No menu items!

அண்ணாமலைக்கு சம்மதமா? -வெங்கய்யா நாயுடுவுக்கு அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்! – மிஸ் ரகசியா

அண்ணாமலைக்கு சம்மதமா? -வெங்கய்யா நாயுடுவுக்கு அமித் ஷா கொடுத்த அசைன்மெண்ட்! – மிஸ் ரகசியா

“தமிழக அரசியல் கட்சிகளுக்கு கொஞ்சம்கூட ரெஸ்ட்டே இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்ததும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவிச்சுட்டாங்க” என்றபடி ஆபீசுக்குள் என்ட்ரி ஆனாள் ரகசியா.

“தேர்தல் தேதியை அறிவிச்ச கையோட திமுக வேட்பாளரை முதல்வர் அறிவிச்சுட்டாரே?”

“ஆமாம். இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல யாரை நிறுத்தலாம்னு அமைச்சர் பொன்முடிகிட்ட ஆலோசனை எல்லாம் நடத்தலையாம். அவராவே வேட்பாளரை அறிவிச்சிருக்கார். இதுல பொன்முடிக்கு கொஞ்சம் வருத்தம். அதை சரிசெய்யவோ என்னமோ, பொன்முடியோட மகன் கௌதம சிகாமணிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியைக் கொடுத்திருக்கார்.”

“கூடவே தேர்தல் பணிக்குழுவையும் அமைச்சுட்டாரே?”

“ஆமாம். இந்த முறை அமைச்சர் மஸ்தானுக்கு குழுவுல எந்த முக்கியத்துவமும் கொடுக்கல. அவரை கூப்ட்டு, ‘உங்களைப் பத்தி தேவையில்லாத செய்திகள் எல்லாம் வருது. பார்த்து கவனமா இருங்க’ன்னு எச்சரிச்சிருக்கார். கூடவே தேர்தல் பணிக்குழுவை, நாடாளுமன்ற தேர்தல்ல ஜெயிச்சதால இந்த தேர்தல்ல ஈஸியா ஜெயிச்சுடலாம்னு கனவு காணாதீங்க. தீவிரமா வேலை பாருங்கன்னு எச்சரிச்சாராம்.”

“இந்த இடைத்தேர்தல்ல நிக்கறதுல பாமகவும் தீவிரமா இருக்கே?”

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தின ஆலோசனைக் கூட்டத்தில் பேசின டாக்டர் ராமதாஸ், ‘இனி நான்தான் முடிவெடுப்பேன். நீங்க செயல்படுத்தினால் மட்டும் போதும்’னு சொல்லி இருக்கார். டாக்டர் ராமதாஸை பொறுத்தவரை திரும்பவும் அதிமுகவோட செர்றது பத்தி யோசிக்கிறார். ஆனால் அன்புமணி ராமதாஸுக்கு இது பிடிக்கலை. ஆலோசனைக் கூட்டத்துல ராமதாஸ் பேசினதைப் பத்தி கேள்விப்பட்ட அண்ணாமலை பயந்து போய் அன்புமணி ராமதாஸ் கிட்ட பேசி இருக்கார். ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு நீங்க வேட்பாளரை அறிவியுங்க. நான் வந்து பிரச்சாரம் செய்யறேன்’ன்னு அன்புமணியை குழப்ப தொடங்கி இருக்கார்.”

“அதிமுக இந்த தேர்தல்ல போட்டி போடுமா?”

“எடப்பாடிக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்லை. இடைத்தேர்தல்னாலே ஆளும் கட்சிதான் ஜெயிக்கும். நாம வேற வேட்பாளரை நிறுத்தி அசிங்கப்படணுமான்னு நினைக்கிறார். ஆனா அங்க வேட்பாளரை நிறுத்தியே ஆகணும்னு சி.வி.சண்முகம் ஒத்தைக் கால்ல நிக்கறாராம்.”

“சந்திரபாபு நாயுடுவோட பதவியேற்பு விழா நிகழ்ச்சியில முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துக்கிட்டாரே?”’

“ஆந்திரால தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி அமைய முக்கிய காரணமா இருந்தவர் அவர்தானாம் அதனால அவரை சிறப்பு அழைப்பாளரா கூப்டிருக்காங்க. இப்ப அவர்கிட்ட இன்னொரு அசைன்மெண்டை அமித் ஷா கொடுத்திருக்கார். தமிழகத்துல பாஜகவோட கூட்டணி வைக்க அதிமுகவை சம்மதிக்க வைக்கிறதுதான் அந்த அசைன்மெண்ட்.”

“அதுக்கு அண்ணாமலை சம்மதிக்கணுமே?”

“அவரை ஏற்கெனவே மந்திரிச்சு விட்டிருக்காங்க. அங்கங்க போய் ஏதாவது பேசி வம்புல மாட்டிக்க கூடாதுன்னு அவர்கிட்ட கட்சித் தலைமை சொல்லி இருக்கு. அதனாலதான் இனி விமான நிலையம் போன்ற இடங்கள்ல பேட்டி கொடுக்க மாட்டேன். இனி கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் பேட்டி கொடுப்பேன்னு சொல்லி இருக்கார். அண்ணாமலை மட்டும் இல்லை. மற்ற தலைவர்களும் எங்கேயாவது ஏடாகூடமா பேட்டி கொடுத்துடக் கூடாதேன்னுதான் இனி கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் பேட்டி கொடுக்கணும்னு கட்சித் தலைமை உத்தரவு போட்டிருக்கு.”

‘சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழால பிரதமர்ல இருந்து ஓ.பன்னீர்செல்வம் வரைக்கும் பலரும் கலந்துக்கிட்டாங்க. ஆனா முக்கியமான ஒரு ஆள் கலந்துக்கலை பார்த்தியா?”

“நீங்க நிதீஷ் குமாரைத்தானே சொல்றீங்க? இதைப் பத்திதான் இப்ப எதிர்க்கட்சிகள் பேசிட்டு இருந்தாங்க. இத்தனைக்கும் தனிப்பட்ட முறையில் சந்திரபாபு நாயுடு அவரை விசேஷமா கூப்டிருந்தார். அப்படியும் அவர் வரலை. தேசிய ஜனநாயக கூட்டணியில இப்ப ரெண்டாவது முக்கிய கட்சி எதுங்கிறதுல தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையில ஒரு உரசல் இருக்கு. அதனாலதான் அவர் வரலைன்னு சொல்றாங்க. அதனால இப்ப பாஜக கூட்டணி கட்சிகள் நிதிஷ் குமாரை சந்தேகமா பார்க்கிறாங்க. நிதிஷ் குமாருக்கு பதிலா ஒரு மாற்று ஏற்பாட்டைப் பார்க்கணும்னு அமித் ஷாகூட தனக்கு நெருக்கமானவர்கள்கிட்ட சொன்னாராம்.”

“பாத்துருவாங்களா?”

“கையில காசும் இருக்கு..பவரும் இருக்கு…மாற்று ஏற்பாட்டை வாங்கிட முடியாதா?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...