“டெல்லியில பிரதமர், உள்துறை அமைச்சர்னு பலரையும் ஆளுநர் ரவி சந்திச்சுட்டு இருக்கார். ஜனாதிபதியைக்கூட சந்திக்க முயற்சி செய்யறார்” என்றபடி ஆபீசுக்குள் எண்ட்ரியானாள் ரகசியா.
“இதனால தமிழக அரசுக்கு ஏதும் புது சிக்கல் வருமா?”
“சிக்கல் தமிழக அரசுக்கு இல்லை. ஆளுநர் ரவிக்குத்தான். ஆளுநரோட டெல்லி பயணம் தனிப்பட்ட பயணம்னு ஆளுநர் மாளிகையில சொல்றாங்க. ஆனா அவர் பதவி நீட்டிப்புக்காகத்தான் டெல்லிக்கு போனதா ஆளுநர் மாளிகை வட்டாரத்துல பேசிக்கறாங்க. ஆளுநரோட பதவிக்காலம் வர்ற 31-ம் தேதியோட முடியப்போகுது. அதனால தமிழக ஆளுநர் பதவியில் நீடிக்க தன்னை தொடர்ந்து அனுமதிக்கணும்னு அவங்ககிட்ட ஆளுநர் ரவி சொல்லி இருக்கார். ஆனா அதுக்கு உள்துறை அமைச்சரும், பிரதமரும் எந்த உத்தரவாதமும் கொடுக்கலையாம். ஜனாதிபதியும் ஆளுநருக்கு நேரம் ஒதுக்கலயாம். அதனால அவரோட பதவி நீட்டிப்பு சந்தேகம்னு சொல்றாங்க. இந்த நேரத்துலதான் சர்ச்சை இல்லாத சில சட்ட மசோதாக்களுக்கு அவசர அவசரமாக ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கார்.”
“ரவி தொடர்ந்து இருக்கணும்னு தமிழக முதல்வர் நினைக்கறாரா? போகனும்னு நினைக்கறாரா?”
“முதல்வரைப் பொருத்தவரை இவரே இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு நினைக்கறாரு. இன்னும் சொல்லப்போனா தமிழக ஆளுநரா ஆர்.என்.ரவி தொடர்ந்தா பாஜகவுக்கு சாதகமா ஏதாவது பேசுவாரு. அதை வச்சு பாஜக எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தலாம்னு நினைக்கறாரு.”
“ஆளுநர் விவகாரம் உறுதி ஆகாததாலதான் தமிழக மந்திரிசபை மாற்றம் தள்ளிப் போகுதா?”
“மந்திரிசபை மாற்றம் அதிக நாள் தள்ளிப் போகாது. முதலமைச்சர் வெளிநாடு போறதுக்கு முன்ன கட்சியிலயும், அமைச்சரவையிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். அமைச்சரவையிலும், கட்சியிலும் தனக்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின்தான்னு சொல்ற மாதிரி அந்த மாற்றம் இருக்கும்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க. ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றமும் அதுக்கான முன்னோட்டம்தான்னு சொல்றாங்க. இந்த நியூஸ் வந்ததுலருந்து அமைச்சர்கள் அச்சத்துல இருக்காங்க”
“அமைச்சரவையை மாத்தினா சிலருக்கு பதவி போகுமே?”
“அதனாலதான் முக்கிய அமைச்சர்களை முதல்வர் தன் வீட்டுக்கு அழைச்சிருக்கார். அவங்க்கிட்ட, ‘நான் சில முக்கிய முடிவுகளை எடுக்கப் போகிறேன். உங்களுக்கு அது பிடிக்காவிட்டாலும் நீங்கள் ஒத்துழைப்பு தரணும்”ன்னு சொல்லியிருக்கார். முதல்வர் ஏதோ பெரிதாக திட்டம் போடுகிறார்னு அறிவாலயத்தில் பேச்சு வந்திருக்கு. ஆனால் என்ன திட்டம்னுதான் அவங்களுக்கு இன்னும் தெரியலை.”
“எந்தந்த அமைச்சருக்கெல்லாம் பிரச்சினை?”
“இப்போதைக்கு மதிவேந்தன் பதவியை பறிச்சிருவாங்கனு சொல்றாங்க. உள்ளாட்சித் துறை சின்னவருக்கு போகுதாம். ட்ரான்ஸ்போர்ட் நேருவுக்கு, டாஸ்மாக் ஐ.பெரியசாமிக்குனு பேசிக்கிறாங்க. துரைமுருகன் கட்சி பொறுப்பில் மட்டும் இருப்பார்னும் ஒரு நியூஸ் இருக்கு. அவரை அமைச்சரவைலருந்து வெளியே தள்ள சில முக்கிய அமைச்சர்கள் முயல்கிறார்களாம். ஆனா முதல்வர், அமைச்சரவைல அவர் இல்லனா நல்லாருக்காதுனு அவங்ககிட்ட சொல்லியிருக்கிறார். என்ன ஆகும்னு தெரியல”
“புதிய அமைச்சர்கள் வருவாங்களா?”
“ஆமா வட மாவட்டத்திலருந்தும் டெல்டா பகுதிலருந்து புது அமைச்சர்கள் வர வாய்ப்பிருக்கு”
“காவிரி நீர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“இந்த கூட்டத்துல மத்த எல்லா கட்சிகளும் எம்.பி, எம்.எல்.ஏக்களை கலந்துக்க வச்சது. ஆனா பாரதிய ஜனதா கட்சி சார்பா சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துக்கல. கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜனும், கருப்பு முருகானந்தமும் கலந்துகிட்டாங்க. இது அண்ணாமலை அடுத்த முடிவு. நைனார் நாகேந்திரனுக்கும், வானதிக்கும் முக்கியத்துவம் கிடைக்க கூடாதுன்னு அவர் இப்படி செஞ்சதா கமலாலயத்துல ஒரு பேச்சு இருக்கு. இதுபத்தி அண்ணாமலை தரப்புல கேட்டா, ‘நைனார் நாகேந்திரன் சிபிசிஐடி அலுவலகத்தில் அன்று ஆஜராக இருந்ததால் அவரை அனுப்ப இயலவில்லை’ன்னு சொல்றாங்க. ஆனா மற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி இருக்கலாமே என்று பதில் கேள்வி கேட்கிறது அண்ணாமலையோட எதிர்கோஷ்டி.”
“அதிமுக இணைப்பு முயற்சிகள் எந்த அளவுல இருக்கு?”
“சென்னை மெட்ரோ பணிகள் மாதிரி இந்த இணைப்பு முயற்சியும் இழுத்துட்டே போகுது. இணைப்பு பற்றி டிடிவி தினகரனிடம் ஓபிஎஸ் பேசியிருக்கார். ஆனா அதுக்கு அவர் மசியலையாம். ‘இந்த வீண் விளையாட்டுக்கெல்லாம் நான் வரலை. நான் இவ்வளவு நாள் கட்சியை நல்லா வளர்த்து வச்சிருக்கேன். வேணும்னா அதிமுகவோட கூட்டணி வச்சுக்கலாம். ஆனால் இணைப்பு பத்தியெல்லாம் என்கிட்ட பேசாதீங்க’ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். அதனால ஓபிஎஸ் நொந்து போயிருக்கார்.”
‘சசிகலா சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைக்கூட ஓபிஎஸ்தான் செய்யறதா கேள்விப்பட்டேனே?”
“ஆமாம். அந்த கூட்டங்களுக்கு ஆட்களை திரட்டற வேலையைக்கூட ஓபிஎஸ்தான் செய்யறாராம். இதன் மூலம் சசிகலாவின் நட்பைப் பெற்று அவரை சந்திச்சுட்டா எடப்பாடிக்கு கொஞ்சம் பயம் வரும். அப்பதான் இணைப்பு முயற்சிகள் வேகம் எடுக்கும்னு ஓபிஎஸ் நினைக்கறாராம்.”
”இப்படி நினைப்பிலேயே எத்தனை காலத்தை ஓட்டுவார்”
“பாவம்தான் தர்ம யுத்தம் செஞ்சவர்…இப்ப தனி ஆளா யுத்தம் பண்றார்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.
“