”என்ன உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸை மாத்திட்டாங்க? கார்ப்பரேஷன் கமிஷனர் பதவிலருந்து ராதாகிருஷ்ணனை தூக்கிட்டாங்க..என்ன நடக்குது?” என்று உள்ளே வந்த ரகசியாவிடம் கேட்டோம்.
”அமுதா உள்துறை அமைச்சரான பிறகு நிறைய பிரச்சினைகள். கள்ளச்சாராய சாவுகள், ஆம்ஸ்ட்ராங் கொலை, போதைப் பொருட்கள் விற்பனைனு முதல்வருக்கு போனதெல்லாம் கெட்ட செய்திகள்தான். அதுனால அவரை மாத்திட்டாங்கனு ஒரு க்ரூப் சொல்லுது. இன்னொரு குரூப், அப்படிலாம் இல்லை அவரை பேரிடர் மேலாண்மை துறை தலைவரா போட்டிருக்காங்க. இனி வரப் போவது மழைக்காலம். மழை வெள்ளத்தை சமாளிக்கிறதுக்காக அமுதாவை அங்க மாத்தியிருக்காங்கனு இன்னொரு குரூப் சொல்லுது. இனிமதான் தெரியும் நிஜ காரணம்”
”அப்போ முதல்வர் இன்னும் அப்செட் மூட்லதான் இருக்காரா?காவல்துறை அதிகாரிகளை மாத்துனார்…இப்போ ஐஏஎஸ் அதிகாரிகள்…”
”அப்படி இல்லை. விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி அவருக்கு சூப்பர் மகிழ்ச்சியைக் கொடுத்துருக்கு”
“அதனாலதான் அவரே தன் கையால எல்லாருக்கும் இனிப்பு கொடுத்தாரா?”
“ஆமாம். கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு மற்றும் பாமகவின் தீவிர பிரச்சாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல திமுகவை பாதிக்குமோன்னு பயந்திருந்தார் முதல்வர். ஆனால் பொன்முடி ஆரம்பத்துல இருந்தே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்னு முதல்வருக்கு நம்பிக்கை கொடுத்துட்டு இருந்தார். வாக்கு எண்ணிக்கை நடந்தப்ப ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்வர் தேர்தல் நிலவரத்தைக் கேட்டுட்டு இருந்தார். ஒரு கட்டத்தில் வேட்பாளரை தொடர்பு கொண்டு பேசின முதல்வர், ‘என்ன ராஜேஷ் ஜெயிச்சாச்சு தானே?’ன்னு கேட்டிருக்கார். அவர் லீடிங் அதிகமாயிட்டே போறதா சொன்ன பிறகுதான் மகிழ்ச்சியாகி எல்லாருக்கும் இனிப்பு கொடுத்திருக்கார்.”
“ஆனா இந்த தேர்தல் முடிவு மாம்பழத்தைக் கசக்க வச்சிருக்கே?”
“அதிமுக தேர்தலை புறக்கணிச்சதால அவங்களோட ஓட்டுகள் பாமகவுக்கு கிடைக்கும்னு ராமதாஸ் நினைச்சிருக்கார். ஆனா அப்படி கிடைக்காம, அந்த ஓட்டுகள் திமுகவுக்கு போனதுல அவர் கொஞ்சம் அப்செட். பாஜகவோட பாமக கூட்டணி வச்சதுதான் அதுக்கு காரணம்னு அவர் நினைக்கிறார். அதனால சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக பக்கம் போயிடலாமான்னு யோசிக்க தொடங்கி இருக்கார்.”
“அப்படின்னா சட்டமன்ற தேர்தல்ல எடப்பாடியோட கை வலுவாகிடும்னு சொல்லு.”
“அப்படித்தான் எடப்பாடியும் கட்சியை ஒருங்கிணைக்கணும்னு சொல்லி தன்கிட்ட தர்ற தலைவர்கள்கிட்ட சொல்லிட்டு இருக்கார். ‘நான் எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ இல்லைங்கிறது எனக்குத் தெரியும். அதே சமயம் கட்சித் தொண்டர்கள் என்னை நம்பறாங்க. இது உங்களுக்கும் தெரியும்னு நம்பறேன். சட்டமன்றத் தேர்தல்ல நாம வலுவான கூட்டணி அமைப்போம். திருமாவளவன்கிட்டயும் பேசலாம். ராமதாஸ் தற்சமயம் பேச ஆரம்பிச்சிருக்கார். அவரை விட்டுப் பிடிக்கலாம்னு காத்திருக்கிறேன். விஜய், சீமான்லாம்கூட நம்ம அணிக்கு வருவாங்க. நம்ம கூட்டணி வலுவாயிடும்’னு எடப்பாடி பேச ஆரம்பிச்சிருக்கார்.”
“அவங்களாம் வருவாங்களா?”
“கஷ்டம். இதுக்கு நடுவுல இன்னொரு முக்கியமான நியூஸ் இருக்கு. எடப்பாடியிடம் அமித்ஷா தூதர் பேசினதா ஒரு தகவல் இருக்கு. பாஜக கூட்டணி பத்தி யோசிச்சுப் பாருங்கனு அமித்ஷா சொன்னாராம்.”
“ஆச்சர்யமா இருக்கே. ஈபிஎஸ் என்ன சொன்னாராம்”
“அமித்ஷா தூதர் பேசுனதுல எடப்பாடிக்கு மகிழ்ச்சிதான். ஆனா பாஜக கூட இருந்த மத்த கட்சிலாம் கூட்டணிக்கு வர மாட்டாங்களேனு கவலை இருக்கு. பாஜக எதிர்ப்பை வச்சிதான் திமுக கூட்டணி வாக்கு வாங்குதுனு எடப்பாடிக்கு தெரியுது. அதனால என்ன செய்யறதுனு யோசிக்கிறார்”
“அதிமுகவை ஒன்றிணைக்க தென்காசியில் இருந்து நாளைமுதல் தான் சுற்றுப்பயணம் போகப் போறதா சசிகலா சொல்லிட்டு இருக்காரே?”
“அதையும் எடப்பாடி கவனிக்காம இல்லை. சசிகலா சுற்றுப்பயணம் போனா, அதுக்கு போட்டியா தானும் ஒரு சுற்றுப்பயணம் செய்ய அவர் ஏற்பாடு செஞ்சுட்டு இருக்கார். சசிகலாவைப் பொறுத்தவரை தன்னோட சொத்துகளை பாதுகாத்துக்கதான் அவர் அரசியல்ல தீவிரமா ஆர்வம் காட்டறார்னு எடப்பாடி நினைக்கிறார்.”
“திருமாவளவன் சமீபத்துல முதல்வரை சந்திச்சிருக்காரே… என்ன விஷயம்?”
“சில காலமாவே முதல்வருக்கு திருமாவளவன் மேல அதிருப்தி இருக்கு. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு திருமாவளவன் சொன்ன சில வார்த்தைகள் அவரை காயப்படுத்தி இருக்கு. அதனால அவர்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்கச் சொல்லி அமைச்சர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவு போட்டிருக்கார். அதனால முதல்வர்கிட்ட தன்னிலை விளக்கம் கொடுக்கத்தான் திருமா அவரை சந்திச்சாராம்?”
“சந்திப்புல ஏதாவது விசேஷம் இருக்கா?’’
”திருமாவைப் பார்த்த முதல்வர், ‘இந்த கூட்டணி உங்களுக்கு பிடிக்கலையா? என்ன பிரச்சினை’ன்னு கேட்டிருக்கார். அதுக்கு திருமா அப்படியெல்லாம் இல்லை நான் கூட்டணியை விட்டு போக மாட்டேன். அதை சொல்றதுக்குதான் இங்க வந்தேன்’ன்னு சொல்லி சமாளிச்சிருக்கார். ஆனா இன்னும் முதல்வருக்கு திருமா மேல ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்யுது.”
“முதல்வரோட வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி தொடங்குமா?.”
“இந்த மாதம் 22 அல்லது 27-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கிறார். சுதந்திர தினத்துக்கு முன்பு திரும்ப திட்டம். பொறுப்புகளை உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கறது கிட்டத்தட்ட உறுதியாகிடுச்சு.”
“விஜய் கட்சியோட மாநாடெல்லாம் எந்த அளவுல இருக்கு?”
“ஒண்ணுல்ல. விஜய் 4 மாநாடுகளை நடத்த திட்டமிடறாராம். இதுபத்தி மூத்த நிர்வாகிகள்கிட்ட பேசின விஜய், ‘ நாம் சமூக வலைதளத்தில் கட்சியை வளர்க்க முடியாது. மக்களை சந்திக்கணும். அதனால 4 மாநாடுகளை நடத்துவோம்’ன்னு சொல்லி இருக்கார்.
“எங்கெல்லாம் நடத்தப் போறாராம்?”
“முதல்ல ஒரு நடைப்பயணம். அதுக்கப்புறம் மாநாடு. மதுரை இல்லாட்டி தூத்துக்குடில முதல் மாநாட்டை வச்சுக்கணும்னு நினைக்கிறார். பல அரசியல் கட்சிகள் முக்கியமா எம்.ஜி.ஆர். மதுரைலதான் முதல் மாநாட்டை நடத்திருக்கார், மதுரை ராசியான ஊர்னு விஜய்கிட்ட சொல்லியிருக்காங்க. ஆனா விஜய் தூத்துக்குடியை முக்கியமா நினைக்கிறாராம்.”
“தூத்துக்குடில என்ன விசேஷம்?”
“துப்பாக்கிச் சூடு நடந்த இடம். அவர் படம் பேரும் துப்பாக்கில அதனால இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.