மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்
இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் இன்று (நவ.,14) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 79,00 மருத்துவமனைகள், 45,000 டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, நவ.14-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகியவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்படும்.
மருத்துவர் மீதான கடுமையான தாக்குதலை கண்டிக்கவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
முன்னதாக, அரசு மருத்துவர் சங்கங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாலும், அதற்கான ஆணைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவருடன் அமைச்சர் சந்திப்பு
இளைஞரின் தாக்குதலால் படுகாயமடைந்த சென்னை அரசு மருத்துவர் பாலாஜி, ‘நான் நலமுடன் இருக்கிறேன்.’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தன் உடல்நிலை பற்றி விவரித்துள்ளார்.
அமைச்சர், எப்படி இருக்கிறீர்கள் பாலாஜி? எனக் கேட்க, கையில் இருக்கும் உணவை உட்கொண்டு காட்டி, ‘இதோ நன்றாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். மருத்துவர் பாலாஜியின் கைகளைக் குலுக்கி அமைச்சர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர் பாலாஜி, “நான் நலமுடன் உள்ளேன். தலைக்காயங்களுக்கு தையல் போட்டுள்ளனர். ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுத்துள்ளனர். எனக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் நிலை என்னவென்று சோதனை செய்துள்ளனர். இசிஜி எடுத்துள்ளனர். இன்னும் பல பரிசோதனைகளும் செய்துள்ளனர்” என்று தனது நலம் பற்றியும், தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியும் கூறியுள்ளார்.