இந்தியர்களின் வாழ்க்கையில் அங்கமாகிப் போன சில விஷயங்களில் ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்ற உடல்நல பானங்களும் உண்டு. அந்த பானங்கள் மீது மக்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது. நம்ம வீட்டுப் பையன் போன்ற நெருக்கத்தை இந்த பானங்கள் மீது வைத்திருக்கிறார்கள்.
இப்போது போர்ன்விட்டா மீது சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. போர்ன்விட்டாவில் அளவுக்கதிமான சர்க்கரை இருக்கிறது. குடிப்பது நல்லதல்ல என்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு தேசிய குழந்தைகள் உரிமை அமைப்பு போர்ன்விட்டா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
என்ன நடந்தது?
கடந்த வாரம் ரேவந்த் ஹிமத் சிங்க்கா (Revant Himatsingka) என்பவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் போர்னிவிட்டாவில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகவும் குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் பொருட்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஹிமத் சிங்க்கா தன்னை சத்துணவு நிபுணராகவும் உடல்நல பயிற்சியாளராகவும் சொல்லிக் கொள்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்து 43 ஆயிரம் பின் தொடருபவர்கள் இருக்கிறார்கள்.
ஹிமத்தின் வீடியோ சமூக ஊடகங்களின் வைரலானது. இந்த வீடியோவை சில பிரபலங்களும் லைக் கொடுத்து ஷேர் செய்ய பற்றிக் கொண்டது. போர்ன்விட்டாவுக்கு எதிரான கருத்துக்கள் வேகமாய் பரவத் தொடங்கின.
உடனே போர்னிவிட்டா எதிர் நடவடிக்கைகளில் இறங்கியது. போர்ன்விட்டாவின் தயாரிப்பு நிறுவனமான மாண்டேலேஸ் இந்தியா (Mondelez – India) இந்த வீடியோவுக்கு மறுப்பு கொடுத்திருக்கிறது. ஹிமத்துக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பியிருக்கிறது.
போர்ன்விடா நிறுவனத்திடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்ததும் தனது வீடியோவை நீக்கிவிட்டார் ஹிமத். ஆனால் அதற்கு ஒரு கோடி பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள். இந்த வீடியோவுக்கு நடிகர் மாதவன், முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கீர்த்தி ஆசாத் போன்ற பிரபலங்கள் லைக் செய்து பகிரவும் செய்திருக்கிறார்கள்.
தங்கள் மறுப்பு அறிக்கையில், ‘70 வருடங்களாக போர்ன்விட்டா இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. எங்களுடைய தயாரிப்பு தரமானது. அறிவியல்பூர்வமாக ஊட்டச்சத்து நிபுணர்களும் உணவு ஆராய்ச்சியாளர்களும் இணைந்து சிறப்பான ருசியையும் உடல்நலத்தையும் தரும் பொருளை தயாரித்திருக்கிறார்கள். எல்லா தரச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, முறையாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போர்ன்விட்டாவில் உள்ள உட்பொருள்கள் அனைத்தும் தர சான்றிதழ் பெற்றவை. போர்ன்விட்டாவின் ஒவ்வொரு 20 கிராமிலும் 7.5 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இது தோராயமாக ஒன்றரை டீஸ்பூன் அளவு கொண்டது. குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம் என்ற அனுமதிக்கப்பட்ட அளவைவிட இது மிகவும் குறைவானதே’ என்று தெரிவித்திருக்கிறது போர்ன்விட்டா நிறுவனம்.
’நான் போர்ன்விட்டா நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களை அவதூறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. அவர்களுடன் சட்டப் போராட்டம் நடத்தும் அளவு என்னிடம் வசதி கிடையாது. இந்தப் பிரச்சினையை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று நிறுவனத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் அமெரிக்காவில் நல்ல வேலையில் நல்ல சம்பளத்தில் இருந்தேன். அதைவிட்டுவிட்டு இந்தியாவில் பணிபுரிவதற்காக வந்தேன். இங்கே FoodPharmer என்ற இண்ஸ்டா பக்கத்தை துவக்கினேன். நமது விவசாயிகள் விளைவிக்கும் விவசாயப் பொருட்களை சாப்பிட்டாலே பார்மசி போவதை தவிர்க்கலாம் என்பதுதான் என் நோக்கம். ’ என்று தனது பதிவு நீக்கம் குறித்து தெரிவித்திருக்கிறார் ஹிமத்.