பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ நாளை வெளியாகிறது. முதலில் இந்த படத்தில் நடித்தவர் சூர்யா. அவர் சில காரணங்களால் விலக, அருண்விஜய் ஒப்பந்தமானார். பாலா படங்கள், அவர் படப்பிடிப்புகள் எப்படி இருக்கும் என்று கோலிவுட்டுக்கே தெரியும். இந்நிலையில், வணங்கான் படத்தில் பாலா கொடுமைப்படுத்தினாரா? என்று அருண் விஜயிடம் கேட்டபோது அருண்விஜய் சொன்ன பதில்…
‘பாலாவின் படங்கள் எப்படி இருக்கும் என உலகிற்கே தெரியும். இந்த படம் தொடங்கியபோது நீங்க உடற்பயற்சி செய்ய வேண்டாம் என்றார். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. படம் பார்த்தபோது புரிந்தது. என் ஹேர் ஸ்டைலையும் அவர் மாற்றினார். ஆக்ஷன் காட்சிகள் எடுத்தபோது சில அடிகள் பட்டது. நான் டூப் பயன்படுத்தப்படவில்லை. இதெல்லாம் படப்பிடிப்பில் சகஜம். தவிர, எனக்கு முந்தைய படங்களில் பல முறை அடிபட்டு இருக்கிறது. எலும்பில் பிரச்சினை வந்து, கட்டு போட்டு இருக்கிறேன். அதனால், அது பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. படம் நன்றாக வர வேண்டும் என்று அனைவரும் உழைப்பது வாடிக்கையானதுதான்.
துபாய் கார் ரேசில் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டதை கேட்டு பதறிப் போனேன். அந்த விபத்து குறித்து, அஜித்சார் உடல்நிலை குறித்து உடனே விசாரித்தேன். அவருக்கு அடி இல்லை. மறுநாளே இன்னொரு ரேஸ் பயிற்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டார் என்று சொன்னபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. வணங்கான் படம் குறித்து சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டியிருக்கிறார்கள். பொதுவாக பாலா படங்களுக்கு அதிகளவில் தேசியவிருது கிடைக்கும். இந்த படத்துக்கும் கிடைத்தால் மகிழ்ச்சி
கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்தபோது மக்கள் கூட்டத்தில் பல நாள் ஓடிக்கொண்டு இருந்தேன். அப்படி படப்பிடிப்பு நடந்தது. அந்த கெட்அப், ஹேர்ஸ்டைல் காரணமாக மக்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நெருங்கி வந்து பார்த்தபோதுதான் அட, அருண்விஜய் என்றார்கள். அந்த அளவுக்கு என்னை மாற்றியிருக்கிறார் பாலா.
வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்தபோது என் குடும்பத்தினர் ‘‘நீயா இது’’ என்று ஆச்சரியப்பட்டனர். வணங்கான் எப்படிப்பட்ட கதை, கிளைமாக்ஸ் ‘காந்தாரா’ மாதிரி இருக்குமா என்று கேட்கிறார்கள். படம் பார்த்துவிட்டு அதை தெரிந்துகொள்ளுங்கள். விடாமுயற்சிக்கு முன்பே வணங்கான் படம் வருவதாக இருந்தது. விடாமுயற்சி அறிவிப்பு வந்தவுடன் மகிழ்திருமேனியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். சில காரணங்களால் விடாமுயற்சி வரவில்லை அது வருத்தம் தருகிறது. அந்த படம் எப்போது வந்தாலும் வெற்றி பெறும்.