கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று தமிழகம் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் வீட்டிற்கு சென்ற அஸ்வினை அவரது தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினர் கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அஸ்வின் கூறியதாவது…
இரவு தூங்கும்போது கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட்களை வீழ்த்தியது, ரன்கள் அடித்தது போன்ற விஷயங்கள் ஞாபகத்துக்கு வரும்; ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அப்படி ஒன்று ஞாபகம் வரவில்லை.. அதுவே ஒரு தெளிவான அறிகுறி; நாம் இனி அடுத்த பாதைக்கு செல்ல வேண்டும் என்பது. ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.
சென்னையில் இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும்; சும்மா இருப்பது கடினம்தான். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். அடுத்த பயணத்தை இனிதாக தொடங்க வேண்டும்.
இவ்வாறு அஸ்வின் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின், வாழ்த்து
முன்னதாக அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நன்றி அஸ்வின். உங்களின் அசாத்தியமான விளையாட்டு பயணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற கொண்டாட்டங்களுக்கான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் எல்லைகளை கடந்து லட்சக்கணக்கானோரை கனவு காண தூண்டியிருக்கிறது. வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், “அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டில் உங்களது அணுகுமுறையை எண்ணி நான் எப்போதும் மெச்சியது உண்டு. கேரம் பால் டெலிவரியை திறம்பட வீசுவதில் தொடங்கி அணிக்கு தேவையான முக்கிய ரன்களை உங்களது பங்களிப்பை வழங்குவது வரையில் எப்போதும் வெற்றிக்கான வழியை தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய வீரர் என்ற நிலையில் இருந்து மேட்ச் வின்னர் வரை என கிரிக்கெட் களத்தில் உங்களது வளர்ச்சியை கண்டது அருமையான அனுபவம். அஞ்சாமல் நீங்கள் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகளும், பரிணாமங்களும் மகத்தானது. உங்களது இரண்டாவது இன்னிங்ஸிற்கு எனது வாழ்த்துகள்” என்று அஸ்வினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.