பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் படமொன்று உருவாகிறது. பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படும் இப்படத்தில் பிரதமர் மோடியாக உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உன்னி முகுந்தன் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடியாக நடிக்கவிருப்பது குறித்து பேசியிருக்கிறார். அதில், “இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களாக ‘மா வந்தே’ படத்தில் நடிப்பது எனக்கு பெருமை.
அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் அல்ல. பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மோடியின் அரசியல் வாழ்வுக்கு அப்பாற்றப்பட்டு குஜராத்தில் ஆரம்பித்த அவரது பயணம் இந்தியாவை செதுக்கும் நபராக அவர் எவ்வாறு மாறினார் என்பதையும் காட்ட இருக்கிறது. மோடிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் ‘மா வந்தே’ (அம்மா நான் உன்னை வணங்குகிறேன்) எனப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மையக் கருவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது படக்குழு.