முன்னாள் முதல்வர் கலைஞரின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 92 வயதான தயாளு அம்மாள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதிக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வு சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாகவே பொதுவெளிக்கு வருவதை தவிர்த்து வந்தார். சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் இல்லத்துக்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுவந்தார்.
இந்நிலையில் மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நேற்று இரவே அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
தயாளு அம்மாளை பார்ப்பதற்காக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேற்றிரவு சுமார் 1 மணிநேரம் மருத்துவமனையிலேயே இருந்தனர். இன்று காலையும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து தயாளு அம்மாளின் உடல்நலம் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
மு.க.அழகிரி, செல்வி, மு.க.தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
தயாளு அம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
தயாளு அம்மாள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கலைஞரின் வாழ்க்கை இணையரும், முதல்வர் ஸ்டாலின் தாயாருமான தயாளு அம்மையார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தோம். உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு, விரைவில் அவர் நலம் பெற்று, இல்லம் திரும்ப விழைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.