்னும் உயரமாக தெரிந்தார். அதனால் அவருக்குப் பக்கத்தில் தான் நின்றால் குள்ளமாக தெரிவோமோ என்று விராட் கோலிக்கு பட்டுள்ளது. இதனால் அப்போதை ஜாலி மூடில், “இதைவிட உயரமான ஹீல்ஸ் செருப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஆனால் அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்று அனுஷ்காவுக்கு புரியவில்லை. “என்ன கேட்டீர்கள்” என்று திரும்பக் கேட்டுள்ளார். முதல் சந்திப்பிலேயே அனுஷ்காவை கிண்டலடித்து விட்டோமோ என்று நினைத்த கோலி, “ஒன்றுமில்லை, சும்மா ஜோக்குக்காக சொன்னேன்” என்று பேச்சை மாற்றியுள்ளார். பின்னாளில் தினேஷ் கார்த்திக்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலைச் சொல்லியுள்ளார் விராட் கோலி.

அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக கோலி பழகிய விதம் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப் போக இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும், அனுஷ்காவின் வீட்டுக்கு விராட் கோலி சென்றது மிகப்பெரிய செய்தியானது. இதைத்தொடர்ந்து நியூஸிலாந்துக்கு இந்திய அணி ஆடச் சென்றபோது, விராட் கோலியை உற்சாகப்படுத்துவதற்காக அனுஷ்கா சர்மாவும் நியூஸிலாந்துக்கு சென்றார். இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றபோதும் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள டார்லிங் ஹார்பரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது பலரது புருவங்களை உயர்த்தியது.

ஐஎஸ்எல் கால்பந்து, யுவராஜ் சிங்கின் திருமணம் என பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று, ‘ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம்’ என்பதை இவர்கள் சொல்லாமல் சொன்னார்கள். 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் சதமடித்த கோலி, மைதானத்தில் அனுஷ்கா இருந்த இடம் நோக்கி ஒரு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிட்டு தனது காதலை பகிரங்கப்படுத்தினார்.

இப்படி கொஞ்ச காலம் காதல் பறவையாக சுற்றிக்கொண்டிருந்த கோலி – அனுஷ்கா ஜோடியின் திருமணம் இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் டிசம்பர் 11-ம் தேதி நடந்தது.


கிரிக்கெட் கிளப்பில் சொன்ன காதல்

ரோஹித் சர்மாவும் அவர் மனைவில் ரித்திகாவும் முதலில் சந்தித்துக் கொண்டது ஒரு விளம்பர ஷூட்டிங்கில்தான். ஸ்போர்ட்ஸ் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ரித்திகா, அந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மாவுக்கு தேவையான விஷயங்களை கவனித்துக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ரித்திகா. அதனாலேயே ரித்திகாவிடம் நல்லபடியாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே ரோசித்தை எச்சரித்திருந்தார் யுவராஜ் சிங். அவரது எச்சரிக்கையால் கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் பேசத் தொடங்கினார் ரோஹித் சர்மா. இந்த சந்திப்புக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் நிகழ்ச்சிகளை கவனித்துக்கொள்ளும் வேலையையும் செய்யத் தொடங்கினார் ரித்திகா. இதற்காக இருவரும் அடிக்கடி பேச, வாழ்க்கை முழுவதும் ரித்திகா தன் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவுக்கு செண்டிமெண்ட் அதிகம். அதனால் தான் முதலில் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய போரிவலி கிரிக்கெட் கிளப்தான் காதலைச் சொல்ல ஏற்ற இடம் என்று நினைத்திருக்கிறார். ஒருநாள் ரித்திகாவை போரிவலி கிரிக்கெட் கிளப்புக்கு அழைத்துச் சென்ற ரோஹித் சர்மா, அவர்முன் ஸ்டைலாக மண்டியிட்டு முன்னரே தான் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை நீட்டி காதலைச் சொல்லியிருக்கிறார்.

ரோஹித்தைப் போலவே ரித்திகாவின் மனதிலும் ஏற்கெனவே காதல் இருக்க, அவரும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இருவருக்கும் 2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது.


காதலர் தினத்தில் கல்யாணம்

மும்பையில் உள்ள ஒரு நைட் கிளப்பில்தான் ஹர்த்திக் பாண்டியாவும், அவரது காதலி நடாஷாவும் முதல் முறையாக சந்தித்தனர். ஆரம்பத்தில் அவர்களிடையே நட்பு மட்டுமே இருந்தது. இந்த காலகட்டத்தில் தொலைக்காட்சியில் வெளியான கரண் ஜோகர் ஷோவில் ஹர்த்திக் பாண்டியா சில சர்ச்சையான கருத்துகளைச் சொல்ல, அவரை சில ஆட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தது பிசிசிஐ.

கிரிக்கெட் போட்டிகளில் ஆடமுடியாததால் ஹர்த்திக் சோகத்தில் மூழ்க, அந்த காலகட்டத்தில் அவருக்கு ஆறுதல் கூறி, அவருடனே இருந்துள்ளார் நடாஷா. இந்த ஆறுதலும் துணையும்தான் ஹர்த்திக்கின் மனதில் நடாஷாவுக்கு இடம் கொடுத்துள்ளது. இந்த நட்பு காதலாக மாற மும்பை நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் திருமனம் செய்துகொண்டனர்.

அதே திருமணத்தை சம்பிரதாய முறைப்படி காதலர் தினத்தன்று மீண்டும் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது இந்த ஜோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...