No menu items!

பணமாக பொங்கல் பரிசு  – மிஸ் ரகசியா!

பணமாக பொங்கல் பரிசு  – மிஸ் ரகசியா!

கை நிறைய பைகளுடன் உற்சாகமாக ஆபீசுக்கு வந்தாள் ரகசியா.

“என்ன தீபாவளி பர்ச்சேஸா?’

“தீபாவளிக்காக வாங்கிய டிரெஸ்கள் கொஞ்சம். வீட்டில் செய்த பலகாரங்கள் கொஞ்சம். நம் ஆபீஸில் இருப்பவர்களுக்காக எடுத்து வந்தேன்” என்று நான்கைந்து டிபன் பாக்ஸ்களை எடுத்து நீட்டினாள்.

“இதையெல்லாம் சாப்பிட்டால் மதியம் லஞ்ச்சே சாப்பிட வேண்டாம் போல் இருக்கிறதே?…”

 “அதிரசம், முறுக்கு, அல்வா என்று அத்தனையும் நானே என் கையால் செய்தது. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்”

 “செவிக்கான உணவாக உன் அரசியல் செய்திகளைச் சொல். அதைக் கேட்டுக்கொண்டே சாப்பிடுகிறேன்.”

 ”தீபாவளி நேரம் என்பதால் மக்களுக்கு இனிப்பான செய்தியையே முதலில் சொல்கிறேன். இந்த முறை பொங்கல் பரிசை ரொக்கமாகத் தரும் யோசனையில் இருக்கிறாராம் முதல்வர். கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பை கொடுத்தபோது அதில் வெல்லம் சரியில்லை, அளவு குறைவாக இருந்தது என்றெல்லாம் புகார்கள் வந்தன. இம்முறை அதுபோன்ற புகார்கள் வருவதைத் தவிர்க்கத்தான் பணத்தை வழங்குவதற்கு முடிவு செய்திருக்கிறார் முதல்வர். இதனால் வீண் விமர்சனங்களை தவிர்க்கலாம் என்று அவர் கருதுகிறார்.”

 “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ்ஸே தொடர்வதைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?”

“ஆமாம். அந்தப் போராட்டத்தில் மாஸ் காட்ட வேண்டும் என்பது எடப்பாடி உத்தரவாம். முதல் நாள் மாலை காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிந்ததுமே கைது செய்யப்படுவோம் என்பது எடப்பாடி தரப்புக்கு தெரிந்துவிட்டது. அதற்கு தயாராகத்தான் வந்திருக்கிறார்கள். ஆனால் அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எடப்பாடியை சந்திக்க வருவார்கள் என்பதை திமுக தரப்பு எதிர்பார்க்கவில்லை. இதை ஓபிஎஸ்ஸும் எதிர்பார்க்கவில்லை. கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், நயினார் நாகேந்திரன் என்று வரிசையாக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்ததை கவனித்தீர்களா?”

“எடப்பாடிதான் அதிமுகவின் தலைவர் என்பது இதன் மூலம் உறுதியாகிறதா?”

“அப்படி சொல்ல முடியாது.. எடப்பாடி தரப்பிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கெஞ்சிதான் வரவைத்தார்கள் என்று கூறுகிறார்கள். எல்லாம் பணம் என்று ஓபிஎஸ் தரப்பினர் பேசுகிறார்கள். எடப்பாடி தரப்பில் பணம் தண்ணீராய் செலவழிக்கப்படுகிறது என்று ஓபிஎஸ் தரப்பில் கூறுகிறார்கள். அதற்கு  செக் வைக்கதான் எடப்பாடி ஆட்சியில் உச்சத்தில் இருந்த ஒப்பந்தக்காரர்கள் செய்யாதுரை, ராமலிங்கம், பாண்டிதுரை போன்றவர்களின் இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகிறது. ஆனாலும் பணம் பாதாளம் வரை பாய்வதை தடுக்க முடியவில்லை”

”எடப்பாடி தரப்பு கொடுத்த கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமா? ஆளும் தரப்பு ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?”

“அதற்கு முன்மாதிரி இருக்கிறதே.. நாடாளுமன்றத்தில் எடப்பாடி தரப்பு கொடுத்த கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் கண்டுக் கொள்ளவில்லை. அதே போல் நாமும் இருப்போம் என்றுதான் முடிவெடுத்திருக்கிறார்கள். அதை எடப்பாடி பழனிசாமி பெரிதாக்கிவிட்டார் என்று திமுக கருதுகிறது. முதல்வரைப் பொறுத்தவரை எது சட்டப்படி சரியோ அதை செய்யுங்கள். அவர்கள் சண்டையை நாம் பொருட்படுத்த வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன.”

“எடப்பாடிக்கும் பாஜகவுக்கும் இடையில் ஏதாவது பிரச்சினையா? நாடாளுமன்றத்தில் எடப்பாடி தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லையே”

 “எடப்பாடியை கொஞ்ச காலம் சுத்தலில் விட பாஜக நினைக்கிறது. பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு எடப்பாடி தரப்பு சி.வி.சண்முகம் பெயரை சிபாரிசு செய்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற சபாநாயகர், ஓபிஎஸ் ஆதரவு ராஜ்யசபா எம்பியான தர்மரை ஜவுளித்துறை நிலைக்குழு உறுப்பினராக நியமித்திருக்கிறார். இதேபோல் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்பி அல்ல என்று சொல்லி எடப்பாடி தரப்பினர் அனுப்பிய கடிதமும் கிடப்பில் உள்ளது.  இத்தனைக்கும் துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை சபாநாயகரை சந்தித்து விதிகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவரை எந்தக் கட்சியும் சாராதவர் என்று அறிவியுங்கள் என்று சொல்லியிருக்கிறார் சரி சரியென்று தலையாட்டி இருக்கிறார் நாடாளுமன்ற சபாநாயகர் ஆனால் எதுவும் நடக்கவில்லை. எடப்பாடிக்கு கொஞ்சம் காலம் ஆட்டம் காட்டுவோம் என்று பாஜக தலைமை கருதுவதே இதற்கு காரணம்.”

 “எடப்பாடியின் நிலை என்ன?”

  “பாஜக ஆட்டம் காட்டுவதைப் புரிந்து வைத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் பாஜக எப்படியும் தன்னிடம்தான் வர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நம்புகிறார். பாஜக எத்தனை பேசினாலும் தொண்டர்கள் ஆதரவு அடிப்படையில் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்றே கருதுகிறார். அதனால் பாஜகவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை”  

“ஓபிஎஸ் எப்படியிருக்கிறார்?”

“கோபமாய் இருக்கிறார். இதுவரை சசிகலா காலில் எடப்பாடி விழுந்து முதல்வர் பதவி வாங்கியது குறித்து ஓபிஎஸ் பேசியதில்லை. முதல்முறையாக தவழ்ந்து வந்து பதவி பெற்றவர்கள் என்று காட்டமாக கேட்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஸ்டாலினுடன் பேசியதை நிருபித்தால் அரசியலை விட்டு போய்விடுகிறேன், நிருபிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலைவிட்டு போவாரா என்றும் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் வழக்கான ஓபிஎஸ் இல்லை என்பதைக் காட்டுகிறது”

“இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?”

“எடப்பாடி ஆதரவு நிலையிலிருந்த 17 எம்.எல்.ஏ.க்கள் இப்போது ஓபிஎஸ் பக்கம் வருவதற்கு தயாராக இருக்கிறார்களாம். முக்கியமாய் ஆறுமுகசாமி அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கைகள் வந்தப் பிறகு சில எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ் பக்கம் வருவதற்கு தயாராய் இருக்கிறார்களாம். அந்த உற்சாகத்தில்தான் எடப்பாடி மீது கடுமையான விமர்சனங்களை ஓபிஎஸ் வைத்தார்”

”இந்த அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?”

“ஆணைய அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டு வழக்குகள் போடப்படும் என்கிறார்கள் திமுக தரப்பினர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13பேர் இறந்தார்கள். இந்தக் கொடூர சம்பவம் நடப்பதற்கு மிக முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி அப்போது துரித நடவடிக்கை எடுக்காததுதான் என்பதை திமுக அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறப்போகிறது. தென் மாவட்டங்களில் இது திமுகவுக்கு ஆதரவைப் பெருக்கும் என்று கருதுகிறது. எடப்பாடியைக் கைது செய்யலாம் என்று கூட முதல்வருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகதான் சமீபத்திய போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டது என்கிறார்கள்”

“எதற்கு முன்னோட்டம் பார்க்க வேண்டும்?”

‘எடப்பாடியை கைது செய்தால் எந்த மாதிரியான ரியாக்‌ஷன் வரும் என்பதைப் பார்ப்பதற்காக என்று சொல்லுகிறார்கள்”

”புதுவை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன் என்று கூறியிருக்கிறாரே?”

”திமுகவுக்கும் அவருக்கும் சமீபமாய் மோதல்கள் அதிகமாய் இருக்கிறது. தமிழிசையை விமர்சித்து முரசொலியில் கட்டுரைகள் வருகின்றன. அவருக்கு இன்னும் தமிழ்நாட்டு அரசியல் ஆசை இருக்கிறது. இதை டெல்லி மேலிடத்துக்கும் சொல்லியிருக்கிறார். அவர்கள் இன்னும் ஒகே சொல்லவில்லை. ஆனால் இது போன்று பேசுவதற்கு தடையில்லை என்று கூறியிருக்கிறார்கள் என்கிறது எனது டெல்லி வட்டாரம்”

”ஆளுநருக்கு அரசியல் ஆசை வந்தால் கஷ்டம்தான். ஏற்கனவே ஒரு ஆளுநரை சமாளிக்க இயலாமல் திமுக அரசு

கஷ்டப்படுகிறது. இதில் பக்கத்து மாநில ஆளுநரும் சேர்ந்தால் என்னாவது?”

“கரெக்ட்தான். ஆனால் திமுக பார்க்காத ஆளுநர்களா? அவர்களுக்கும் ஒரு துருப்பு சீட்டு வைத்திருப்பார்கள்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...