No menu items!

அதானிக்கு சிக்கல் மேல் சிக்கல்!– ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா

அதானிக்கு சிக்கல் மேல் சிக்கல்!– ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா

அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது. அதானி நிறுனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ 25 ஆயிரம் கோடி முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்தத்தை ரத்து செய்த கென்யா

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்துசெய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம்தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் கென்யா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அந்நாட்டு நிறுவனத்திற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிபர் ரூட்டோ நிகழ்த்திய தேசிய உரையில், ”விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளேன். மேலும், மின்சார விநியோகம் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பங்குகள் தொடர் சரிவு

அமெரிக்காவில் எழுந்துள்ள குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்குகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சரிந்து வருகின்றன அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் 7% வீழ்ச்சியடைந்து 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.2,030 க்கு சரிவடைந்தது. அதேபோல், அதானி போர்ட்ஸ் பங்குகளும் 5.3% சரிவடைந்து ரூ.1,055.40 க்கு குறைந்தது. அதானி பவர், அதானி எரிஜ் சொல்யூஷன்ஸ், அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் உள்ளிட்ட மற்ற அதானி குழும நிறுவனங்களின் பங்குகளும் 2.6% முதல் 5% வரை வீழ்ச்சியடைந்தன. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 11% வீழ்ச்சியடைந்து ரூ.1,020.85 க்கு வீழ்ச்சியடைந்தது. அதே நேரத்தில், ஏ.சி.சி லிமிடெட் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் லேசான உயர்வுடன் நிலையாக வர்த்தகமாகின,

தமிழக அரசு மறுப்பு

அதானி நிறுவனம் தமிழகத்தில் சூரிய சக்தி மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்ரச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அந்நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு என ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன். தமிழ்நாடு மின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய மின்சார துறையோடு இருக்கும் அமைப்புகளோடு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அந்த நிறுவனத்துடன்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு செய்துள்ளது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் இது மத்திய அரசு நிறுவனம். அந்த நிறுவனங்கள்தான் யாரெல்லாம் உற்பத்தி செய்கிறார்களோ, அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வர். அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களிடம் என்ன தேவை என்பதைக் கேட்டு விலை இறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு தான் அந்தந்த மாநில அரசுகளோடு மத்திய அரசு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும். அப்படிதான் அந்நிறுவனத்தோடு மிக குறைந்த விலையில் மிக குறைந்த விலையில் ரூ.2.61-க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே அதிமுக ஆட்சியில் ரூ.7.01-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மத்திய அரசின் எரிசக்தி துறையின் அங்கம். அதில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் தகவல்களை பதிவிடுபவர்கள் இதை தெளிவுபடுத்திக் கொண்டு பதிவிடவேண்டும். என்னிடமோ அல்லது மின் துறை அதிகாரிகளிடடோ கேட்டால் தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...