முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12-ம் தேதிதான் திருமணம். ஆனால் அதற்குள்ளேயே திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி என்ற பெயரில் 2 நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டார்கள். செய்தித் தாள்கள் மற்றும் சமூகவலைதளங்களில் இந்த நிகழ்ச்சிகளின் படங்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது அந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியோ அல்லது படங்களில் உள்ள விஐபிக்களைப் பற்றிய செய்தியோ அல்ல… அந்த படங்களை எடுத்தவரைப் பற்றிய செய்தி..
சமீபத்தில் சொகுசுக் கப்பலில் நட்த்தப்பட்ட ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளை படமெடுக்க முகேஷ் அம்பானியால் நியமிக்கப்பட்ட நபர் ஜோசப் ராதிக் (Joseph Radhik). இந்த திருமண நிகழ்ச்சிகளை படம்பிடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?… நாளொன்றுக்கு 1.5 லட்சம் ரூபாய்.
இது சம்பளம் மட்டும்தான். இதைத்தவிர அந்த சம்பள தொகைக்கான வரி, இந்தியாவில் இருந்து சொகுசுக் கப்பலுக்கு அவர் சென்று திரும்பியதற்கான செலவு, உதவியாளர்களுக்கான சம்பளம் மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றையும் தனியே கொடுத்திருக்கிறார் அம்பானி.
முகேஷ் அம்பானி இந்த அளவுக்கு கொண்டாடும் புகைப்படக் கலைஞர் யார் என்று தெரிந்துகொள்வோம்…
1983-ம் ஆண்டு பிறந்தவர் ஜோசப் ராதிக். பொறியியல் பட்டதாரியான அவர், 2001-ம் ஆண்டில்தான் முதல் முறையாக தன் டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் படங்களை எடுத்துக்கொண்டே இஞ்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். படிப்பை முடித்து கார்ப்பரேட் நிறுவனத்தில் இணைந்த ஜோசப், பற்பசைகளை விற்பது முதல் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். ஒரு கட்ட்த்தில் அதெல்லாம் பிடிக்காமல் போக, தன் மனதுக்கு பிடித்த ஃபோட்டோகிராபி துறையில் இறங்கியிருக்கிறார்.
திருமணங்களை படமெடுப்பதில் நிபுணராக பெயர் பெற்றுள்ள ஜோசப் ராதிக், 2015-ம் ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்த புகைப்பட போட்டோகிராபருக்கான விருதைப் பெற்றிருக்கிறார். விராட் கோலி, காத்ரினா கைஃப், சித்தார்த் மல்ஹோத்ரா, கே.எல்.ராகுல் என பல பிரபலங்களின் திருமணங்களை படம் எடுத்துள்ளார். அதனாலேயே பாலிவுட்டில் இப்போதெல்லாம் திருமணத்துக்கு தேதி குறிக்கும் முன் அந்த நாளில் ஜோசப் ராதிக் ஃப்ரீயாக இருக்கிறாரா என்பதை செய்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் அங்கு பிரபலம்.
இந்த அளவுக்கு புகழ்பெற்ற புகைப்பட நிபுணராக இருப்பதால்தான் கேட்ட பணத்தை கொடுத்து இவரை அம்பானி கொத்திக்கொண்டு போயிருக்கிறார். அம்பானி வீட்டு கல்யாணத்தை வைத்தே மும்பையில் அவர் ஒரு ப்ளாட் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.