மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள டிஆர்டிஓ (Defence Research and Development Organisation) அமைப்பின் பொறியியல் பிரிவு தலைவர் டலோலி கூறியதாவது: போர்க்களம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின்போது வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ரோபோக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக மனிதர்களை போன்ற ரோபோ வீரர்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளாக மாதிரி ரோபோக்களை தயார் செய்திருக்கிறோம். இந்த ரோபோக்கள் கடினமான மலைப்பகுதிகளில் எளிதாக ஏறிச் செல்லும். நாம் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று செயல்பட ரோபோக்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறோம். இவ்வாறு டலோலி தெரிவித்தார்.
ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கூறியதாவது: இந்திய ராணுவத்துக்காக மனிதர்களை போன்று கை, கால்களுடன் ரோபோ வீரர்களை தயார் செய்திருக்கிறோம். இந்த ரோபாக்களின் உடல் பகுதியில் இலகுரக ஆயுதங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் போர்க்களத்தில் முன்னேறி செல்வது, கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்வது, ஆபத்தான ரசாயனங்களை கையாளுவது, ஆயுதங்களை இழுத்து வருவது ஆகிய கடினமான பணிகளை ரோபோக்கள் மூலம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.