No menu items!

அண்ணாமலை Effect – மாற்றப்பட்ட IPS – மிஸ் ரகசியா

அண்ணாமலை Effect – மாற்றப்பட்ட IPS – மிஸ் ரகசியா

கொரோனா காலத்தை நினைவுபடுத்துவதைப் போல முகக்கவசம் அணிந்து ஆபீசுக்குள் என்ட்ரியானாள் ரகசியா.

“கொரோனாவை பார்த்து இன்னும் பயப்படறியா? முகக்கவசம் எல்லாம் போட்டிருக்கியே.”

“இது கொரோனாவுக்கு பயந்து இல்லை. நிஃபா வைரஸுக்கு பயந்து. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்துக்குள்ள நிஃபா வைரஸ் திரும்பவும் நுழைஞ்சிருக்கு. அதனால அங்க ஏகப்பட்ட களேபரம். பக்கத்து மாநிலத்துக்கு வந்த நிஃபா வைரஸ், நம்ம மாநிலத்துக்கு வர எவ்வளவு நேரமாகும்? அதான் முன்கூட்டியே முகக்கவசம் அணியத் தொடங்கிட்டேன்”

“இந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரஹ்மான் கான்சர்ட்ல எடுத்திருக்கலாம்..இத்தனை பிரச்சினை வந்திருக்காது…சரி, டெல்லில அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் சந்திச்சு கை கொடுத்திருக்கிறாரே?”

“ஆமாம். முதல்வர் ஸ்டாலினுக்கு அதுல ரொம்ப ஹேப்பி. ஜி 20 மாநாட்டுல கலந்துக்கலாமானு ரொம்ப யோசிச்சிருக்கிறாரு. உலக அளவுல முக்கியமான நிகழ்ச்சி நிச்சயம் கலந்துக்குங்கனு ஆலோசனை சொல்லியிருக்காங்க. முதல்வரை அமெரிக்க அதிபருக்கு அறிமுகப்படுத்தி வச்சிருக்கிறார் பிரதமர். நிகழ்ச்சி முடிந்ததும், மற்ற திமுக தலைவர்கள்கிட்ட பேசும்போது, ‘பரவாயில்லை மோடி, அமெரிக்க பிரசிடெண்ட்கிட்ட அறிமுகப்படுத்தினாரு’னு சந்தோஷமா சொன்னாராம்”

“ஜோ பைடன் கிட்ட அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே முதல்வர் ஸ்டாலின்னு சொல்றாங்களே?”

“இல்லை. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையெல்லாம் கூட இண்டரடியுஸ் பண்ணார் பிரதமர். இந்த நிகழ்ச்சில முதல்வருக்கு இன்னொரு ஷாக், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தானா வந்து முதல்வர்கிட்ட பேசிக்கிட்டு இருந்திருக்காங்க. இந்த சம்பவங்களையெல்லாம் காங்கிரஸ்காரங்க ஈசியா எடுத்துக்கல. பாஜககிட்ட திமுக சாஃப்ட்டா போகுது. திமுக மட்டுமில்ல, இந்த நிகழ்ச்சில மமதா பானர்ஜி, நிதிஷ் குமார்லாம் கூட கலந்துக்கிட்டாங்க. இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு முணுமுணுக்கிறாங்க”

“சனாதனம் ஒழிப்புதான் முக்கியம் ஆட்சி முக்கியமல்லனுலாம் பேசிக்கிட்டு இருக்கே திமுக. அப்புறம் எப்படி பாஜககிட்ட சாஃப்ட்டா இருக்குனு சொல்ல முடியும்?”

“நல்ல கேள்விதான். இந்த சனாதனப் பேச்சே கூட்டணியை உடைக்கிறதுக்கும் பலவீனமாக்குறதுக்கும் திமுக பேசுதுனு ஒரு கருத்து காங்கிரஸ்ல இருக்கு”

“அதுல என்ன திமுகவுக்கு லாபம்?”

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சனாதன ஒழிப்பு பத்தி பேசுறது பாஜக எதிர்ப்பை காட்டுறதுக்கு. இது திமுகவுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கும். ஆனா வட இந்தியாவுல இந்து மதத்தை இழிவுப்படுத்துற திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணினு பாஜக பிரச்சாரம் பண்ணி காங்கிரசை காலி பண்ணிடும், அதுக்குதான் திமுக முயற்சிக்குது. ஓவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகள் மட்டும் ஜெயிச்சா போதும் காங்கிரஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்காம மத்தியில ஆட்சி அமைக்கலாம்னு திமுகவும் அந்தக் கூட்டணில இருக்கிற மற்ற மாநிலக் கட்சிகளும் திட்டம் போடுறதா டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பேசிக்கிறாங்க”

”பயங்கரமான திட்டமா இருக்கே. இப்படி கழுத்தை சுத்தி மூக்கை தொடுற திட்டத்தையெல்லாம் போடுவாங்களா?”

”அரசியல்ல எல்லா திட்டமும் போடப்படும்” என்று சிரித்தாள் ரகசியா.

”நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைக்கும் தேர்தல் வருமா? வராதா?”

”சட்டமன்றத்தையும் கலைச்சு தேர்தல் நடத்துவாங்கன்னு திமுக தலைவர்கள் நம்பறாங்க. அதனாலதான் உதயநிதி எல்லா மாவட்டத்துக்கும் சுற்றுப் பயணம் போய்க்கிட்டு இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலோட சேர்த்து சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தா அதை சந்திக்க தேவையான நடவடிக்கைகளை திமுக எடுக்கத் தொடங்கி இருக்கு. இந்த விஷயத்துல கூட்டணி கட்சிகள்தான் கொஞ்சம் தயக்கத்துல இருக்காங்க. இரண்டு தேர்தலும் ஒண்ணா நடந்தா, நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட் ஒதுக்காம, சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் சீட் ஒதுக்கிடுவாங்களோங்கிறது அவங்களோட பயம்.”

“திமுக நம்பிக்கையோடு இருக்கா?”

“குடும்பத் தலைவிகளுக்கு மாசம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் திமுகவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும்னு முதல்வர் ஸ்டாலின் உறுதியா நம்பறாரு. ஒரு பக்கம் திட்டங்களால வாக்குகள் கிடைக்கும்னு நம்புற அவர், இன்னொரு பக்கம் உள்கட்சி மோதல்களால வாக்குகள் சிதறுமோன்னு பயப்படவும் செய்யறாரு.”

“முதல்வர் பயப்படற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு?”

“மாவட்ட செயலாளர்கள் மேல அடிப்படை தொண்டர்கள் அதிருப்தியா இருக்கறதா அவர் நினைக்கறார். ‘முன்னல்லாம் அண்ணா அறிவாலயத்துக்கு வந்துதான் மாவட்ட செயலாளர்கள் மேல கட்சிக்காரங்க புகார் சொல்வாங்க. ஆனா இப்ப கட்சிக்காரங்க நான் வீட்ல இருக்கற நேரத்தை தெரிஞ்சுட்டு வீட்டுக்கே வந்து மாவட்ட செயலாளர்கள் மேல புகார் சொல்லிட்டு இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு எல்லா மாவட்டத்துலயும் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கு. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்ன இதையெல்லாம் பேசி சரிசெய்யணும். இல்லன்னா அதோட விளைவு தேர்தல்ல கடுமையா இருக்கும்’னு துரைமுருகன்கிட்ட முதல்வர் சொல்லி இருக்காராம். கட்சியை மறுசீரமைக்க முதல் கட்டமா கட்சி அளவுல மாவட்டங்களை பிரிக்க தயாராகிட்டு இருக்கார் முதல்வர்.”

“அதிமுகலயும் கட்சி அளவுல மாவட்டங்களை பிரிக்கப் போறதா சொல்லிட்டு இருந்தாங்களே?”

“அப்படி ஒரு யோசனை எடப்பாடிக்கு இருந்தது உண்மைதான். ஆனா அந்த யோசனையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏத்துக்கலயாம். மாவட்ட செயலாளர்கள் இப்பத்தான் அதிகளவு பணம் செலவு செய்து மதுரை மாநாட்டுல கூட்டத்தை கூட்டி இருக்காங்க. இந்த நேரத்துல மாவட்டங்களைப் பிரிச்சு அவங்களோட அதிகாரத்தை குறைச்சா வருத்தப்படுவாங்கன்னு சொல்லி அந்த திட்டத்தை கைவிடச் சொல்லிட்டாராம். எடப்பாடியும் இப்போதைக்கு அதுக்கு ஒத்துக்கிட்டு தலையாட்டி இருக்காராம். எப்படியும் திமுகல மாவட்டங்களை பிரிச்ச பிறகு, அதிமுகல இருக்கற சில தலைவர்கள் இங்கயும் பிரிக்கணும்னு சொல்வாங்க. அப்ப மாவட்டங்களை பிரிச்சுக்கலாம்கிறது அவரோட யோசனையா இருக்கு.”

“கட்சி பிரச்சினைகளை கவனிக்க ஐவர் குழுவை அமைக்கறதாவும் அதிமுகல ஒரு பேச்சு இருந்துச்சே?”

“இப்படியும் ஒரு யோசனை எடப்பாடிக்கு இருந்திருக்கு. இதுபத்தி கே.பி.முனுசாமிகிட்ட அவர் ஆலோசனை நடத்தி இருக்காரு. அதுக்கு கே.பி.முனுசாமி, “கட்சியில இப்ப எந்த பிரச்சினையும் இல்லாம நல்லாத்தானே போயிட்டு இருக்கு. அப்புறம் எதுக்கு ஐவர் குழுவைக் கொண்டுவந்து புதுசா குழப்பத்தை ஏற்படுத்தணும்? ஐவர் குழுவை அமைச்சா அப்புறம் அவங்க வேற ஒரு கோஷ்டியை வச்சுட்டு பாலிடிக்ஸ் பண்ணுவாங்க அதனால ஐவர் குழுவை எல்லாம் அமைக்க வேண்டாம்’னு சொல்லிட்டாராம். அதனால அந்த யோசனையையும் எடப்பாடி தள்ளிப் போட்டிருக்காரு.”

“சென்னைல இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியல்ல மாத்தினதுக்கு பின்னால அரசியல் இருக்கிறதா சொல்றாங்களே அப்படியா?”

“மூணு ஐபிஎஸ் அதிகாரிகளை மாத்தி இன்னைக்கு உத்தரவு வந்திருக்கு. அதுல ரெண்டு பேர் மேல பிரச்சினைகள் இருக்கு. பள்ளிக்கரணை டி.சி தீபா சத்யனை கட்டாய காத்திருப்போர் பட்டியல்ல வச்சிட்டாங்க. காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான காவல்துறை ஏற்பாடுகளை சரியா பண்ணலனு. சிஎம் காருக்கே வழி கிடைக்காம எதிர் திசைல ஓட்ட வேண்டியதாயிருச்சு. அதனால தீபா ஐபிஎஸ்ஸை வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சுட்டாங்க. சென்னை சட்டம் ஒழுங்கு ஜாயிண்ட் கமிஷனர் திஷா மிட்டலை வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சதுக்கு காரணம் பாஜக அண்ணாமலை”

“அண்ணாமலையா? அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்யவும் கோரி பாஜக தமிழ்நாடு முழுக்க நேத்து ஆர்ப்பாட்டம் நடத்துச்சு. இந்த ஆர்பாட்டத்துல கலந்துக்கிட்டவங்களை கைது செய்து திருமண மண்டபத்துக்கு கொண்டு போய் வச்சாங்க. ஆனா சென்னை வள்ளுவர் கோட்டத்துல நடந்த ஆர்பாட்டத்துல கலந்துக்கிட்ட அண்ணாமலையை கைது பண்ணல. அப்படியே விட்டுட்டாங்க. இது முதல்வருக்கு தெரிய வந்ததும் டென்ஷனாகியிருக்கிறார். கமிஷனரைக் கூப்ட்டு கேட்டிருக்கிறார். அண்ணாமலைக்கு மத்திய அரசு பாதுகாப்பு இருக்கு, அவ்வளவு ஈசியா கைது பண்ண முடியாதுனு சொல்லியிருக்கிறார். இதை முதல்வர் ஏத்துக்கல. ஏன் கைது பண்ணலனு ஆக்‌ஷன் எடுங்கனு உத்தரவு போட்டிருக்கிறார். அந்த உத்தரவோட பலன் தான் திஷா மிட்டலை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாத்துனது”

“முதல்வர் பொதுவா இப்படிலா நடவடிக்கை எடுக்க மாட்டாரே?”

“காவல்துறைல நிறைய பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் இருக்காங்க. அவங்களை ஓரம் கட்டணும்னு ரொம்ப நாளாகவே சிஎம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா இந்த முறை சொன்னவர் பவர்ஃபுல்லானவர்ன்றதுனால உடனே நடவடிக்கை”

“யார் அந்த பவஃபுல்லானவர்?”

“தெரியாத மாதிரி கேக்காதிங்க. தலைக்கு பத்துக் கோடி வச்சதை காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிற மாமனிதன் அவர். இப்பவாது புரிதா? என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...