No menu items!

கோபத்தில் முதல்வர் – பதுங்கிய செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

கோபத்தில் முதல்வர் – பதுங்கிய செந்தில் பாலாஜி – மிஸ் ரகசியா

“ரெண்டு நாள் மழை பெஞ்சு கொஞ்சம் குளிர்ந்துச்சு. அதுக்குள்ள வெக்கை பொளந்து கட்டுது” என்று புலம்பிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா.

“அக்னி தொடங்கிருச்சுல. வெயிலும் வெக்கையும் அதிகமாதான் இருக்கும்” என்று சொல்லி நன்னாரி சர்பத்தை நீட்டினோம்.

“அருமை…நன்றி. ஆனால் இந்த அனலைவிட நம்ம முதல்வரோட கோப அனல்தான் அதிகம் என்கிறார்கள் திமுககாரர்கள்”

“என்னாச்சு?”

”சமீபத்துல நடந்த அமைச்சரவைக் கூட்டத்துலகூட பொரிஞ்சு தள்ளியிருக்காரு.”

“யார் மேல கோபம்?”

“ அன்னைக்கு பல அமைச்சர்கள்கிட்ட கோபமா பேசியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் எந்த அமைச்சர் எந்தப் பிரச்சினைல மாட்டுவாரோன்ற கவலைல இருக்கிறதா சொல்லியிருக்கிறார்”

“இது ஏற்கெனவே சொன்னதுதானே?”

“ஆமாம், என்ன செய்யறது. அவரால சொல்றதைத் தவிர நடவடிக்கை எடுக்க முடியல. ஒரு சில அமைச்சர்களோட செயல்பாட்டுல முதல்வருக்கு முழு திருப்தி இல்லை. ஆனா அவங்களை அவரால நீக்க முடியலை. அவர் யாரைக் கழற்றி விடணும்னு நினைக்கறாரோ, அவங்க யார் மூலமாவது முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. இதுதான் முதல்வரோட எரிச்சலுக்கு காரணம். உங்க மேல ஆக்‌ஷன் எடுக்காம இருந்தா என்னை பலவீனம்னு சொல்றாங்கனும் சொல்லியிருக்கிறாரு. நடவடிக்கை எடுக்க மாட்டேன்னு மாத்திரம் நினைச்சிறாதிங்க. நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். கவனமா இருங்கன்னு சொல்லியிருக்கார். அப்போ ஒரு முக்கியமான அமைச்சர் எழுந்து நான் வேணும்னா ராஜினாமா செய்துடறேன்னு சொல்லியிருக்கிறார். முதல்வர் டென்ஷனாகிட்டார். நீங்க யாரும் உங்க பதவியை விட்டுக்கொடுக்க வேண்டாம். பேசாம நானே ராஜினாமா பண்ணிடறேன்னு கோபமா சொன்னதா அறிவாலயத்துல தகவல்.”

“கோபத்துக்கு காரணம் நிதியமைச்சரா?”

“அவரும் ஒரு முக்கிய காரணம். ஆடியோ விஷயத்துல பிடிஆர் விளக்கம் கொடுத்தாலும், அவருக்கு ஆதரவா துரைமுருகன் நின்னாலும் முதல்வர் திருப்தியடையலை. ஆடியோல இருக்கறது பிடிஆரோட குரல்தான்னு உளவுத்துறை மூலமா அவருக்கு தகவல் வந்ததுதான் கோபத்துக்கு காரணம். ‘பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் நீங்க எச்சரிக்கையா இருங்க. அவர் நம்பிக்கைக்கு உரியவர் இல்லைன்னு ஏற்கெனவே அமைச்சர் மூர்த்தி எச்சரிச்சார். நான்தான் கேட்கல. இப்ப மூர்த்திதான் மதுரைல கட்சியை வளர்க்கிறார். அதிமுகவுக்கு சவாலாவும் இருக்கார்’னு துரைமுருகன்கிட்ட முதல்வர் சொல்லி இருக்கார்.”

“செந்தில் பாலாஜி மேலகூட முதல்வர் கோபமா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

“தானியங்கி மதுபான இயந்திர விஷயத்துல அவர் மேல முதல்வருக்கு கோபம். இந்த விஷயத்துல, ‘நீங்களே எல்லாத்தையும் முடிவு செஞ்சுடுறீங்களா’ன்னு முதல்வர் கடுப்பாகி இருக்காரு. அதுக்கு செந்தில்பாலாஜி, ‘அந்த இயந்திரத்தை நாம வைக்கல. குறிப்பிட்ட நிறுவனம்தான் வச்சிருக்கு’ன்னு சமாதானம் சொல்லி இருக்கார். ஆனா அந்த விளக்கத்தை எல்லாம் ஏற்கிற நிலையில முதல்வர் இல்லையாம். முதல்வரின் கோபத்தைப் பார்த்த பல அமைச்சர்கள் தங்கள் தலையை குனிந்து பதுங்கிட்டாங்களாம்.”

“வேடிக்கைதான். மதுபான மெஷின்லாம் தேவையில்லாத ஆணி. சரி, எடப்பாடி – அமித் ஷா சந்திப்போட ஃபாலோ அப் நியூஸ் ஏதாவது இருக்கா?”

“எடப்பாடியைப் பொறுத்தவரைக்கும் இந்த சந்திப்பு பல சந்தேகங்களை தீர்த்து வச்சிருக்கு. சமீபத்துல ஒரு பிரஸ் மீட்ல ஓபிஎஸ் விவகாரத்தைப் பத்தி கேட்டப்ப, ‘அது அதிமுகவோட உள்கட்சி பிரச்சினை’ன்னு அமித் அஷா சொன்னது அவரோட மகிழ்ச்சியைக் கூட்டி இருக்கு. இப்போதைக்கு நம்ம கூடத்தான் பாஜக கூட்டணி அமைக்கும்கிறது உறுதி ஆயிடுச்சு. தொகுதிப் பங்கீட்டை தேர்தலப்ப பார்த்துக்கலாம்கிற மூட்ல இருக்காராம்.”

“அந்த அளவுக்கு பாஜகவை அவரால லேசா டீல் பண்ண முடியுமா?”

“அது கொஞ்சம் கஷ்டம்தான். அதிமுககிட்ட குறைஞ்சது 9 சீட்களையாவது பாஜக எதிர்பார்க்குது. ராமநாதபுரம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தென்சென்னை, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் தொகுதிகளைத்தான் அவங்க குறிவைக்கறாங்க. இதுல ராமநாதபுரம் தவிர மத்த தொகுதிகள்ல போட்டியிட 3 பேர் பட்டியலை அனுப்ப மாநில தலைமைகிட்ட பாஜக மேலிடம் சொல்லி இருக்கு. இதன்மூலம் ராமநாதபுரத்துல மோடிதான் போட்டியிடுவார்னு சொல்லாம சொல்லி இருக்காங்க.”

“கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல திமுக தொடர்ந்து அதிருப்தியா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”

”ஏற்கெனவே 12 மணி நேர வேலை மசோதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் கடுமையா எதிர்த்தது. இதேபோல் வேங்கை வயல் விஷயத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோட நடவடிக்கைகள் திமுகவை சங்கடப்படுத்தி இருக்கு. இதெல்லாம் போதாதுன்னு மே தின கூட்டத்துல பேசின மார்க்சிஸ்ட் கட்சியோட மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், தமிழகத்தை ஆட்சி செய்வது திமுகவா அல்லது அதிகாரிகளும் முதலாளிகளுமான்னு கேட்டிருக்கார். இதுல திமுக தலைவர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கு. இப்படி பொத்தாம் பொதுவாக நலாந்தர பேச்சாளர் பேசுவது போல் பேசக்கூடாது. கூட்டணி ஆட்சியில் இருந்துகொண்டு கூக்குரல் இடுவது தான் கூட்டணி தர்மமான்னு முரசொலி மூலமா கேள்வி கேட்டிருந்தாங்க. இப்ப பேசாம அவங்களை கழட்டி விடலாமான்னும் யோசிக்கறாங்களாம்.”

“கர்நாடக தேர்தலுக்கு தமிழக தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு போகலியா?”

“திருமாவளவன் போயிருந்தார். தமிழர்கள் அதிகமா வசிக்கற பகுதிகள்ல காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா அவர் பிரச்சாரம் செஞ்சிருக்கார். பிரச்சாரத்துல மோடி மேல அவர் வச்ச விமர்சனங்களால காங்கிரஸ் கட்சிக்காரங்க ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க.”

“திமுக தரப்புல யாரும் போகலியா?”

“அவங்க ஆதரவையே கொஞ்சம் தாமதமாத்தான் அறிவிச்சு இருக்காங்க. காங்கிரஸ் தரப்புல முன்கூட்டியே ஆதரவு கேட்காததுதான் இதுக்கு காரணம். கடைசியில டி.ஆர்.பாலுகிட்ட பேசி மல்லிகார்ஜுன கார்கே ஆதரவு கேட்க திமுகவும் ஆதரவு கொடுத்திருக்கு.”

”இவ்வளவு ஈகோ பார்த்தா இவங்க எப்படி ஒற்றுமையா பாஜகவை எதிர்க்க முடியும்?”

“நல்ல கேள்வி. இதை அரசியல் தலைவர்களிட்டதான் கேக்கணும்” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...