தமிழ் சினிமாவில் நிஜக் கதைகளை வைத்து எடுக்கும் படங்களே எப்போதும் அரைகுறை அவியலாக படைக்கப்படும். ஆனால் சின்ன சம்பவத்தை வைத்துக் கொண்டு அதிர வைக்கும் ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் அப்பா, அம்மா, தம்பி கலையரசன் மனைவி ரித்விகா ஆகியோருடன் வசித்து வருகிறார் தினேஷ். தற்காலிக வனக்காலவர் பணியிலிருக்கும் முருகன், எப்படியாவது நிரந்தர பணியாளராக ஆக வேண்டுமென்ற கனவோடிருக்கிறார்.
இந்நிலையில், வனத்துறையின் அராஜகங்களை தினேஷ் தட்டிக்கேட்டதால், தம்பி கலையரசன் தற்காலிக பணி பறிபோகிறது. நக்சலைட்டுகளை அழித்தொழிப்பு செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படையில் ஆள்சேர்ப்பு நடப்பதாக அறியும் தினேஷ், விவசாய நிலத்தை விற்று, அதற்கான பயிற்சிக்கு தம்பியை அனுப்புகிறார்.
குடும்பத்தின் வறுமை, அதனால் தடைப்படும் காதல் திருமணம், காத்திருக்கும் காதலி, அண்ணன் நம்பிக்கை எனப் பல கனவுகளோடு, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்கிறார் கலையரசன். ஆனால் அங்கு நடக்கும் சம்பவங்கள் அவர் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.
கலையரசன் கண்களில் கனவும், குடும்பத்தின் கவலையும் படர படம் முழுவதும் வந்து பாத்திரத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார். ஒரு பக்கம் காதல் இன்னொரு பக்கம் வேலை நிலைக்குமா என்கிற பயம். என்று பல்வேறு முகபாவம் காட்டி தன் பாத்திரத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். காதலி வின்ஸூ சாம் மீது காட்டும் அன்பும், வனத்தின் மீது காட்டும் பாசமும் சம அளவில் கொடுத்து நடித்திருக்கிறார்.
தம்பியை வஞ்சிக்கும் வனத்துறையை தன் கொதிக்கும் பார்வையால் சுடும் தினேஷ், மனைவி ரித்விகாவை பிரிய மனமில்லாமல் வனத்திற்குள் செல்லும் இடம் மனம் கலங்குகிறது. உள்ளூர் அரசியல்வாதியாக வரும் வேட்டை முத்துக்குமாரை எதிர்த்து அவர் சந்திக்கும் இன்னல்கள் அதிகார சமூகத்தின் முகத்தைக் காட்டுகின்ற காட்சிகள்.
சபீர் கல்லரக்கல் திமிருடன் நடந்துகொள்ளும் காட்சிகளில் வெறுப்பை சம்பாதிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார்.
யுவன் மயில்சாமி, அருள் தாஸ் இருவரும் தங்கள் பங்கிற்கு மிரட்டுகிறார்கள். காதல் காட்சியில் வின்ஸு சாம், பொறுப்பான மனைவியாக ரித்விகா, பாலசரவணன் என்று பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஜார்கண்ட் பகுதியின் காவல் உயரரதிகார்களாக வருபவர்களும், அந்த பயற்சி களமும் திகில் மூட்டுகிறது.
ஓளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா இயற்கையான காடுகளையும், பயிற்சிக் மையத்தையும் பயத்துடன் காட்டியிருக்கிறார். படம் முழுவதும் அவரின் பங்கு அளப்பரியது.
அரசின் ரகசிய திட்டங்கள், அதற்கு பலியாகும் காவலர்கள் என்று நகரும் காட்சிகள் நிகழ்கால சம்பவங்களை ஒப்பீடு செய்து பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. இந்த இடங்களில் பிரவீன்.கே.எல். கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசை பதட்டப்படுத்துகிறது. உமாதேவி, தனிக்கொடி வரிகளில் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. ஆனால் கலையரசன் காதலுக்காக ஓ பிரியா ஒ பிரியா பாடலையும், மனிதா மனிதா இனி உன் விழிகள்.. பாடலை தினேஷின் போர்க்குணத்திற்கும் பயன்படுத்தியிருப்பது கச்சிதம்.
தங்களின் அரசியலுக்காகவும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் போலி நகசல்களை உருவாக்கி அவர்களை அரசியல் பலி கொடுப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதையாடலை கையில் எடுத்திருப்பதற்கு அதியன் ஆதிரைக்கு பாராட்டுக்கள்.