கச்சத்தீவு குறித்து பாஜக பேசி வருவதற்கு பதிலடியாக, அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதை தடுக்க மோடி என்ன செய்தார் என திமுக, காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் என்ன நடந்தது?
கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்த பாஜக
தமிழ்நாடு அரசியலில் கச்சத்தீவு விவகாரம் அவ்வப்போது எழுவதும் பின்பு அடங்கிவிடுவதும் இயல்புதான். இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற கச்சத்தீவு குறித்த தகவல் அடிப்படையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை பாஜகவினர் தற்போது விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து பிரதமர் மோடி, “இந்தப் புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது” எனக் கருத்து கூறியிருந்தார்.
மேலும், கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆங்கில நாளேட்டின் கட்டுரையை குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 01.04.2024 அன்று வெளியிட்ட பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டுள்ளன. காங்கிரசும் திமுகவும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள், மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா – இலங்கை ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதன் விளைவு, கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும் பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை” எனப் பேசினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “1976இல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு பிரச்சினையை தேர்தலுக்காக மோடியும் அண்ணாமலையும் தற்போது பேசி வருகின்றனர். அண்ணாமலை எடுத்துக் கொடுத்த ஆர்டிஐ தகவலை தற்போது தேர்தலுக்காக பேசுகின்றனர். கச்சத்தீவை மீட்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது மத்திய பாஜக அரசு சார்பில் கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான். அதை திரும்பவும் மீட்க முடியாது என்றனர். தற்போது தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார்கள்” என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ்
கச்சத்தீவு குறித்து பாஜக பேசி வருவதற்கு பதலடியாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருவதற்கு எதிராக பாஜக அரசு என்ன செய்துள்ளது என்ற கேள்வியை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.
சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் விதமாக, அப்பகுதியில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய, பின்யின் மொழிகளில் பெயர் சூட்டி வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த புதிய பகுதிகள் ‘திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்’ பகுதியின் கீழ் வருவதாக சீனா அதில் குறிப்பிட்டிருந்தது.
இதில் அருணாசல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள், இரண்டு ஆறுகள் போன்ற முக்கிய பகுதிகள் அடங்கும். இதேபோல இதற்கு முன் 2017-ம் ஆண்டில், சீனா இதே போன்று அருணாச்சலப் பிரதேசத்தின் ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி பட்டியலை வெளியிட்டதோடு, பின்னர் 2021-ம் ஆண்டிலும் 15 இடங்களின் புதிய பெயர் பட்டியலை வெளியிட்டது.
பெயர் மாற்றும் படலத்தின் நான்காவது முறையாக ஏறத்தாழ 30 இடங்களில் பெயர்களை சீனா மாற்றி புதிய பெயர்களை கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டு இந்தியாவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டி சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இந்திய நிலத்தை சீனா உரிமை கொண்டாடி வருவதை தடுக்க பாஜக அரசு செய்தது என்ன என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோடி, ஜெய்சங்கர் இருவர் பேச்சுக்கும் பதிலளித்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், “1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன். அந்த ஆர்டிஐ பதிலில், இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கியதற்கான சூழலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ஏன் வெளியுறவு அமைச்சகமும் அமைச்சரும் அந்தர் பல்டி அடிக்கின்றனர் எனத் தெரியவில்லை.
2000 சதுர கி.மீ இந்திய பூமியை சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” என்று கூறியிருந்தார்.
சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “சீனா உடனான இந்தியாவின் வணிகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் மறுபுறம் சீனா இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கிறது. லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இவ்வளவு நடந்தும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறார். அது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியை விமர்சித்த மு.க. ஸ்டாலின்
இதனிடையே, இது தொடர்பாக, வேலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் பழைய விடயங்களை சொல்லி குழப்பி அதன் மூலம் ஆதாயம் தேட பார்க்கிறார். அப்படி அவர் முயற்சி செய்வது தான் கச்சத்தீவு பிரச்சினை.
இந்திய அரசு இலங்கைக்கு கச்சதீவை கொடுத்தது பற்றி இப்போது பேச ஆரம்பித்தது அவர்களுக்கே எதிராக திரும்பிவிட்டது. 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பாஜக, கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை இலங்கைக்கு சென்றிருப்பார். அப்போது, ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரை சந்தித்த போது கச்சத்தீவு நியாபகம் இல்லையா?
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த மோடி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்த போது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன். அதில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தான் முதல் கோரிக்கையை வைத்தேன். அது அவருக்கு ஞாபகம் இருக்கிறதா?
பல ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்றுதான் பாஜக கூறியுள்ளது. இப்போது தேர்தல் நேரத்தில் தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.
அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறது. அதை பற்றி மோடி வாய் திறந்தாரா?
இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.