No menu items!

குறையும் மக்கள் தொகை – கவலையில் ஸ்டாலின், நாயுடு

குறையும் மக்கள் தொகை – கவலையில் ஸ்டாலின், நாயுடு

மக்கள் தொகையை குறைப்பது தொடர்பாக ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இப்போது அதற்கு நேர்மாறான சிந்தனை அரசியல்வாதிகள் மத்தியில், குறிப்பாக தென்னிந்திய அரசியல்வாதிகள் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் கூடுதல் சலுகைகள்:

2 நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் குறைந்துவரும் மக்கள் தொகையைப் பற்றி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்திருந்தார். அமராவதி நகரில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்து பேசிய அவர், “ஆந்திர மக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக்கொள்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், “இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது என முன்பிருந்த சட்டத்தை நீக்கியிருக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இனி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவருவோம்” என அவர் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் கருத்து:

இந்த சூழலில் அறநிலையத் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், “தம்பதியர்கள் இன்றைக்கு மணவிழாவை முடித்திருக்கிறீர்கள். நீங்கள் மணவிழாவை முடித்து உங்களுடைய செல்வங்களை பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். முன்பெல்லாம் செல்வங்கள் என்று சொல்கின்றபோது 16 பெற்று பெறுவாழ்வோடு வாழவேண்டும் என்று சொல்வார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல. 16 செல்வங்கள். இதனை கி.ஆ.பெ. விசுவநாதம் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் ஆகியவைதான் 16 செல்வங்கள். அந்த 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று தான் அன்றைக்கு வாழ்த்தினார்கள். இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகள் குறைந்தால் ஏன் 16 பிள்ளைகளை பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற நிலை வந்திருக்கிறது” என்றார்.

காரணம் என்ன?

மக்கள் தொகை குறைவது பற்றி தமிழக மற்றும் ஆந்திர முதல்வர்கள் கவலைப்படுவதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம், வரிப் பகிர்வு. இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் வரி வருவாய் பகிர்ந்துகொள்ளப்படுவதற்கு முக்கியக் காரணியாக, அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மக்கள் தொகை குறைந்து வருவதால், வரி வருவாய் பகிர்வு குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இரண்டாவதாக, நாடாளுமன்ற தொகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யப்படுவது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், மக்கள் தொகையை குறைத்த தென் மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள தொகுதிகள் குறையலாம் அல்லது வட மாநிலங்களில் உள்ள தொகுதிகள் அதிகரித்து, தங்கள் செல்வாக்கு குறைக்கப்படலாம் என அஞ்சுகின்றன.

தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மக்கள் தொகை குறைவதை நினைத்து பயப்படுவதற்கு இவை முக்கிய காரணங்களாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...