தீபாவளி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வரும் விஷயம் பட்டாசு. வீட்டில் என்னதான் பணக்கஷ்டம் இருந்தாலும், குழந்தைகளுக்கு பிடித்த பட்டாசுகளை வாங்கிக் கொடுக்காத பெற்றோர் இருக்க முடியாது. பட்டாசின் விலை உயர்ந்துவரும் நிலையில், குறைந்த விலைக்கு பட்டாசு தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அத்தகைய கும்பல் ஆன்லைனில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.
ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாகக் கூறப்பட்டதை நம்பிப் பணம் செலுத்தியதில், மோசடி நடந்ததாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் ஆன்லைனில் நியாயமாக பட்டாசு விற்பவரிடம் இருந்துகூட பட்டாசு வாங்க மக்கள் தயங்கி வருகிறார்கள்.
காவல்துறை அறிக்கை
இது தொடர்பாக தமிழக காவல் துறை சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் இது தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல், பண்டிகை கால விற்பனையை குறிவைத்து, தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக கவர்ச்சிகரமான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை வடிவமைக்கின்றனர்.
மக்களை வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது செல்போன் அழைப்புகள் மூலமாகவோ இவர்கள் தொடர்புகொள்கிறார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளும் பொழுது பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் வெளித்தோற்றத்தில் காண்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும் இவை பணத்தைத் திருடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்புப் பட்டியல்கள், விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காண்பிக்கும்.
விழிப்புடன் செயல்பட வேண்டும்
பணம் செலுத்தும் பொழுது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்து காண்பிக்கப்படும். ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிடுகிறார்கள். மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுறது. கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிக்காரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பட்டாசு வாங்கலாமா?
இந்த சூழலில் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்கவே கூடாது என்கிறார்கள். சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயல் தலைவர் ஷேக் அப்துல்லா, ஆன்லைனில் பட்டாசு விற்கக்கூடாது என உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இரண்டுமே ஆணையிட்டிருப்பதாகக் கூறுகிறார்.
“பட்டாசுகளை ஓரிடத்தில் சேமித்து வைப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம். இதைப் பலர் சட்டவிரோதமாக வாங்கி, வீட்டிலேயே சேமித்து வைத்து விற்கிறார்கள். மற்றொரு பக்கம், இப்படி ஆன்லைனில் விற்பதை எப்படி, யார் மூலம் டெலிவரி செய்வார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது,” என்று அவர் தெரிவிக்கிறார்.