ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்து கொடுக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டை வைத்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரி சியாமள ராவ் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். பெருமாளின் பிரசாதமாக கருதப்படும் புனித லட்டுவில் பன்றி, மாட்டு கொழுப்பும் மீன் எண்ணெய்யும் கலந்தது எப்படி என பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு நிறுவனம் மீது குற்றச்சாட்டு
இந்த சர்ச்சை குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் பதிலளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், “கடந்த ஜூன் 16 அன்று நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல்வரை (சந்திரபாபு) நேரில் சந்தித்தேன். அப்போது அவர் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தின் தரம் குறித்து என்னிடம் குறிப்பிட்டார். அதன் பிறகு நான் அதில் கவனம் செலுத்த துவங்கினேன்.
இதனிடையே, லட்டுகளின் தரம் குறித்து, பக்தர்களிடம் இருந்து சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து, சமையலறை ஊழியர்களுடன் பொருட்களின் தரம், குறிப்பாக பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து பேசினேன். இதற்கு தீர்வு காண நெய்யின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் சந்திரபாபு உத்தரவுப்படிதான் நெய்யின் தரம் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டது.
கோயில் நிர்வாகத்தில் சோதனை வசதிகள் இல்லாததை நெய் நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆய்வக முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அந்த சமயத்தில் திருப்பதிக்கு 5 தனியார் நிறுவனங்களிடமிருந்து நெய் வாங்கப்பட்டது. அவர்களிடம் நாங்கள் நெய்யின் தரம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகு நான்கு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் தரத்தை மாற்றிக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு நிறுவனம் மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் எனப்படும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் நிறுவனத்திடம் இருந்து 10 டேங்கர்களில் நெய் கொண்டு வரப்பட்டது. அவற்றில் ஆறு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள நான்கு டேங்கர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினோம். சோதனை முடிவுகளில், அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதுடன், அதன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் என்ன சொல்கிறது?
திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமள ராவ் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம், “திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் மே 8-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு, விநியோகம் மே-15 ஆம் தேதியில் துவங்கியது. ஒரு கிலோ நெய்க்கு ரூ.319 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகத்தை துவங்கினோம். ஜூலையில் நாங்கள் மொத்தமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 16 டன் நெய்யை விநியாகித்துள்ளோம். நாங்கள் கலப்படமற்ற தூய்மையான நெய்யைதான் வழங்கினோம்” என்று கூறியுள்ளது.
மேலும், எஸ்.எம்.எஸ் என்ற தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெய்யின் சோதனை முடிவுகளை இணைத்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது ஏ.ஆர் நிறுவனம்.
இதனிடையே, திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் கந்தரபு முரளி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் கருத்தை விமர்சனம் செய்துள்ளார்.