நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தட்டி சென்றிருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் வென்றது மொத்தம் 35 லட்சம் ரூபாய்!
யார் இந்த பாலாஜி முருகதாஸ்?
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பக் கல்வி, சென்னை கார்த்திகேயன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
நன்றாக படித்தாலும் ஆர்வம் எல்லாம் ஸ்டைலாக உடை உடுத்தி சூப்பர் மாடலாக வர வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட ஃபேஷன் ஷோக்களில் பங்குபெறும் வாய்ப்புகள் கிடைத்தன. பல போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் வென்றிருக்கிறார். 2019-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இவரை அதிகம் விரும்பும் ஆண்கள் பட்டியலில் சேர்த்தது.
மாடலாக இருக்கும்போது விளம்பரப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அனைத்தும் ஃபேஷன் சம்பந்தப்பட்டவை. புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவின் ஒரு நிகழ்ச்சியில் பாலா பங்கு பெற அவர் மார்க்கெட் உயர்ந்தது.
6 அடி 1 அங்குலத்தில் அனைவரையும் கவர்ந்தார். இப்போது பிக் பாஸ் பட்டத்தையும் வென்றிருக்கும் பாலாவின் வயது 27.
இந்த 27 வயதுக்குள் பல உயரங்களை தொட்டிருக்கிறார். 2017-ல் மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி பட்டத்தை வென்றிருக்கிறார். TED Showவில் பேசியிருக்கிறார். இப்போது பிக்பாஸில் வெற்றி பெற்றிருக்கிறார். இத்தனை புகழ் பெற்றிருக்கும் பாலாஜி முருகதாசின் இளம் வயது வாழ்க்கை மிகவும் கடினமானது.
‘அப்பா குடிகாரர். என்னை அடிப்பார். நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது தலையில் அடிப்பார். அம்மா மலேசியாவில் இருந்தார். ஸ்கூலுக்கு காலையிலேயே எழுந்து ஓடிவிடுவேன். மத்தியானம் சாப்பாடு இருக்காது. ஸ்கூல்ல இருக்கிறவங்கதான் சாப்பாடு தருவாங்க. எங்க வீட்டைப் பத்தி சுத்து வட்டாரத்துல நல்ல பேரு கிடையாது. அதனால என்னை எங்கேயும் சேத்துக்க மாட்டாங்க. மலேசியாவுல இருந்த அம்மாகிட்ட சொன்னேன். அவங்க சென்னைக்கு வந்தாங்க. ஆனா இங்க வந்த அவங்களும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாவும் அம்மாவும் குடிச்சிட்டு குடிச்சிட்டு தூங்கிடுவாங்க. இப்படிதான் என் இளமைக் காலம் இருந்தது” என்கிறார் பாலாஜி முருகதாஸ்.
இந்த இன்னல்களைத் தாண்டிதான் பாலாஜி வெற்றி பெற்றிருக்கிறார்.
அவருடைய அம்மா, அப்பா இறந்து விட்டார்கள். தற்போது அவருக்கு குடும்பத்தினர் என்று யாரும் இல்லை. நண்பர்கள்தாம் அவருடைய உறவுகள். “குழந்தையை பெத்து வளர்க்க முடியலனா எதுக்கு குழந்தை பெத்துக்கிறீங்க” என்று கோபத்துடன் கேட்கிறார்.
இளமைக் கால கோபத்தை தீர்க்க ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார். அதுதான் அவருக்கு திருப்புமுனை. அங்கிருந்து அவர் வாழ்க்கை மேலே உயரத் தொடங்கியது. பேஷன் ஷோ, மாடலிங் என்று அவர் வாழ்க்கை மாறியது.
2020-ம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ் 4’-ல் பங்கேற்றார். ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோருடன் போட்டியாளராக பிக் பாஸ் தமிழ் 4 வீட்டிற்குள் நுழைந்தார். இப்போது பிக் பாஸ் அல்டிமேட் வின்னர்.