No menu items!

வங்கதேசத்தில் கலவரம் – வெளிநாட்டுக்கு ஓடிய பிரதமர் – இந்தியர்களுக்கு எச்சரிக்கை

வங்கதேசத்தில் கலவரம் – வெளிநாட்டுக்கு ஓடிய பிரதமர் – இந்தியர்களுக்கு எச்சரிக்கை

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்துள்ள மாணவர்கள் போராட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டம் தீவிரமானதால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். வங்கதேசத்துக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை எச்சரிக்கை விட்டுள்ளது.

இட ஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம்

இந்தியாவில் இருப்பதைப் போலவே வங்கதேசத்திலும் இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. ஆனால் அது சாதி ரீதியான இட ஒதுக்கீடு அல்ல. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்துக்கு விடுதலை பெற்றுத்தர போராடியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு. வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இந்த இட ஒதுக்கீடு வழிவகை செய்கிறது. இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்தி, வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்த 30% இட ஒதுக்கீடுடன் மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், மற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்தன. வங்கதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்த நிலையில், அரசின் இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்த்து அம்மாநில மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் அப்போதைக்கு அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

நீதி கேட்டு போராட்டம்

இந்நிலையில் ஜூலை மாதம் நடந்த போராட்டத்தின்போது போலீஸாரால் கொல்லப்பட்டவர்களின் சாவுக்கு நீதி கேட்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலும் இந்த பேரணிகள் நடைபெற்றன. இந்த பேரணிகளின்போது மீண்டும் வன்முறை வெடித்தது . பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள போராட்டக்காரர்கள், இனி மக்கள் யாரும் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் மற்றும் ஜவுளித் துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு தழுவிய ஒத்துழையாமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த போராட்டத்தின்போது சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காவலர்கள் கண்ணீர்ப் புகை குண்டு, ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் 90-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வங்கதேசத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த பிரதமர் ஷேக் ஹசீனா விருப்பம் தெரிவித்தபோதும், அவர்கள் அதை ஏற்கவில்லை. ஷேக் ஹசீனா பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறிவருகிறார்கள். அதேநேரத்தில் ஷேக் ஹசீனா பதவி விலகத் தேவையில்லை என்பது அவரது அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர்களின் கருத்தாக உள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக அவர்களும் பேரணிகளை நடத்தி வருகிறார்கள். இதனால் பல இடங்களில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. போராட்டம் பரவுவதை தடுக்க, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ராஜினாமா

வங்கதேசத்தில் தனக்கு எதிரான போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து வங்கதேச ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் ஷேக் ஹசீனா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாதுகாப்பு கருதி அவர் அங்கிருந்து வெளிநாட்டுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றார். அவர் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்

ஷேக் ஹசீனா தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், “இடைக்கால அரசை ராணுவம் அமைக்கும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

வங்கதேசத்தில் கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் அந்நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி இந்தியர்களை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்குச் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கதேசத்தில் இப்போது இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...