தேசிய அளவில் பாஜக ஆதரவாளர்களும், தமிழக அளவில் திமுக ஆதரவாளர்களும் சந்தோஷப்படும் வகையில் வெளியாகி இருக்கிறது டைஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள். . மார்ரிஸ் என்சி நிறுவனத்துடன் இணைந்து டைம்ஸ் நவ் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
3-வது முறையாக பாஜக
இந்த கருத்துக் கணிப்பின்படி, இப்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 366 தொகுதிகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 104 தொகுதிகளையும், இதர கட்சிகள் 73 தொகுதிகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி முடிவுகள் வந்தால், பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 41.8 சதவீத வாக்குகளும், இந்தியா கூட்டணிக்கு 28.6 சதவீத வாக்குகளும், இதர கட்சிகளுக்கு 29.6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முந்தும் திமுக கூட்டணி
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 1 தொகுதியையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 59.7 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 20.4 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளை வென்றாலும், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 16.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்படும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?
முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மிக திருப்திகரமாக இருப்பதாக 21 சதவீதம் பேரும், ஓரளவு திருப்திகரமாக இருப்பதாக 27 சதவீதம் பேரும், திருப்திகரமாக இல்லை என்று 44 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
அண்ணாமலை நடைபயணத்தால் பாஜகவுக்கு நன்மையா?
அண்ணாமலையின் நடைப் பயணம் பாஜகவுக்கு எந்த அளவு நன்மையைத் தரும் என்ற கேள்விக்கு, 26 சதவீதம் பேர் இது தமிழக அரசியலில் பாஜகவுக்கு நன்மை தருவதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் இதனால் பாஜகவுக்கு ஓரளவு நன்மை இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் பேர் இது எந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து பார்த்துதான் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு:
இந்த கருத்துக் கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவிலான பின்னடைவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அதிக செல்வாக்குடன் இருப்பதாக கூறப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், உத்தராகண்ட், குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அக் கட்சியால் ஒற்றை இலக்க எண்ணிலேயே எம்.பி.தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
வட இந்தியாவில் செல்வாக்குடன் இருக்கும் பாஜக தென்னிந்தியாவில் சற்று பின்னால்தான் இருக்கிறது.
தென்னிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 21 இடங்களில் பாஜக வெல்லும் என்று கருத்துக் கணிப்பு சொல்லுகிறது. 2019 தேர்தலில் கர்நாடகத்தில் 27 இடங்களில் பாஜக வென்றது.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 இடங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லாது என்கிறது கருத்துக் கணிப்பு. ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 19 இடங்களிலும் தெலுங்கு தேச கூட்டணி 6 இடங்களிலும் வெல்லும் என்று சொல்லப்படுகிறது.
கேரளாவிலும் ஒரு இடத்தையும் பாஜகவால் வெல்ல முடியாது என்கிற நிலைதான் பாஜகவுக்கு இருக்கிறது.
தெலங்கானாவில் ஐந்து இடங்களில் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் ஒரு இடத்திற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்த 6 மாநில கருத்துக் கணிப்பின்படி கட்சிகள் பெற வாய்ப்புள்ள தொகுதிகள்..
மத்திய பிரதேசம்
பாஜக கூட்டணி – 28
காங்கிரஸ் கூட்டணி – 1
ராஜஸ்தான்
பாஜக கூட்டணி – 25
காங்கிரஸ் கூட்டணி – 0
சட்டீஸ்கர்
பாஜக கூட்டணி – 11
காங்கிரஸ் கூட்டணி – 0
உத்தராகண்ட்
பாஜக கூட்டணி – 5
காங்கிரஸ் கூட்டணி – 0
குஜராத்
பாஜக கூட்டணி – 26
காங்கிரஸ் கூட்டணி -0
ஜார்க்கண்ட்
பாஜக கூட்டணி – 11
காங்கிரஸ் கூட்டணி – 1