இந்திய பங்குச் சந்தையில் மிகப் பெரிய அதிர்ச்சி. கடந்த இரண்டு தினங்களில் 11 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்திருக்கிறார்கள்.
காரணம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்த, மோடி மற்றும் பாஜகவின் நெருங்கிய நட்பில் இருக்கும் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடுமையான குற்றச்சாட்டுக்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கள் பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி மோசமான வீழ்ச்சிக்கு அடிப்படையாகியிருக்கின்றன.
கவுதம் அதானி மிக வேகமாக வளர்ந்த இந்திய தொழிலதிபர். குஜராத்காரர். 60 வயதாகிறது. 1990களில் வைரத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். தனது சாதூர்யத்தினாலும் சாமர்த்தியத்தினாலும் வேகமாக வளர்ந்தார். இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக உயர்ந்தவர். அடுத்து ஆசியாவிலேயே நம்பர் 1 கோடீஸ்வரர் நிலைக்கு ஏறினார். உலகின் இரண்டாவது பெரும் பணக்காரர் என்ற நிலையைப் பிடித்தார். அவரது சொத்து மதிப்பு சுமார் 11 லட்சம் கோடியாக உயர்ந்தது. தினமும் 1600 கோடி ரூபாய் சம்பாதித்தார். இவையெல்லாம் கடந்த 30 வருடங்களில் நடந்தவை.
வைர வர்த்தகத்தில் தொடங்கிய அவரது தொழில் வாழ்க்கை துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் என பரந்து விரிந்தது.
இந்த அசுர வளர்ச்சி எல்லோரையும் பிரமிக்க வைத்தது. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோதுதான் அதானி குழுமம் வளர்ச்சிப் பெறத் துவங்கியது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் மோடி பிரதமரானதும் அதானியின் வளர்ச்சிக்கு காரணம் என்று நேரடியாகவே எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டை வைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் சட்டை செய்யாமல் அதானி குழுமம் வளர்ந்துக் கொண்டே இருந்தது. இந்திய பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் அதானி குழுமத்தின் பங்குகளை பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கி அதானி குழுமத்தில் முதலீடுகளை செய்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிடும் பணக்காரர்கள் பட்டியலில் 2014ல் அதானி இந்திய அளவில் 57 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் 7வது இடத்தில் இருந்தார்.(2013ல் 22வது இடத்தில் இருந்தார்). 2022ல் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பட்டியலில் 12 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்துக்கு வளர்ந்திருக்கிறார். எட்டு வருடங்களில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருகிறது.
இவையெல்லாம் இப்போது நீர்க் குமிழ் போல் உடைந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன. ஜனவரி 27 முதல் பங்குகள் வெளியிட்டு 20,000 கோடி முதலீடு பெற அதானி குழுமம் இலக்கு வைத்திருந்தது. ஆனால் நேற்று முதல் நாள் அந்தப் பங்குகள் ஒரு சதவீதம்தான் விற்பனை ஆகியிருக்கிறது. ஜனவரி 31 வரை பங்குகள் விற்பனை நடக்கும். ஆனால் அதிகம் விற்காது என்கிறார்கள்.
சரி, இந்த திடீர் சரிவுக்கு என்ன காரணம்?
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைதான் அதானிக்கு இந்த பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் 2017ல் துவங்கப்பட்ட நிறுவனம். சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களின் பொருளாதார நிலையை தீவிரமாய் ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிடும். அது போன்று கடந்த இரண்டு வருடங்களாய் அதானி குழுமத்தை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. அதானி குழுமத்துக்கு 88 கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. கார்ப்பரேட் உலகில் அதானி குழுமம் செய்ததுதான் மிகப் பெரிய ஏமாற்று வேலை என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய குற்றச்சாட்டுக்கள் இவை:
மொரீஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள், கரீபியன் தீவுகள் போன்ற எளிய வருமான வரி குறைவான நாடுகளில் போலியான கம்பெனிகளை உருவாக்கி பங்கு விலைகளை ஏற்றியுள்ளது.
அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் மட்டுமே இருப்பது.
நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85% அதிகமாக இருக்கிறது.
அதானி நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்கள் நியாயமானதாக இல்லை.
அதானி குழுமத்துக்கு அரசிடமிருந்து பல்வேறு சலுகைகள் கிடைத்திருக்கிறது.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் தெரிந்தும் இந்திய பொருளாதார அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலும் மறுத்துள்ளது அதானி குழுமம். “அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த அறிக்கைபாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று அதானி குழுமம் தெரிவித்தது.
அதானி குழுமத்தின் அறிக்கைக்கு எதிர் அறிக்கையையும் ஹிண்ட்பர்க் வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தை எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் தங்கள் ஆய்வு உண்மை உடையது என்றும் தெரிவித்திருக்கிறது.
புதன் கிழமை வெளியான இந்த அறிக்கைக்குப் பிறகு இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதானி குழுமத்தின் பங்குகளும் வீழ்ந்திருக்கின்றன.
மிக முக்கியமாக இந்திய பொதுத்துறை நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்திருக்கின்றன. எல்.ஐ.சி. அதிக அளவில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கிறது. அதானி பங்குகள் வீழ்ச்சியால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
ஹிண்டன்பர்க் இதற்கு முன்பும் சில நிறுவனங்கள் மீது இது போன்ற ஆய்வறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. நிக்கோலா மோட்டார்ஸ் என்ற மின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தைக் குறித்த ஆய்வறிக்கையை 2020ல் வெளியிட்டது. அதில் நிக்கோலா மோட்டார்ஸின் பல்வேறு மோசடிகளை சுட்டிக் காட்டியது. அதன்பின் நிக்கோலா மோட்டார்ஸ் நிறுவனத்தால் மீண்டு எழ முடியவில்லை என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆதாயத்துக்காக இது போன்ற ஆய்வுகளை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆய்வறிக்கைகள் மட்டுமில்லாமல் ஷார்ட் செல்லிங் (Short Selling) என்ற பங்குகள் விற்பனையிலும் ஹிண்டன்பர்க் நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த ஷார்ட் செல்லிங் என்பது பங்கு சந்தையில் சிலர் கடைபிடிக்கும் நடைமுறை.
அது என்ன ஷார்ட் செல்லிங்? உதாரணமாய் நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறீர்கள்.
உங்கள் பங்குகளை ஒருவர் 100 ரூபாய் கொடுத்து கடனாக வாங்கி சந்தையில் விற்கிறார். சந்தையில் அந்தப் பங்குகளின் விலை 50 ரூபாயாக குறையும்போது அந்தப் பங்குகளை வாங்கி உங்களுக்கு திருப்பிக் கொடுக்கிறார். அவருக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும். இதுதான் ஷார்ட் செல்லிங். ஹிண்டர்பர்க் நிறுவனம் மற்ற நிறுவனங்களின் பங்குகளை இந்த முறையில் கடனாக வாங்கி விற்கின்றது. பிறகு அந்த நிறுவனத்தைக் குறித்து அவதூறுகள் வெளியிட்டு பங்குகளின் மதிப்பை குறைத்து, குறைந்த மதிப்புள்ள பங்குகளை வாங்கி கடனாக வாங்கிய பங்குகளை திருப்பிக் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு ஹிண்டர்பர்க் நிறுவனத்தின் மீது உண்டு.
அப்படி ஹிண்டன்பர்க் நிறுவனம் செய்தால் கூட அதன் ஆய்வறிக்கை கூறிய குற்றச்சாட்டுக்களை ஆராய வேண்டியிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதால்தானே குற்றச்சாட்டுக்களை சொல்ல முடிகிறது என்ற வாதமும் இருக்கிறது.
அதானி நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள முறைகேடு புகார்களை இந்திய பொருளாதார அமைப்புகள் ஆய்வு செய்யுமா? உண்மைகள் வெளிவருமா?
இந்தக் கேள்விகளுக்கான விடை பிரதமர் மோடியிடம்தான் இருக்கிறது.