கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் முறித்துக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இரு நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஹனிப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலாவதியான காரணத்தால் அவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் நாடு திரும்புகின்றனர். மறுபக்கம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது பாகிஸ்தான் ராணுவம். இந்த நிலையில் அமெரிக்கா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
“இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண அமெரிக்கா ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்” என அமெரிக்க அரசு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் பஹல்காம் தாக்குதலை கண்டித்திருந்தனர். மேலும், இந்தியாவுக்கு தங்களது ஆதரவை வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தீவிரவாதத்தை அழிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் தடையாக இருக்காது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது முக்கிய காரணம் என தகவல்.
காஷ்மீர் பகுதியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு தரப்பும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அவர்களது கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
“எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டை இந்தியா நீண்டகாலமாக கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இந்த பிரச்சினை சார்ந்து பல்வேறு காலகட்டங்களில் பேசியது உண்டு. அதை வைத்து பார்க்கும் போது அமெரிக்கா இதில் அமைதி காக்கும் என நம்புகிறேன்” என அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி கூறியுள்ளார்.