”என்னாச்சு எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டு பொங்கியிருக்கிறாரே? கட்சியில் விசுவாசிகள் இல்லைனு புலம்பியிருக்கிறாரே?” என்று அலுவலகத்துக்குள் வந்த ரகசியாவிடம் கேட்டோம்.
“ஆமாம். அதுக்கு காரணம் இருக்கு. அதை பின்னாடி சொல்கிறேன். அப்போதுதான் உங்களுக்குப் புரியும்” என்று செய்திகளை சொல்லத் தொடங்கினாள்.
“கவுதமி எம்.பி.ஆகிறார்”
‘அப்படியா?”
“ஆமாம். அதிமுக பரப்புரை சிறப்பாக செய்ததற்காக அவரை எம்.பி.யாக்க எடப்பாடி முடிவு செய்திருக்கிறாராம். அது மட்டுமில்லாமல் திமுக தரப்பில் கமலை எம்.பி.யாக்குகிறார்கள். கமலும் கவுதமியும் நாடாளுமன்றத்துக்குள் நுழையப் போகிறார்கள்” என்று சிரித்தாள் ரகசியா.
”சரி, எடப்பாடி மன வருத்தத்தைப் பத்தி சொல்லு”
“சொல்றேன். அதுக்கு முன்னாடி திமுகவைப் பத்தி சொல்லிடறேன். திமுகலதான் தேர்தலுக்கு பின்னால பெரிய அளவுல மாற்றங்கள் இருக்கும்னு சொல்றாங்க. தேர்தலுக்காக பல தொகுதிகள்ல சுற்றுப்பயணம் செஞ்ச முதல்வருக்கு நெருக்கமானவர்கள், அதுபத்தி முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க. கட்சியில பல இடங்கள்ல கோஷ்டி பூசல்கள் இருக்கு. அதையெல்லாம் சரி செய்யலைன்னா 2026 தேர்தல்ல பெரிய தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும்னு முதல்வருக்கு எச்சரிக்கை செஞ்சிருக்காங்க. முதல்வரும் அந்த ரிப்போர்ட்டை வாங்கி வச்சுட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மாற்றங்களை செய்யறதா சொல்லி இருக்கார்.”
“என்ன மாதிரி மாற்றங்கள் இருக்கும்?”
”திமுக தோக்கிற தொகுதிகள்ல இருக்கிற மந்திரிங்க, மாவட்ட செயலாளர்களுக்கு சிக்கல் வரும். அவங்களை பதவில இருந்து தூக்குறதுக்கும் வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க”
”ஸ்டாலின் அப்படி தடாலடியா நடவடிக்கை எடுப்பாரா? டவுட்டா இருக்கே”
“உண்மைதான். ஆனா தேர்தல் முடிந்ததும் எடுக்கிற எக்சிட் கருத்துக் கணிப்பை திமுக எடுத்துருக்குனு சொல்றாங்க. அதன்படி திமுக கூட்டணிக்கு சில தொகுதிகள் டஃப்னு வந்துருக்கு”
“என்னென்ன தொகுதிகள்?”
“பொள்ளாச்சி, தர்மபுரி, கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி,ராமநாதபுரம், தேனி வேலூர்னு 8 தொகுதிகளை பத்தி டவுட்டா சொல்லியிருக்காங்க”
“இதைப் பாத்ததும் முதல்வர் டென்ஷனாயிட்டாராம். எதிரணி பிரிஞ்சு இருக்கு. அப்படி இருக்கும்போது அவங்க எப்படி டஃப் கொடுக்க முடியும்னு கேட்டிருக்கிறார். அங்கலாம் நம்ம ஆளுங்க சரியா வேலை பார்க்கலனு தகவல் சொல்லியிருக்காங்க போல. இந்தத் தொகுதிகள்ல தோத்தாலோ இல்ல மார்ஜின் குறைஞ்சாலோ நிச்சயம் நடவடிக்கை இருக்கும்னு சொல்றாங்க”
“இத்தனை தொகுதிகள்ல திமுக வீக்கா இருக்கா? ஆச்சரியமா இருக்கே?”
“பொள்ளாச்சில அதிமுகவுக்கு எஸ்.பி.வேலுமணி கடுமையா வேல பாத்திருக்கிறார்”
“ஆனா அவர் கோவைல அதிமுகவுக்கு வேலை பார்க்காம அடக்கமா இருந்துட்டார்னு சொல்றாங்களே?”
“ஆமாம். அப்படிதான் நானும் கேள்விப்பட்டேன். அவருக்கும் பாஜகவுக்கும் கோவை தொகுதில ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துருச்சுனு அதிமுகவினரே சொல்றாங்க. பொள்ளாச்சியோட தன்னோட கடமையை முடிச்சுக்கிட்டாராம்”
“அப்போ கோவைல அண்ணாமலை ஜெயிச்சுடுவாரா?”
“இதுதான் எடப்பாடி பழனிசாமியோட கோபம். அதனாலதான் அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டத்துல புலம்பித் தள்ளிட்டாராம். நம்ம கட்சிக்காரங்களே நம்ம காலை வாரி விடுறாங்க. அண்ணாமலைக்காக வேலை செய்யறாங்க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்துல இது நடக்குமா? அண்ணாமலையை ஜெயிக்க விட்டா அவர் அதிமுகவையே காலி பண்ணிடுவார். அதுக்கு அதிமுகவினரே துணை போகலாமானு கேட்டிருக்கிறார்”
”ஐயோ பாவம். தனி மனிதனா ஆகிட்டார் போல. தேர்தல் முடிஞ்சு ரிசல்ட் வந்தா இன்னும் கஷ்டமாகிடுமே?”
“ஆமாம். அந்தக் கவலை இப்பவே எடப்பாடிக்கு வந்துடுச்சு”
”அப்ப கோவைல அண்ணாமலை ஜெயிச்சுடுவாரா?”
“அண்ணாமலை உற்சாகமா இருக்கிறார். அந்த உற்சாகத்துல கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு போயிட்டார். பாஜகவினருக்கு கோவைல ஜெயிச்சுடணும்கிறது நோக்கம். அப்படி ஜெயிக்கலனா கூட மார்ஜின் கம்மியா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அதுக்காகதான் ஒரு லட்சம் ஓட்டை காணோம்னு அண்ணாமலை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்”
”சரி, மத்த தொகுதிகள்ல எப்படியிருக்கு?”
“தர்மபுரில பாமக கடுமையான பிரச்சாரம் பண்ணியிருக்கு. வைட்டமின்களுக்கு இறக்கியிருக்காங்க…வேலூர்ல ஏசி சண்முகம் பணத்தை தண்ணியா செலவழிச்சிருக்கிறார். கள்ளக்குறிச்சில அதிமுக வேட்பாளர் ரொம்ப ஸ்ட்ராங்க். ராமநாதபுரத்துல ஓட்டெல்லாம் பிரியுது. அதுல ஓபிஎஸ்க்கு லாபம்னு சொல்றாங்க. தேனில திமுக நினைக்கிற அளவு பெரிய வெற்றி பெற முடியாதுனு சொல்றாங்க..இன்னொரு முக்கியமான விஷயம்.”
‘என்ன?”
“இந்தத் தேர்தல்ல திமுகவினர் பணத்தை இறக்கவே இல்லனு சொல்றாங்க. ரொம்ப குறைச்சலான இடத்துலதான் பணத்தை இறக்கியிருக்காங்க”
“ஏன் அப்படி?”
“ஸ்டாலினும் அதைதான் விரும்புகிறார்னு சொல்றாங்க. பணம் செலவழிக்கிற பழக்கத்தை கொஞ்ச கொஞ்சமா குறைக்கணும்னு சொல்லியிருக்கிறார். பலவீனமா இருக்கிற இடத்துல மட்டும் செலவழிச்சா போதும்னு சொன்னாராம்”
“தேர்தல் முடிவுகளுக்கு பிறகாவது உதயநிதிக்கு பிரமோஷன் கிடைக்குமா?”
“கிடைக்கலாம். தேர்தல் முடிவுகள் முடிந்ததும் மத்தியில் ஆட்சி பொறுப்பு யாரென்று தெரிந்த பிறகு வெளிநாடு பயணத்துக்கு முதல்வர் யோசித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். அப்போது அமைச்சரவையில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம்”
“கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாரும் முதல்வரைச் சந்திச்சு இருக்காங்களே…”
“தேர்தல்ல தங்களுக்கு ஆதரவா பிரச்சாரம் செஞ்சதுக்காக நன்றி சொல்ல அவங்க முதல்வரை சந்திச்சிருக்காங்க. அப்ப அவங்ககிட்ட பேசின முதல்வர், உங்க கட்சிகளை சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடியே நீங்க வலுப்படுத்தணும். அப்பதான் சட்டமன்ற தேர்தல்ல நம்மளால ஜெயிக்க முடியும்னு சொல்லி இருக்கார்.”
“இஸ்லாமியர்களைப் பத்தி மோடி பேசின பேச்சுக்கு பல தரப்புகள்லயும் இருந்து எதிர்ப்பு வந்திருக்கே?”
“முதல் ரவுண்ட் தேர்தல் தொடர்பா பாஜக நடத்தின ஆய்வு முடிவு அந்த கட்சிக்கு சாதகமா இல்லைன்னு சொல்றாங்க. அதனாலதான் இந்துக்கள் ஓட்டை வாங்குறதுக்காக அவர் அப்படி பேசினார்னும் சொல்லப்படுது. ஆனா இந்த பேச்சுனால நடுநிலையாளர்களோட வாக்குகள் போயிடுமோன்னு கட்சியில இருக்கிற இரண்டாம் கட்ட தலைவர்கள் பயப்படறாங்களாம்.”
”இப்படி பேசுனா இந்துக்கள் ஓட்டு விழும்னு பாஜகவினர் நம்புறாங்களா?”
‘ஆமாம். நிச்சயமா வடக்கு மக்கள் ஆதரிப்பாங்கனு நினைக்கிறாங்க. அங்க இவங்களுக்கு ஓட்டு போட்டுட்டு இங்க வந்து வேலை தேடுறாங்க அந்த வட நாட்டு மக்கள்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.