“இந்த முறை பிரதமர் வேட்பாளர் தமிழ்நாட்டிலிருட்டிலிருந்து’ என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா.
”மோடி தமிழ்நாட்டு போட்டியிடப் போகிறாரா? அதுதான் முன்னாடியே நியூஸ் வந்துடுச்சே?”
“பிரதமர் வேட்பாளர்னா மோடிதானா? ராகுலை நினைச்சுப் பாக்க மாட்டிங்களா?”
“அப்படியா? ராகுல் தமிழ்நாட்டுல போட்டியிடப் போகிறாரா?”
”ஆமா…கன்னியாகுமரில அவரை போட்டியிட வைக்க முயற்சிகள் நடக்குது. ஸ்டாலினே நேரடியா ராகுல் கிட்ட பேசியிருக்கிறாராம். நீங்க இங்க போட்டியிடணும்னு சொல்லியிருக்கிறார். ராகுல் போட்டியிட்டா தமிழ்நாட்டுல திமுக கூட்டணிக்கு பலம் கிடைக்கும்னு கணக்குப் போடுறாங்க”
“ராகுல் இங்க போட்டியிடுவாரா?”
“கேரளா வேண்டாம்னு தமிழ்நாட்டுக்குப் போயிரலாம்னு டெல்லி காங்கிரஸ் தலைவர்கள்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா ராகுல் கணக்கு வேற மாதிரி இருக்கு. தமிழ்நாட்டுல நம்ம கூட்டணிக்கு பெரிய பாதிப்பு இல்லை, ஜெயிச்சிருவோம். ஆந்திரா, கர்நாடகா மாதிரி வேற தென்னிந்திய மாநிலங்கள்ல போட்டியிட்டா அங்க காங்கிரசுக்கு பலம் கிடைக்கும் கூடுதல் சீட்டும் கிடைக்கும்னு சொன்னாருனு டெல்லி செய்தி சொல்லுது. ஆனா கன்னியாகுமரில போட்டியிடுறதுக்குதான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்”
”அப்போ பிஜேபிலருந்து யாரை நிறுத்துவாங்க? பொன்னாரா?”
“அந்த இடத்துக்கு தமிழிசையும் கேக்குறாங்க. ஆனா அவங்க கவர்னர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு வரணும். பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு கவர்னர் பதவி வேண்டாம்னு சொல்றார். அரசியல்லேயே இருக்கிறேன் என்கிறார். பாஜகவுக்கு கொஞ்சம் சிக்கல்தான்”
“பாஜக கவர்னர்கள்தான் அரசியலும் பண்றாங்களே? எல்.முருகன் என்ன ராஜ்ய சபா எம்.பி ஆகிட்டாரு? நீலகிரி தொகுதியில போட்டியிடுவார்னு எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்களே?”
“தமிழ்நாட்ல வலுவான கூட்டணி அமையாத நிலையில, அடுத்த அமைச்சரவையிலயும் அவர் தொடர்ந்து இருக்கிறதுக்காக ராஜ்யசபா எம்பியாக்கி இருக்கறதா கமலாலயத்துல பேசிக்கறாங்க.”
“நானே உன்னை கேட்கணும்னு இருந்தேன். நட்டா சென்னைக்கு வரும்போதே சில கட்சிகள் பாஜக கூட்டணியில சேரும்னு சொல்லி இருந்தியே. ஆனா நீ சொன்னபடி யாரும் சேரலையே. நட்டா வெறுங்கையோட திரும்பிப் போயிருக்காரே?”
“அப்படித்தான் முதல்ல சொன்னாங்க. ஆனா எதுவும் நடக்கல. கூட்டணி விஷயம் மட்டுமில்லாம, காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 4,000 பாஜக நிர்வாகிகளை நட்டா சந்திப்பார்னு சொன்னாங்க. ஆனா அதுவும் நடக்கலை. விமான நிலையத்துல இருந்து நேரா பொதுக்கூட்டம் நடக்கற இடத்துக்கு போய் பேசிட்டு, அங்க இருந்து அப்படியே விமான நிலையம் வந்து டெல்லிக்கு போயிட்டார் நட்டா. பாமக, தேமுதிக, தமாகான்னு பெரிய கட்சிகள் இன்னும் அதிமுகவா, பாஜகவான்னு ஊசலாட்டத்துல இருக்கறதால நட்டாவை சந்திக்க தயாரா இல்லை. இதனால நட்டா அப்செட்டாம். அந்த அப்செட்ல, தன்னை சந்திக்க தயாரா இருந்த ஒரே தலைவரான ஓபிஎஸ்ஸைக்கூட அவர் சந்திக்காம போயிட்டார்.”
“மத்தியில ஆட்சியில இருக்காங்களே… அதை வச்சு பாமகவையும், தேமுதிகவையும் அவங்களால வளைக்க முடியலியா?’
“அந்த கட்சிகளை விட்டுத் தள்ளுங்க. ஜி.கே.வாசனோட தமாகா கூடவே அவங்களால கூட்டணியை உறுதி செய்ய முடியலை. சமீபத்துல நடந்த தமாகா நிர்வாகிகள் கூட்டத்துல பேசின பலரும், பாஜக கூட்டணி வேண்டாம். அதிமுகவோட கூட்டணி வைக்கலாம்னு பேசி இருக்காங்க. அதனால என்ன பண்றதுன்னு தெரியாம வாசன் திணறிட்டு இருக்காராம். சின்ன கட்சிகளையே பிடிக்க முடியாத சூழல்ல எங்க இருந்து பெரிய கட்சிகளை பிடிக்கறது? எல்லாத்துக்கும் அண்ணாமலையோட வாய்தான் காரணம். அவர் வில்லங்கமா ஏதும் பேசாம இருந்திருந்தா இந்நேரம் அதிமுக நம்ம கூட இருந்திருக்கும். நாடாளுமன்ற தேர்தல்ல நாமளும் பல தொகுதிகள்ல ஜெயிச்சிருக்கலாம்னு பாஜக தலைவர்கள் புலம்பிட்டு இருக்காங்க.”
“திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு போயிட்டு இருக்கு?”
“முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிஞ்சுடுச்சு. இப்ப இறுதி முடிவு செய்யற இடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கார். விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 4 சீட் கேட்டிருக்கு. அதுக்கு டி.ஆர்.பாலு, ‘ஏற்கெனவே உங்களுக்கு தந்த 2 சீட்டைத்தான் இந்த முறையும் தர முடியும்’னு சொல்லி இருக்கார். அதுக்கு அவங்க கூடுதலா ஒரு ராஜ்யசபா சீட்டையாவது கொடுங்கன்னு கேட்டிருக்காங்க. போன தடவையே நீண்ட இழுபறியில ஜெயிச்சதால இந்த முறை ராஜ்யசபா உறுப்பினராக திருமாவளவன் விரும்பறாராம்.”
“கரூர் தொகுதியை ஜோதிமணிக்கு கொடுக்கக் கூடாதுன்னு அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்களே?”
“அவங்க எதிர்ப்பு தெரிவிச்சாலும், ராகுல் காந்தி ஆதரவுல கரூர் தொகுதி தனக்கு கிடைக்கும்னு ஜோதிமணி நம்பறார். அவர் நம்புற அதே நேரத்துல, இந்த முறை கரூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க அங்க இருக்கற திமுக நிர்வாகிகளுக்கு மனசு இல்லை. இந்த முறை எப்படியும் திமுக வேட்பாளரை நிறுத்தணும்னு கட்சித் தலைமைக்கு அவங்க நெருக்குதல் கொடுத்துட்டு இருக்காங்க.”
“கரூர்னதும் செந்தில் பாலாஜி ஞாபகத்துக்கு வர்றார். அவர் தன்னோட அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சிருக்காரே?”
“செந்தில் பாலாஜியோட ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்படறதுக்கு அவர் தொடர்ந்து அமைச்சரா நீடிக்கறதும் ஒரு காரணம்கிறது திமுக சட்ட நிபுணர்களோட கருத்தா இருக்கு. அதனாலதான் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சிருக்கார். அவரோட தம்பியை அமலாக்கத் துறையிடம் சரணடைய வைக்கவும் முயற்சிகள் நடக்குது. திமுகவை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு செந்தில் பாலாஜி வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறாங்க. இப்ப செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சதால இனி அவருக்கு சீக்கிரமா ஜாமீன் கிடைக்கும்னு திமுக தரப்பினர் நம்பறாங்க.”