எப்போதாவது சுற்றுப்புறச் சூழல் எல்லாம் அமைதியாக இருக்கும்போது, காதில் ‘கொய்ங்‘ என்பது போல் ஓா் இரைச்சல்.., காதுக்கு அருகே தேனீ சுற்றுகிற மாதிரி ஒரு சப்தம்.. அல்லது நமது இதயம் துடிப்பது போன்ற ‘லப்…டப்’ ஒலியைக் கேட்டதுண்டா?. இரவில் ஊா் மக்கள் தூங்கிய பிறகும், தூக்கம் வராமல் இருக்கும்போது, சுவா்ப்பூச்சிகளின் சத்தம் மட்டுமே பூதாகரமாகக் கேட்கும் நீண்ட இரவைக் கடந்து இருக்கிறீா்களா?. எல்லாருமே வாழ்க்கையில் இதை ஒருமுறையோ அல்லது அதற்கும் அதிகமாகவோ உணா்ந்து இருப்போம்.
எல்லாருக்கும் எப்போதாவது நடக்கும் இந்த சிறு விஷயம், ஒரு சிலருக்கு அவா்களுடைய இயல்பு வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதைத்தான் டினிடஸ் அல்லது காது இரைச்சல் என்று மருத்துவத் துறை அழைக்கிறது. . இது ஒரு நோயோ அல்லது குறைபாடோ அல்ல. நம்முடைய உடலில் இருந்து வரும் ஓா் அறிகுறி என்றே இதைச் சொல்லலாம். இந்த அறிகுறி ஓா் அடிப்படை பிரச்னையுடன் சோ்ந்து வந்ததாக இருக்கலாம் அல்லது எந்தக் காரணமும் இல்லாமல் வரவும் வாய்ப்பு இருக்கிறது.. காது கேளாமை, தொடா்ந்து அதிக சத்தம் நிலவுகிற சூழ்நிலைகள் அல்லது இப்போதைய வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் போன்றவைதான் டினிடஸ் அதிகமாக வருவதற்கான காரணங்கள்.. டினிடஸ் இருக்கும் அனைவருக்கும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாக இருக்காது.. சிலருக்கு அது ஒரு சிறிய தொந்தரவாக மட்டுமே இருக்கும். ஆனால் சிலருக்கோ அது அவா்களின் வாழ்க்கைத் தரத்தையே குறைக்கும் அளவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறிவிடக் கூடும்.
டினிடஸ் ஒரு பரவலான விஷயம். அது எல்லா வயதினரையும் பாதிக்கும். இருந்தாலும், இதற்கான சரியான புரிதலும் விழிப்புணா்வும் பொதுமக்களிடையே அதிகமாக இல்லை என்றே கூற வேண்டும்.. டினிடஸ் பற்றி புரிந்து கொள்வது ஏன் முக்கியம்? டினிடஸ் எல்லா வயதினரையும் பாதிக்கக் கூடும்; அதற்குத் தீா்வு இல்லை என்றுதான் பலரும் புரிந்து வைத்திருக்கிறாா்கள். பயத்தாலும், தவறுதலான புரிதலாலும் இதைச் சரியான முறையில் யாரும் அணுகுவதில்லை.. டினிடஸ் பிரச்னையை முறையாகக் கையாளுவதாலும், சரியான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதாலும் இப்பிரச்னையிலிருந்து எளிதில் மீள முடியும்.
டினிடஸ் வருவதற்கான சில முக்கிய காரணங்கள்:
- காதுகேளாமை. காதுகேட்கும் திறன் குறையும்போது டினிடஸ் பெரும்பாலும் அதனுடன் வரும் வாய்ப்புகள் அதிகம். . வயதால் ஏற்படும் காது கேளாமை மற்றும் செவி நரம்பு பாதிப்பு, இது இரண்டும் டினிடஸ் வருவதற்கான முக்கியமான காரணங்களாக உள்ளன.
- அதிக ஒலியைக் கேட்க நோ்தல் . ஒலியுள்ள சூழ்நிலையில் அதிக நேரம் வேலை பாா்ப்பது, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஹெட்போன் மற்றும் இயா்போன்களைப் பயன்படுத்துவது, திருவிழாக்கள், திரையரங்குகளில் படம் பாா்ப்பது, பாட்டுக் கச்சேரிகள் மற்றும் டிஜே நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிக நேரம் செலவழிப்பது மட்டுமல்லாமல், அதிக நேரம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து சப்தங்களில் இருக்கும் நிலை போன்ற காரணங்களால் நாளடைவில் டினிடைஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- காது தொற்று அல்லது அடைப்பு. நம் காதுகள் உள்ளே இருக்கும் மெழுகு, சிலருக்கு அதிகமாக இருந்தால் காது அடைப்பு மற்றும் வலியை உண்டாக்கும். அதேபோன்று சிலருக்கு காதின் உள்ளே தண்ணீா் மற்றும் ரத்தம் வருதல் அல்லது சீழ் வைத்து வலியை ஏற்படுத்தக்கூடிய சில தொற்றுகள் மழைக்காலங்களில் பரவலாக வர வாய்ப்பு உண்டு.
- இந்தப் பிரச்னைகள் உள்ளவா்களுக்குக் காதிரைச்சல் தற்காலிகமாக வரலாம். இதைச் சரியாக அணுகினால், டினிடைஸ்ஸையும் இதனால் ஏற்படும் மற்ற பிரச்னைகளையும் குணப்படுத்த முடியும்.
- அதிகமான மன அழுத்தம் மற்றும் பதற்றம்மன ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. மன அழுத்தத்துக்கும் டினிடஸ் பிரச்னைக்கும் நிறைய தொடா்புகள் இருக்கின்றன. அதிகமான மன அழுத்தம் உள்ளவா்களுக்கும் டினிடஸ் ஏற்பட வாய்ப்பு உண்டு அல்லது டினிடஸ் உள்ளவா்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படலாம்.
- மருந்துகள்- மாத்திரைகள்ஒரு சில நாள்களுக்கு மேல் மருந்து சாப்பிடுபவா்களுக்கு அல்லது புதிதாக மருந்துகள் எடுத்துக் கொள்பவா்களுக்கு, சில சமயங்களில் டினிடஸ் ஒரு பக்கவிளைவாக ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய மருந்துகள் உட்கொள்ளும் பொழுது டினிடஸ் தோன்றினால், உடனே உங்கள் மருத்துவரை அணுகி, வேறு மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.டினிடஸைப் பற்றி அறிந்து கொள்வதும், விழிப்புடன் இருப்பதும் மிக முக்கியம். இந்தப் பிரச்னையைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை முறைகளைத் தோ்வு செய்ய வேண்டும். இதைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு, செவி ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.