எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருந்த தினம் தினம் பாடல் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய பேச்சும் வைரலாகி பரவிவருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, “எல்லாப் படத்தின் இசை வெளியீட்டு விழா போல இது நடக்கவில்லை. ‘விடுதலை’ படத்திற்காக வெற்றிமாறன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ‘தெனந் தெனமும்’ பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடினார். அதன் பிறகு இயக்குநர் என்னை பாட சொல்லிக் கேட்டார். அதன் பிறகு சஞ்சய் ‘மனசுல’ பாடல் பாடினார். அவர் பெரிய சங்கீத வித்துவான்.
ராஜீவ் மேனனை பார்த்ததும் நான் யார் எனக் கேட்டேன். எனக்கு அவரை தெரியாது. பிறகு அவர் ஒளிப்பதிவாளர் என்பதை தெரிந்து கொண்டேன். சிறப்பாக நடித்திருக்கிறார் அவர். சேத்தன் நடித்ததைப் பார்த்து நான் பாராட்டினேன். முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைத்து விடாதீர்கள். இதில் வேற மாதிரி வெற்றி மாறன் பயணம் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது மாதிரி. வெற்றி மாறன் சொல்லுவதையெல்லாம் கேட்டு அப்படியே இசையாக மாற்றினேன். நான் இசையமைக்கும்போது வெற்றி மாறன் எப்போதும் ரெக்கார்டு செய்து கொண்டே இருப்பார். இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்தது இல்லை. நிகழ்வுக்கு போவதும் இல்லை. இந்த நிகழ்வில் முன்பே பேசிவிட சொன்னார்கள். நான் இருக்கேனு சொன்னேன். எல்லோர் பேசுவதையும் கேட்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்த படம், திரை உலகம் சந்திக்காத படம், வெற்றிமாறனின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதைகளை கொண்டது, கடலில் வரும் அலை எப்படி மாறி மாறி வருகிறது அதுபோலவே தான் இந்த கதையும். ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அலையே. அதுபோல வெவ்வேறு திரைக்கதையை வெற்றிமாறன் உருவாக்குவது பெருமையாக இருக்கிறது. வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்1500 படத்திற்கு இசை அமைத்த பின் இதை நான் சொல்கிறேன். 1500 படங்கள் என்றால்,1500 இயக்குனர்களை பார்த்தவன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.