தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சனை, இன்று பூதாகரமாக வெடித்திருக்கிறது. அது திரைப்படங்களின் விழாக்களுக்கு படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின்களே வராமல் அடம் பிடிப்பதுதான்.
ஒவ்வொரு கட்டத்திலும் இவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுவதுண்டு. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் தானாகவே அந்த குரல் அடங்கி விடும். இப்போது மீண்டும் அதே குரல் எழுந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த, எமக்குத் தொழில் ரொமான்ஸ் பட விழாவில் படத்தின் நாயகன் அசோக் செல்வன், நாயகி அவந்திகா இருவருமே கலந்து கொள்ளவில்லை. படத்தை இயக்கியவர் பாலாஜி கேசவன். இந்த விழாக்களில் கலந்து கொண்ட இயக்குனர் திருமலை, கே.ராஜன் போன்றவர்கள் அசோக் செல்வனை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்கள். தயாரிப்பாளர்கள் என்ன அடிமைகளா என்று கேட்டு கொந்தளித்தார்கள். இதற்கு பதிலாக அசோக் செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் உண்மை சிங்கம் போன்றது என்று பதிவிட்டிருந்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டார்.
தயாரிப்பு தரப்பில் அசோக் செல்வனிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், சொன்னபடி சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது இதனால்தான் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல வேறு காரணம் இருக்கிறது என்று ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் சர்ச்சை வெடித்தது. வேலாயுதம் என்பவர் தயாரித்து ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கிய நாற்கரப்போர் என்ற படத்தின் விழா நடந்தது. அதில் நாயகி அபர்ணதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், இதன் விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, படத்தில் எல்லா அம்சங்களும் சிறப்பாக இருக்கிறது. என்ன வருத்தம் என்றால் படத்தில் நாயகி அபர்ணதி இந்த விழாவுக்கு வரவில்லை. நடிகைகள் ப்ரோமோஷனுக்கு வரமாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வருகிறது, இது ஒரு சாபக்கேடாக மாறி விட்டது. அபர்ணதியை இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தபோது அதற்கு தனியாக பணம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நானே அபர்ணதியிடம் பேசினேன் அவர் 3 லட்சம் ரூபாய் கேட்டார். அதோடு மேடையில் தன் அருகில் யார் யார் அமர வேண்டும் என்பதையும் நிபந்தனையாக போட்டார். அதை சொன்னால் பிரச்சனையாகி விடும். ஆனால் 2 நாட்கள் கழித்து அவரே போன் செய்து ஸாரி சார் நான் தெரியாமல் பேசிவிட்டேன். நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றார். ஆனால் இன்று வரவில்லை. இது மாதிரியான நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை. தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை என்று கடுமையாக பேசினார்.
சுரேஷ் காமாட்சியின் இந்த பேச்சு திரையுலகில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள் சார்பில் புதிய படங்கள்தயாரிப்பதை நிறுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவுக்கு நடிகர்கள் சங்கம் எதிர் கருத்து எடுத்து வைத்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களின் புரோமோஷனுக்கு நடிகர் நடிகைகள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற குரலும் எழ ஆரம்பித்திருக்கிறது. பல விதிமுறைகளுக்கிடையே தாங்கள் நடித்த படங்களின் நிகழ்ச்சிக்கு வராத நடிகைகள், நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதியையும் சேர்க்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வராத நட்சத்திரங்கள் மீது நடவடிக்கை பாயுமா ? என்ற கேள்வி மீண்டும் வலுவாக எழுந்திருக்கிறது.
இது பெரிய நடிகைகளை மட்டும் யாரும் இதுபோல் பேசுவதில்லை என்கிறார்கள். நயன் தாரா தான் நடிக்கும் எந்த பட நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டார். இதை படம் தொடங்கும்போதே சொல்லி விடுவார். ஆனால் அவரை யாரும் எதுவும் கேட்பதில்லை. சிறிய நடிகைகளைத்தான் கடுமையாக பேசுகிறார்கள் என்ற வாதம் வைக்கிறார்கள்.
ஆனால் ஒரு முறை நடிகை நயன் தாரா பேசும்போது, மேடையில் நடிகைகளை ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்துகிறார்கள். மரியாதை கொடுப்பதில்லை. பின் வரிசையில் அமர வைக்கிறார்கள். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்தை அப்போது பல நடிகைகள் வரவேற்று பேசியிருந்தார்கள்.