தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நேற்று முன் தினம் (14-10-24) இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் நேற்று கோடம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த மழையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட நடிகர்கள் சிலரது வீடுகளும் தப்பவில்லை. கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மட்டுமல்லாது, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதலை கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் மழை குறைந்திருந்தாலும் நாளை மீண்டும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று முன் தினம் இரவு தொடங்கி பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ஓஎம்ஆர், கந்தன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பல்லாவரம், புளியந்தோப்பு, பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
ரஜினிகாந்த் வீட்டை சூழ்ந்த மழை நீர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு இருக்கும் போயஸ் கார்டனையும் இந்த மழை விட்டு வைக்காமல் புரட்டிப் போட்டிருக்கிறது. ரஜினிகாந்த் வீட்டருகே உள்ள சாலையில் அதிகப்படியான நீர் தேங்கியிருப்பதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சென்னை மாநகராட்சி அதை அகற்றும் பணியில் உடனே ஈடுபட்டு சரிசெய்து விட்டதாக விளக்கமளித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீமன் வீட்டுக்குள் புகுந்த மழை நீர்
கோடம்பாக்கம் பகுதியில் நேற்று முன் தினம் பெய்த கனமழை காரணமாக பிரபல நடிகரான ஸ்ரீமன் வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி வேறு பகுதிக்கு சென்றுள்ளதாக ஸ்ரீமன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், “மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டதால் வேறு வழி தெரியவில்லை. மழை பெய்யும் என ஓரளவு கணித்து ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு தண்ணீர் வரும் என்று எப்படி தெரியும். எனது வீட்டிற்குள்ளேயும் தண்ணீர் வரத் தொடங்கி விட்டது. இன்னொரு வீடு இருப்பதால் அங்கு சென்று விட்டோம். வீட்டுக்குள் தண்ணீர் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. யாரையும் குறை சொல்வதற்கும் எதுவும் இல்லை. ஆனால், இன்னும் ஏதாவது செய்தி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ அப்படின்னு தெரியவில்லை. 20 நாட்களுக்கு செய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்துள்ளது. ஆனால், மழைநீர் வடிகால் பணிகளை இன்னும் வேகமாக முடித்து இருந்தால் எதிர்காலத்தில் தப்பிக்கலாம். எனக்கு வீடு இருப்பதால் வேறு இடத்திற்கு சென்று விட்டேன். எத்தனை பேருக்கு வேறு இடம் இருக்கும் என தெரியவில்லை. குறை சொன்னால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அடுத்த வருஷம் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்” என கூறினார்.
இயக்குநர் ரத்னகுமார் வீட்டின் நிலைமை
மேயாத மான், ஆடை, குளு குளு படங்களை இயக்கியவர் ரத்னகுமார். தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களுக்கு கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் வேலை பார்த்துள்ளார். சென்னையில் அதிகபட்சமாக 300 மிமீ மழை பெய்த ரெட் ஹில்ஸில் குடியிருக்கும் ரத்னகுமார், தனது வீட்டிற்குள் மழை வெள்ளம் வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். “என்னோட வீட்டின் நிலைமை இதுதான். செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையின் நிலைமை பாருங்க எந்தளவுக்கு மழை வெள்ளம் தேங்கியிருக்கு” என வீடியோ வெளியிட்டு புலம்பியுள்ளார்.