நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாட்டில் மக்களுக்கு அதிகம் விருப்பமான தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது நியூஸ் 18 நிறுவனம். இதற்காக 518 நாடாளுமன்ற தொகுதிகளில் 1,18,000 மக்களை சந்தித்து ஆய்வு நட்த்தியிருக்கிறது.
இதில் மொத்தம் 59 சதவீத மக்களின் ஆதரவு பிரதமர் நரேந்திர மோடிக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. மோடிக்கு அடுத்த்தாக ராகுல் காந்திக்கு 21 சதவீதம் பேரும், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கு தலா 9 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.
இதே நிறுவனம் தமிழகத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 4 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிலும் சென்னையில் பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 51 சதவீதமும், பாஜக கூட்டணிக்கு 13 சதவீதமும், திமுக கூட்டணிக்கு 17 சதமும் வாக்குகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ராஜ்யசபா சீட் – ஜவாஹிருல்லா கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தங்களுக்கு ஒரு தொகுதியையாவது ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கேட்டும், கலைஞர் பாணியில் அக்கட்சிக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒரு தொகுதியை வழங்காவிட்டாலும், ராஜ்யசபா தேர்தலிலாவது ஒரு சீட் வழங்கவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரியுள்ளார்.
இதுஇதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிகுந்த வலியோடு திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்க வலியுறுத்தினோம். இன்னும் வழங்கப்படவில்லை திமுக தலைவர் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக நாட்டு நலனை கருதக்கூடியவர்கள் என்பதால் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு தமிழகத்தில் பங்கம் வரக்கூடாது என்பதே எங்களது எண்ணமாகும். திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடதுசாரிகளுக்கு சமூக நீதியை அளித்தது போல, முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம், சமூக நீதியை திமுக வழங்க வேண்டும் என மிக வலிமையாக வலியுறுத்தினோம், மீண்டும் அதனை வலியுறுத்துவோம்” என்றார்.
அதிமுகவுக்கு 40 அமைப்புகள் ஆதரவு
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நேற்று ஒரே நாளில் 40 அமைப்புகள் நேரில் ஆதரவு தெரிவித்தன.
அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கட்சி, தென்நாட்டு மூவேந்தர் கழகம், மக்கள் மசோதா கட்சி, கோகுல மக்கள் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, சமதா கட்சி, ஆதிதிராவிடன் புரட்சி கழகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் நேற்று அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.பென்ஜமின் ஆகியோரை நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தன.