திரையுலகைச் சேர்ந்தவர்கள் பிற துறைகளிலும் கால் பதிப்பது அந்த காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ள விஷயம். நடிகர் சூர்யா, பொள்ளாச்சி அருகே காற்றாலைகளை அமைத்துள்ளார். நகைச்சுவை நடிகரான சூரி, ஓட்டல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். நடிகை சினேகா பெண்களுக்கான பிரத்யேக துணிக்கடையை திறந்துள்ளார். அந்த வரிசையில் இப்போது இசையமைப்பாளர் அனிருத்தும் தொழிலதிபராகி இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் நம்பர் 1 இசையமைப்பாளர் அனிருத். ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் இளையராஜா எப்படி இருந்தாரோ, அதே அந்தஸ்தில் இப்போது அனிருத் இருக்கிறார். இன்றைய தேதிப்படி கோலிவுட்டில் தயாராகும் இந்தியன் 2 உள்ளிட்ட முன்னணி படங்கள் பலவற்றுக்கும் அனிருத்தான் இசையமைப்பாளராக இருக்கிறார். திரையுலகில் பரபரப்பாக இருக்கும் அதே நேரத்தில் பிசினஸ் உலகிலும் கால் பதித்திருக்கிறார் அனிருத்.
வி.எஸ்.மணி & கோ என்ற ஃபில்டர் காபி மற்றும் தென்னிந்திய ஸ்னேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக அனிருத் இணைந்திருக்கிறார். அவர் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மட்டுமின்றி விளம்பர தூதராகவும் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் ஏற்கெனவே சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறார் என்றபோதிலும், அவர் ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை.
2020-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட வி.எஸ்.மணி & கோ நிறுவனம் ஏற்கெனவே திரைப் பிரபலங்களான ராணா டகுபதி, ரண்பீர் கபூர், ஷோபிதா, திஷா படாணி உள்ளிட்ட பலரை தங்களின் பங்குதாரர்களாக சேர்த்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பல முன்னணி நகரங்களில் இப்போது இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும் தென்னிந்திய வாடிக்கையாளர்களை கவர இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் அனிருத் இந்நிறுவனத்தின் இணை இயக்குநராக இணைந்துள்ளார்.
வி.எஸ்.மணி & கோ நிறுவனத்தில் இணைந்திருப்பதைப் பற்றி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனிருத், “அப்புறம் என்ன? தரமான ஒரு கப் காபி சாப்பிடலாமா?” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.