பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பல்வேறு உதவிகளை இந்தியா செய்து வருகிறது. ஆனால் அதற்கு நன்றி காட்டவேண்டிய இலங்கை அரசோ, சீனாவின் உளவுக்கப்பலை சுமார் ஒரு வார காலத்துக்கு தங்கள் துறைமுகத்தில் நிற்க அனுமதி அளித்து இந்தியாவை டென்ஷனாக்கி வருகிறது.
இந்தியாவைப் போலவே இலங்கையும் ஒரு சுதந்திரமான நாடு. மற்ற நாடுகளுடன் நல்லுறவைப் பேண அதற்கும் முழு சுதந்திரம் உண்டு. இந்த நிலையில் சீனாவின் கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தால் நமக்கு என்ன சிக்கல்? நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு முன் சீனாவின் அந்த உளவுக் கப்பலைப் பற்றி பார்த்து விடுவோம்.
சீனாவின் ஜியாங்நான் கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் கட்டப்பட்டிருக்கிறது. 222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலம். கப்பலில் 400 ஊழியர்கள் இருக்கிறார்கள்.
இந்த உளவுக் கப்பலிலிருந்து எதிரி நாடுகளை கூர்ந்து கண்காணிக்க முடியும். கப்பலிருந்துக் கொண்டே எதிரி நாட்டுகளின் கடல், வான் மற்றும் நிலப்பகுதிகளில் ஆயுதங்களின் நகர்வை கண்காணிக்கும் அம்சங்கள் இந்தக் கப்பலில் இருக்கின்றன.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கப்பலுக்குள் உட்கார்ந்துக் கொண்டு அரக்கோணம் கடல்படை தளத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த உளவுக் கப்பலை ஓரிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தால், அந்த கப்பல் நிற்கும் பகுதியில் இருந்து 750 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பில் உள்ள ஏவுகணைகள், விண்கலங்கள், ராக்கெட்களை அதனால் கண்காணிக்க முடியும். அதற்கு தேவையான சக்திவாய்ந்த ராடர்கள் அந்த உளவுக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன என்கிறார்கள்.
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்கள் என பலவற்றையும் இந்தக் கப்பலால் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
உளவுக் கப்பல்கள் தயாரிப்பதில் சீனா ரொம்ப கெட்டி. ‘யுவாங் வாங்’ என்று பெயரிடப்பட்டுள்ள 7 உளவுக் கப்பல்களை சீனா தயாரித்து வைத்துள்ளது.
இப்படி சீனா வைத்துள்ள 7 ‘யுவான் வாங்’ வகை கப்பல்களில் ஒன்றான ‘யுவான் வாங் 5’ கப்பல்தான் இப்போது இலங்கையின் ஹம்பன்டோடா (Hambantota) துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்படுவதற்கு இந்தியா தனது எதிர்ப்பை நேரடியாக தெரிவிக்காமல், சூழலை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்தியாவின் அதிருப்தியைப் புரிந்துக் கொண்ட இலங்கை, கப்பல் வருவதை தள்ளிப் போடுமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் சீனா ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆகஸ்ட் 11ஆம் தேதி வருவதாக இருந்த கப்பல் ஆகஸ்ட் 16ஆம் வந்திருக்கிறது. 22ஆம் தேதி வரை இலங்கை துறைமுகத்தில் இருக்கும்.
இலங்கையின் 2-வது மிகப்பெரிய துறைமுகமான ஹம்பன்டோடாவை மேம்படுத்த 2017-ம் ஆண்டில் சீனாவிடம் உதவி கேட்டது இலங்கை. இந்தியாவை அடுத்துள்ள துறைமுகம் என்பதால் இதற்கு சந்தோஷமாக தலையாட்டிய சீன அரசு, கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து இந்த துறைமுகத்தை மேம்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் அந்த துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கும் எடுத்துள்ளது. துறைமுகம் இலங்கையில் இருந்தாலும் அதன் கட்டுப்பாடு சீனாவிடம்தான். துறைமுகத்தை சீனாவிடம் கொடுக்கும்போதே இந்தியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இலங்கை சீனா பக்கம் நின்றது.
சீனக் கப்பலின் பிரச்சினை இப்படி இருக்கும்போதே, பாகிஸ்தானின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரவும் இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளிடம் நட்பாக இருக்கும் இலங்கையிடம் நாம் நட்பாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.