No menu items!

ELON MUSK அதிரடி: அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்

ELON MUSK அதிரடி: அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நாள் முதல் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார் எலன் மஸ்க். அந்த மாற்றங்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருப்பது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்தான்.

ட்விட்டர் நிறுவனத்தில் தங்கள் வேலை நிலைக்குமா இல்லையா என்றுகூட தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் ட்விட்டர் நிறுவன ஊழியர்கள். அவர்களின் இந்த நிலைக்கு காரணம் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து அவர்களுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்ட ஒரு இமெயில்.

“நீங்கள் இப்போது அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலோ, வேலைக்காக அலுவலகத்துக்கு வந்துகொண்டு இருந்தாலோ உடனடியாக வீட்டுக்கு திரும்புங்கள். ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் எடுத்துச் செல்வதற்காக சில கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. இதற்காக உலகளாவிய அளவில் பாதி ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளோம். அனைத்து ஊழியர்களுக்கும் அலுவலகத்தில் இருந்து இமெயில் அனுப்பப்படும் அதன்படி வேலைக்கு வந்தால் போதும்.

எந்தெந்த ஊழியர்களை பணியில் தொடர்ந்து வைத்துக்கொள்ள விரும்புகிறோமோ, அந்த ஊழியர்களுக்கு அலுவலகத்தின் இமெயில் முகவரியில் தகவல் தெரிவிக்கப்படும். வேலையை விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மெயிலில் தகவல் அனுப்பப்படும். இமெயில் வரும் விஷயத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

நிறுவனத்தின் ரகசியங்களைக் காக்குமாறு ஊழியர்களை கேட்டுக்கொள்கிறோம். ட்விட்டர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இதுவரை கடுமையாக உழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று இந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வேலைக்கு வரச்சொல்லி யாருக்கெல்லாம் கடிதம் அனுப்பப்படுகிறதோ, அவர்களை மட்டும் அலுவலகத்துக்குள் அனுமதித்தால் போதும் என்று ட்விட்டர் நிர்வாகத்துக்கு எலன் மஸ்க் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ட்விட்டர் தரவுகளை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எலன் மஸ்க் எடுத்திருக்கிறார்.
கடந்த 2021-ம் ஆண்டில் உள்ள கணக்குப்படி ட்விட்டர் நிறுவனத்தில் 7,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பாதிப் பேரை வீட்டுக்கு அனுப்புவதுதான் எலன் மஸ்கின் திட்டம். இந்த நடவடிக்கைக்கு பிறகு பணியாற்றும் ஊழியர்களையும் வாரத்தின் 7 நாட்களும் 12 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஊழியரும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றும் அளவுக்கு வேலை இருக்கும்போது எதற்காக பாதி ஊழியர்களை எலன் மஸ்க் வேலையை விட்டு அனுப்பவேண்டும் என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். அதற்கும் எலன் மஸ்க் தரப்பு பதில் வைத்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக 44 பில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுத்திருக்கிறார் எலன் மஸ்க். இதில் 13 பில்லியன் டாலர்களை அவர் கடனாக வாங்கித்தான் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தை அவர் வேகமாக திருப்பி அடைக்கவேண்டி உள்ளது. இந்த சூழலில் ட்விட்டருக்காக மேலும் செலவழிக்க அவர் தயாராக இல்லை அதனால்தான் பாதி ஊழியர்களை குறைக்கிறோம் என்கிறது எலன் மஸ்க் தரப்பு.

ஆனால் எலன் மஸ்கின் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையால் அந்நிறுவனத்துக்கு பாதிப்புதான் வரும். மார்க்கெட்டிங் உள்ளிட்ட விஷயங்களை கவனிக்க ஆள் இல்லாமல் ட்விட்டர் நிறுவனம் முடங்கக்கூட வாய்ப்புகள் உள்ளன என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் எச்சரித்துள்ளது. அதேபோல் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் மனநிலையும் பாதிக்கப்பட்டு அவர்களின் உற்பத்தி திறன் பாதிக்கப்படலாம் என்று பல்வேறு வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள்.

ஆனால் யார் என்ன சொன்னாலும், தான் நினைத்ததைத்தான் செய்வேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் எலன் மஸ்க். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...