தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவாரை 11,743 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெங்குவின் தீவிரத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு என்பது 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் இறப்பு என்பது 4 என்ற எண்ணிக்கையிலேயே உள்ளது. அந்த 4 பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்துள்ளது. மேலும், அதிலும் ஒரு சிலர் மருத்துவமனைக்கு வராமலேயே இறந்துள்ளனர்.இன்னும் அடுத்து வர இருக்கிற நான்கு மாதங்களில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அதனால் எல்லாத் துறைகளும் ஒருங்கிணைத்து இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என நேற்றைய தினம் அறிவுறுத்தப்பட்டது” என்றார்.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளில் 25 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலுரும், நகர்ப்புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.