சைரஸ் மிஸ்திரி. இந்திய தொழில் உலகத்தின் இளம் ஹீரோ. 29 லட்சம் கோடி சொத்துக்கு வாரிசு. டாடா குழுமத்தின் தலைவராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். 54 வயதுதான். நொடியில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவரது மரணம் உலகெங்கும் தலைப்பு செய்தியாகியிருக்கிறது.
சைரஸ் மிஸ்திரியின் குடும்ப நிறுவனத்துக்கு 157 வயதாகிறது. சைரஸ் மிஸ்திரி மூன்றாம் தலைமுறை வாரிசு. ஷப்பூர்ஜி பலோன்ஜி என்ற நிறுவனத்தின் அடிப்படைத் தொழில் கட்டுமானம். கட்டுமானம் சாதாரண கட்டுமானம் அல்ல, மிகப் பெரிய கட்டிடங்களை எழுப்புவது. அடிப்படை கட்டுமானம் என்றாலும் இந்த 157 வருடங்களில் பல துறைகளில் கால் பதித்துவிட்டார்கள்.
சைரஸ் மிஸ்திரியும் அவரது நண்பர்கள் டாரியஸ் அவரது மனைவி அனஹிதா, ஜஹாங்கீர் மெர்சிடஸ் பென்ஸில் மும்பை நோக்கி வந்துக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்திருக்கிறது. காரை ஓட்டியது அனஹிதா. டாரியஸும் ஜஹாங்கிரும் சகோதரர்கள்.
விபத்தில் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த சைரஸும் ஜஹாங்கீரும் இறந்துவிட்டார்கள். முன் இருக்கையில் இருந்த டாரியசும் அவரது மனைவியும் பிழைத்துக் கொண்டார்கள்.
பொதுவாய் நேரடி மோதல் விபத்தில் பின்பக்கம் உட்கார்ந்திரிப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள், முன் பக்கம் அமர்ந்திருப்பவர்களுக்குதான் காயம் அதிகம் ஏற்படும் மரண ஆபத்தும் அவர்களுக்குதான் அதிகம். ஆனால் இங்கு நேர்மாறாய் நடந்திருக்கிறது.
என்ன காரணம்?
பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை. முன் இருக்கையில் அமந்திருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்கள். இது முக்கியமான வித்தியாசம்.
இவர்கள் பயணித்தது மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்சி மாடல் (2017 GLC 220d 4MATIC). பாதுகாப்பு அம்சங்களுக்காக Euro NCAPயின் ஐந்து நட்சத்திரங்களை பெற்றிருக்கிறது. விலை சுமார் 70 லட்சம் ரூபாய். மொத்தம் 7 பாதுகாப்பு பலூன்கள் இந்த காரில் இருக்கின்றன.
இத்தனை பாதுகப்பான காரில் மரணம் எப்படி ஏற்பட்டது?
வேகம். அதி வேகம். 20 கிலோமீட்டர் தூரத்தை இந்த கார் 9 நிமிடங்களில் கடந்து வந்திருக்கிறது. வேகமாக பயணித்துக் கொண்டிருந்த கார் மும்பைக்கு செல்லும் வழியில் இருந்த பாலங்களில் எந்தப் பாலத்தில் செல்வது என்ற குழப்பத்தில் ஓட்டுநர் ஒரு பாலத்துக்குள் நுழைந்திருக்கிறார். அந்தக் குழப்பம் காரை பாலத்தின் சுவர் மீது மோத செய்திருக்கிறது.
முன் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்திருந்ததனால் அவர்கள் முன்னோக்கி போகவில்லை. முன்னால் இருந்த பாதுகாப்பு பலூன்கள் விரிந்து அவர்கள் முன்னால் மோதாமல் காத்திருக்கின்றன.
ஆனால் பின் இருக்கைகளில் இருந்தவர்கள் சீட் பெல்ட் அணியாததால் முன் இருக்கைகளில் மோதியிருக்கிறார்கள். பின் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு பலூன் முன்னால் கிடையாது. பக்கவாட்டில்தான் உண்டு. அதனால் நேரே மோதியிருக்கிறார்கள். இதுதான் இவர்கள் உயிரிழக்க காரணம் என்று ஆரம்பக் கட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாய் நாம் காரில் பயணிக்கும்போது முன் இருக்கையில் இருந்தால் மட்டுமே சீட் பெல்ட்டுகளை அணிவோம். பின் இருக்கையில் அமரும்போது அதை அணிவதில்லை. ஆனால் மிஸ்திரி விபத்து ஒரு பாடம்.