ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்போம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீப காலமாக திமுக – விசிக இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த அவர், ““நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதே அரசியல் முதிர்ச்சி” என்று கூறியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் அளித்த மற்றோரு பேட்டியில், “வட மாவட்டங்களில் விசிக உதவி இல்லாமல் திமுகவால் வெற்றிபெற முடியாது’ என்று கூறியிருந்தார். இதுவும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, “கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கைப் புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவனின் ஒப்புதலுடன் அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்க மாட்டார் என்பது என் எண்ணம்” என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளை விசிகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான ரவிக்குமார், வன்னி அரசு ஆகியோர் கண்டித்தபோதிலும், அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் இது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இப்பிரச்சினை தொடர்பாக பேசினார்.
அப்போது திருமாவளவன் கூறியதாவது:
திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே எந்தச் சலசலப்பும் இல்லை. எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை.
என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்து விட்டது. அதனால் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழுதாது; எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.
ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுப்போம். உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி உள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்துபேசி அதுதொடர்பான முடிவுகளை எடுப்போம்.