No menu items!

ஆனந்த் அம்பானியின் ஆன்மிக பயணம்

ஆனந்த் அம்பானியின் ஆன்மிக பயணம்

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தன் குடும்ப நிறுவனங்களை கவனிச்சுட்டு வர்ற ஆனந்த் அம்பானி, அதோட நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாராங்கிற முகாமை அமைச்சிருக்கார். பிரதமர் மோடி சமீபத்தில் அங்கு வந்து அங்க இருக்கற வனவிலங்குகளை பார்த்து ரசிச்சிருக்கார். அப்ப எடுத்த புகைப்படங்களையும் தன்னோட சமூக வலைதள பக்கத்துல பகிர்ந்திருக்கார். போன வருஷம் பிரம்மாண்டமா நடந்த திருமணம் மூலமா ஒட்டுமொத்த மீடியாவோட கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் ஆனந்த் அம்பானி.

வர்ற 10-ம் தேதி ஆனந்த் அம்பானிக்கு 30 வயசு ஆகப் போகுது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு திரும்பவும் மீடியாக்களோட கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கார் ஆனந்த் அம்பானி. அவரோட பிறந்தநாளுக்கு ஏன் மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்கணும்னு கேட்கறீங்களா?

இந்த முறை மீடியாக்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் அதை கொண்டாட அவர் தேர்ந்தெடுத்திருக்கும் முறை. ஜாம் நகரில் இருக்கும் தன் வீட்டில் இருந்து 140 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் இறைவனை வழிபட திட்டமிட்டு இருக்கிறார் ஆனந்த் அம்பானி. அவர் நினைத்திருந்தால் ஒரு SUV காரில் புறப்பட்டுப் போய் ஒரு மணிநேரத்தில் சாமியைப் பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் தன் வீட்டில் இருந்து நடந்து போய் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு, நடைப்பயணத்தையும் தொடங்கியிருக்கிறார்.

ஒவ்வொரு நாள் இரவும் 10 முதல் 12 கிலோமீட்டர் தூரம்வரை நடந்து சென்று ஏப்ரல் 10-ம் தேதி துவாரகாவில் கடவுளை வழிபடுவது அவரது திட்டம். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் அம்பானி, “கடவுள் துவாரகாதீசர் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவரை நினைத்து எந்த காரியத்தை செய்தாலும் அது நிச்சயமாக எந்த தடையும் இன்றி நிறைவேறும். கடவுள் இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்.

துவாரகாவுக்கு நடைபயணம் மேற்கொள்ள இரவு நேரத்தை ஆனந்த் அம்பானி தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் போக்குவரத்து. ஆனந்த் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது. அதோடு உள்ளூர் போலீஸாரும் சேர்ந்து குறைந்தது 100 பேராவது அவரது பாதுகாப்புக்காக உடன் நடக்கிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இரவு நேரத்தை தேர்வு செய்து நடக்கிறார் ஆனந்த் அம்பானி.

ஹனுமன் சாலிசாவை உச்சரித்துக்கொண்டே செல்லும் ஆனந்த் அம்பானியின் பாதயாத்திரையில் சுவாரஸ்யமான சம்பவங்கள் பலவும் நடப்பதால் வட இந்திய மீடியாக்களும் அவருடன் சேர்ந்து நடக்கின்றன. அதனால் அதைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வட இந்திய மீடியாக்களில் பார்க்க முடிகிறது. இதில் சுவாரஸ்யான விஷயங்களில் ஒன்று இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்ட கோழிகளுக்கு ஆனந்த் அம்பானி விடுதலை வாங்கிக் கொடுத்தது.

ஆனந்த் அம்பானியின் நேற்றைய பயணத்தின்போது, ஒரு வேனில் சுமார் 250 கோழிகளை அடைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறார். உடனே வேனை நிறுத்திய ஆனந்த், கோழிகளைப் பற்றி விசாரித்திருக்கிறார். அவை இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக ஓட்டுநர் ஆனந்த் அம்பானியிடம் சொல்லியிருக்கிறார். உடனே அவர் மனது இளகியிருக்கிறார். அந்த கோழிகளை இரட்டிப்பு விலை கொடுத்து வாங்கிய ஆனந்த் அம்பானி, அவற்றை கூண்டுகளில் இருந்து வெளியே எடுத்து விட்டிருக்கிறார்.

உடனே ஆனந்த் அம்பானியின் இளகிய மனம் குறித்து வடநாட்டு மீடியாக்கள் உருகி வருகின்றன. ஆனால் கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, “ஆனந்த் அம்பானி வெளியில் விட்டிருப்பது லகான் கோழிகளை. அவற்றால் சுதந்திரமாக வாழ முடியாது. பண்ணைகளில் உரிமையாளர்கள் பராமரிப்பில் மட்டுமே அவை உயிர்வாழும். வெளியில் விட்ட கோழிகள் ஒரே நாளில் தானாகவே இறந்துவிடும்” என்கிறார்.

இன்னொரு தரப்பினர் ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு முகாமில் உள்ள விலங்குகளின் பசியாற்ற தினமும் நூற்றுக்கணக்கான கோழிகள், ஆடுகள், பன்றிகள் பலியாகின்றன. அப்போது ஆனந்த் அம்பானியின் இரக்க குணம் எங்கே போனது என்று கேள்வி கேட்கிறார்கள்.

ஆனாலும் வட இந்திய மீடியாக்கள் ஆனந்த் அம்பானியின் நடைப்பயண பெருமைகளைப் பாடியபடி இருக்கின்றன. ஏப்ரல் 10-ம் தேதிவரை இனி என்னென்ன கூத்தெல்லாம் பார்க்கப் போறோமோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...