அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம், கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘‘டான்’ படம் மாதிரி டிராகன் இருக்கிறது. தனுஷ் மாதிரி பிரதீப் நடிக்கிறார் என்று கடும் விமர்சனங்கள் வந்தன. ஆனால், படம் பெரிய வெற்றி அடைந்துள்ளது. இதுவரை 60 கோடியை தாண்டிய நிலையில், இந்த வாரம் 100 கோடி எட்டும் என்று கூறப்படுகிறது
இது குறித்து சினிமா வட்டாரங்கள் கூறியது ‘‘2025ம் ஆண்டு தமிழ்சினிமாவில் அதிக வெற்றி கிடைக்கவில்லை. மதகஜராஜா, குடும்பஸ்தன் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. ஆனாலும், இந்த படங்கள் 100 கோடி வசூலை ஈட்டவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிராகன் படத்துக்கு நல்ல வரவேற்பு. குறிப்பாக, இளைஞர்களை படம் ஈர்த்துவிட்டது. அதனால், அவர்கள் மீண்டும், மீண்டும் படம் பார்க்க வருகிறார்கள்.
இதுவரை 60 கோடி வசூலை அள்ளியுள்ளது. தெலுங்கிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. தமிழகம், இந்தியா தவிர வெளிநாடுகளிலும் படம் நன்றாக ஓடி வருகிறது. இந்த படத்துடன் தனுஷ் நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், டிராகன் அளவுக்கு பெரிய வசூலை அள்ளவில்லை. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தமிழ்சினிமா வியாபாரம், வெற்றி குறைவு என பேசப்பட்ட நிலையில், டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட வெற்றி ஆறுதலை தந்துள்ளது.
அஜித் நடித்த விடாமுயற்சி படம் தோல்வி அடைந்த நிலையில், இப்போது தமிழ்சினிமா சற்று உற்சாகமடைந்துள்ளது. ப.பாண்டி, ராயன் படங்களுக்குபின் 3வமுறையாக இயக்குனராக தனுஷ் வெற்றி பெற்றுள்ளார். ஓ மை கடவுளே படத்துக்குபின், 2வது முறையாக அஷ்வத் மாரிமுத்து ஜெயித்துள்ளார்.